அதிகமான வீடியோ வியூஸுக்காக, வேண்டுமென்றே தனது விமானத்தைத் தரையில் விழுந்து நொறுங்கவைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். பிரபல யூடியூபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

விபத்துக்குள்ளாக்கப்பட்ட விமானம்

அதில் ஒற்றை இன்ஜின் விமானத்தில் பறந்துகொண்டிருந்த  ட்ரெவர் ஜேக்கப், திடீரென விமானத்தின் கதவைத் திறந்து, விமானத்தை மட்டும் தனியே பறக்கவைத்துவிட்டு விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கிறார். விமானம் தனியே சிறிது தூரம் பறக்கிறது. இறுதியில் அந்த விமானம் ஒரு பகுதியில் விழுந்து நொறுங்கிவிடுகிறது. விமானத்தின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள், விமானம் விழுந்து நொறுங்கும் காட்சியைப் பதிவுசெய்திருக்கின்றன.

விமானம் விழுந்த பிறகு தரையிறங்கும் ஜேக்கப், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை அடைந்து வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து நடந்தே பயணிக்கிறார். இந்த வீடியோவைத் தற்போதுவரை, 3 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்திருக்கின்றனர். தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள லோம்போக் விமான நிலையத்திலிருந்து சியரா நெவாடா மலைகளிலுள்ள மம்மத் ஏரிப்பகுதியில் இந்த விமான விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ ஆரம்பத்தில் விமான ஆர்வலர்களிடம் `இது உண்மையான விபத்தா அல்லது வீடியோ சித்திரிக்கப்பட்டிருக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், ஜேக்கப் அது உண்மையான வீடியோதான் எனவும், அதிக பார்வையாளர்களைக் கவர அப்படிச் செய்ததாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்  (FAA) ஜேக்கப்பின் விமானி சான்றிதழை ரத்துசெய்திருக்கிறது. மேலும், ஜேக்கப்பின் இந்தக் குற்றத்துக்காக அவருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சட்டபூர்வ சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.