கல்லூரிக்குப்பின் நான் என்னுடைய முதல் வேலையில் சேர்ந்தபோது, எங்களுக்கு நான்கு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்கள். அதாவது, அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு மாதங்களுக்கு எங்களை வகுப்பறையில் உட்காரவைத்து எல்லா நுட்பங்கள், கருவிகளையும் படிப்படியாகக் கற்றுக்கொடுத்தார்கள்; பயிற்சி எடுக்கச்செய்தார்கள். எங்களுடைய பணியை ஆராய்ந்து, மதிப்பெண் போட்டு, திருத்தங்கள் சொல்லி, பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள், அதன்பிறகுதான் எங்களை வழக்கமான வேலைக்கு அனுப்பினார்கள்.

இன்டர்வியூ

சுருக்கமாகச் சொன்னால், நான்கு மாதங்கள் நாங்கள் வேலை செய்யாமல் சம்பளம் பெற்றுக்கொண்டோம். ஆனால், அந்த நான்கு மாதப் பயிற்சி அடுத்த பல மாதங்களுக்கு எங்களுக்கு உதவியது; எங்கள் நிறுவனத்துக்கும் உதவியது. சொல்லப்போனால், அந்தப் பயிற்சியில் கற்றுக்கொண்ட உத்திகள் இன்றுவரை எங்களுக்குப் பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்குப்பின், நான் இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்தேன். இங்கு எனக்கு ஒரு மாதம்தான் பயிற்சி கொடுத்தார்கள். அதுவும் வகுப்பறையில் இல்லை. அங்கு ஏற்கெனவே பணியாற்றிக்கொண்டிருந்த மூத்த வல்லுனர் ஒருவர்தான் எனக்கு வேலை கற்றுக்கொடுத்தார். நானும் மளமளவென்று கற்றுக்கொண்டு வேலையைத் தொடங்கிவிட்டேன்.

அதன்பிறகும் நான் சிலமுறை நிறுவனம் மாறியிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் இந்தப் பயிற்சியின் அளவு குறைந்துகொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம், என்னுடைய அனுபவம் மட்டுமில்லை, இத்தனை ஆண்டுகளில் உலகமும் மாறிவிட்டது, “பயிற்சி தருவது” என்பதை மக்கள் வேறுவிதமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

நிறுவனம் மாறாதவர்கள்கூட, அந்த நிறுவனத்துக்குள் ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறலாம்; புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளலாம்; பதவி உயர்வு பெறலாம்… இவை அனைத்துக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. ஆனால், அந்தப் பயிற்சி எத்தனை மாதம், எத்தனை வாரம், எத்தனை நாள், எத்தனை மணி நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுகிறது.

முதல் வேலை

சிலர் புதிய பணிகளை ஆர்வத்துடன் அணுகுகிறார்கள். அது பற்றித் தாங்களே இணையத்தில் தேடிப் படிக்கிறார்கள், ஏற்கெனவே அதில் பணியாற்றுகிறவர்களுடன் பேசிக் கற்றுக்கொள்கிறார்கள்; புதியவற்றை முயன்றுபார்த்து வெல்கிறார்கள்; அல்லது, தோற்கிறார்கள்; அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள்.

வேறு சிலர், எந்த மாற்றத்தின்போதும் தங்களுக்குப் பிறர் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது, நிறுவனம்தான் அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும், அல்லது, வல்லுனர் ஒருவரை அவருடன் கோத்துவிடவேண்டும். அந்த வல்லுனர்தான் அவருக்கு எதைக் கற்பது, எப்படிக் கற்பது என்று சொல்லித் தரவேண்டும். வழியில் எங்காவது அவர் சிக்கி நின்றால், இன்னொருவர் வந்துதான் அவரை விடுவிக்கவேண்டும். ஏனெனில், அவர் இந்தப் பணிக்குப் ‘புதியவர்’.

இன்றைய உலகில் மாற்றங்கள் நிரந்தரம். அவையும் மிக விரைவாக நடக்கின்றன. அத்துடன், புதியவர்களுக்குக் கற்றுத் தருவதற்குப் பழையவர்களுக்கு நேரமும் இல்லை. ஏனெனில், அவர்கள் வேறு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால், இப்போதெல்லாம் யாரும் ‘புதியவர்’ என்ற சாக்குப்போக்கைச் சொல்லி நெடுநாள் தப்பிக்க முடியாது. ஓரிரு வாரங்கள் அது எடுபடும். அதன்பிறகு, ‘கற்றுக்கொள்ள நீ என்ன செய்தாய், ஏன் இன்னும் புதிய ஆளாக இருக்கிறாய்?’ என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் திருமண மண்டபங்களில் எல்லாரையும் வரிசையில் உட்கார வைத்து, இலை போட்டு சாப்பாடு பரிமாறுவார்கள். பொரியலோ, சாதமோ தீரத்தீரக் கவனித்துப் போடுவார்கள். ‘வேணும்ங்கறதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க’ என்று சொல்வார்கள்.

Buffet

ஆனால் இப்போது, பஃபே (Buffet) முறை வந்துவிட்டது. எல்லாப் பொருள்களையும் வரிசையில் வைத்துவிடுகிறார்கள். நாம் வேண்டியதை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடவேண்டியதுதான். நாம் குறைவாகச் சாப்பிட்டாலும் யாரும் கேட்கமாட்டார்கள், மிகுதியாகச் சாப்பிட்டாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.

ஆக, அன்றைய திருமண விருந்துகளில் நம் பசி தீர்வது மற்றவர் பொறுப்பு. இன்றைய விருந்துகளில் அது நம்முடைய பொறுப்பு. அவர்கள் தேவையான அளவு உணவை அடுக்கி வைத்துவிட்டார்கள். நாம் சாப்பிடாவிட்டால் அது எப்படி அவர்களுடைய பிரச்னை ஆகும்?

இதைக் கற்றலுக்குப் பொருத்திப் பார்த்தால், எந்தப் பணி, பொறுப்புக்கும் வேண்டிய புதிய விஷயங்கள் பல விதங்களில் ஒரு பஃபே போலக் கிடைக்கின்றன: புத்தகங்கள், ஆவணங்கள், வீடியோக்கள், மூத்த வல்லுனர்கள், முயன்று பார்த்தல், பிறருடைய பணியைக் கவனித்துக் கற்றுக்கொள்ளுதல், பயிற்சி வகுப்புகள், இணையப் பாடங்கள், இப்படி இன்னும் பல. இவை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு நாமாக எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம்.

Representational Image

உண்மையில், பள்ளிக்கூடம், கல்லூரியில் கால் வைக்காமல் உலகின் மிகச் சிறந்த கல்விகளை எல்லாம் பெறுவதற்கான வழிகள் இன்று உள்ளன. நாம் அந்த அளவுக்குச் செல்ல வேண்டியதில்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு அடுத்தவர்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் இருந்தால் போதும். அப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நிறுவனங்கள் மதிக்கும். எதற்கெடுத்தாலும் ‘எனக்குப் பயிற்சி கொடுங்கள், சாப்பாட்டைக் கொண்டுவந்து பரிமாறுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருந்தால், பஃபேயில் எடுத்துப் போட்டுச் சாப்பிடுகிற இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு போய்விடும்.

அதனால், நாம் சொந்தமாகக் கற்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்குச் சில பயனுள்ள உத்திகள் இவை:

1. நம்முடைய சொந்த முன்னேற்றத்துக்கு அதாவது, தொடர்ந்து கற்பதற்கு வாரந்தோறும் சில மணிநேரங்களை ஒதுக்கலாம். ‘எங்க அலுவலகத்துல அதுக்கெல்லாம் நேரம் இருக்காது’ என்பீர்களானால், உங்கள் சொந்த நேரத்தில், அதாவது, அலுவலக நாள்களில் மாலை நேரமோ, சனி, ஞாயிறோ இதற்கென்று உட்காரலாம். ஏனெனில், இது உங்கள் முன்னேற்றத்துக்கான முதலீடு.

2. கற்கவேண்டிய தேவை வந்தபிறகு கற்கத் தொடங்காமல், வருங்காலத்தில் நாம் நன்கு செயல்படுவதற்கு இப்போது எதையெல்லாம் கற்கலாம் என்று தொடர்ந்து சிந்திக்கலாம், கற்கவேண்டிய தலைப்புகளை அடையாளம் காணலாம்.

கட்டுரையாளர் என்.சொக்கன்

3. இவ்வாறு அடையாளம் கண்ட தலைப்புகளை ஒருவர் தானாகக் கற்றுக்கொள்ள (Self Learning) என்ன வழி என்று ஆராயலாம். பெரும்பாலான தலைப்புகளுக்கு இணையத்தில் சிறப்பான கற்றல் பாதைகள் (Learning Paths) வகுக்கப்பட்டுள்ளன. இல்லாவிட்டாலும், நாமாக ஒன்றை வகுத்துக் கற்றுக்கொள்ளலாம், பிழைகள் வந்தால் திருத்திக்கொள்ளலாம்.

4. இயன்றால், பிறருடன் சேர்ந்து படிக்கலாம். ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக்கொள்ளவும், ஐயங்களைச் சரிசெய்துகொள்ளவும் இது உதவும்.

5. எப்போதும் ஒரு மாணவருடைய மனநிலையுடன் இருக்கலாம். அதாவது, படிப்பு என்பது கல்லூரியுடன் முடிந்துவிடுவதில்லை. நாம் புதியவற்றைக் கற்கும் விதத்தில்தான் நம் முன்னேற்றமும் பின்னடைவும் இருக்கிறது. அதனால், குறுகுறுப்புடன், ஆர்வத்துடன், புதியவற்றைத் தெரிந்துகொள்கிற மனநிலையுடன் இருக்கிற ஒருவர் மற்றவர்களைவிடப் பலமடங்கு விரைவாக வளர்வார்.

எதுவானாலும் கற்றுக்கொண்டுவிடலாம் என்கிற மனநிலை வந்துவிட்டால், ஓரிருமுறை அதைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டால், அதன்பிறகு வாய்ப்புகள் வரும்போது நாம் தயங்கி நிற்கமாட்டோம், இன்னொருவர் அறிவைப் பரிமாறவேண்டும் என்று காத்திருக்கமாட்டோம், சட்டென்று கையைத் தூக்கிவிடுவோம். அப்படிப்பட்ட முன்னெடுப்பு கொண்டவர்களை நிறுவனங்களும் தலைவர்களும் மிகவும் விரும்புவார்கள். நாளைக்கு இன்னொரு புதிய வாய்ப்பு வருகிறது எனில், அவர்கள் மனதில் உங்கள் பெயர்தான் முதலில் தோன்றும்.

(அடுத்த புதன்கிழமை மீண்டும் வருவேன்)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.