சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து அதிகமாக இருக்கும் பீக் அவர்ஸில் அதாவது காலை 8 மணி  முதல் 11 மணிவரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆலந்தூர்-கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டது. தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கிவருகிறது. சென்னை விம்கோ நகரிலிருந்து அண்ணாசாலை வழியாக விமான  நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையும், கோயம்பேடு வழியாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க தற்போது 3 முறைகள் உள்ளன. கவுன்ட்டர் டிக்கெட் முறை, பயண அட்டை முறை மற்றும் QR கோட் முறை. இதில்  QR கோட் மற்றும் பயண அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு 20 சதவிகிதம் வரை கட்டணச்  சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் QR கோட் மற்றும் மெட்ரோ பயண அட்டைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.  

மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கவுண்டரில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்க்க புதுபுது திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி மே 17 புதன்கிழமை அதாவது இன்று முதல் இருந்த இடத்திலேயே மெட்ரோ டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் புக் செய்ய புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நேஷனல் காமன் மொபிலிட்டி  கார்டுகளை(NCMC) அறிமுகப்படுத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(CMRL) வாட்ஸ் அப் அடிப்படையிலான இ-டிக்கெட்டுகளை  வழங்குகிறது.

முதலில் +918300086000 என்ற எண்ணிற்கு ஹாய்(Hi) என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு (chat bot) என்று வரும் இதில் டிக்கெட் எடுக்கும் அம்சத்தைப் பயணிகள் க்ளிக் செய்து தாங்கள் புறப்படும் ரயில் நிலையத்தின் பெயர் மற்றும் அடையும் ரயில் நிலையத்தின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை வாட்ஸ் அப், ஜிபே, யு பே மூலம் செலுத்தி  டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.   பின்னர் ரயில் நிலையத்தில் உள்ள QR ஸ்கேனில் காண்பித்து பயணத்தைத் தொடங்கலாம். வெளியே செல்லும் போது QR ஸ்கேனில் காண்பித்து ரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்லலாம்.

மெட்ரோ ரயில்

இந்த வாட்ஸ் அப் அடிப்படையிலான இ- டிக்கெட்டுகள் ஒரு முறை பயணம் செய்பவர்கள், ரயில் அல்லது விமானத்தைப் பிடிக்கச் செல்பவர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கத் தேவை இல்லை. வழக்கமான பயணிகள் கூட வாட்ஸ் அப் டிக்கெட்டை விரைவாக வாங்கி சவாரி செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த வாட்ஸ் அப் டிக்கெட் நடைமுறை மக்களிடையே நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.