கேரளாவின் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு உயிர்களைக் காவு வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஐந்து முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில், சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லையான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விடப்பட்டது. 

பிடிபட்ட அரிசிக் கொம்பன்

முதலில் அரிசிக் கொம்பனைப் பிடித்து பாலக்காடு பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில்விட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மங்கள தேவி கண்ணகி கோயிலுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் யானை விடப்பட்டது. 

அரிசிக் கொம்பனை அந்தப் பகுதியில் விட்டது, மே 5-ம் தேதி நடக்கவிருக்கும் மங்கள தேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு திருவிழாவை சீர்குலைக்கும் நடவடிக்கை என ஆலய பாதுகாப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.  

அன்வர் பாலசிங்கம்

இது குறித்து நம்மிடம் பேசிய பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “சின்னக்கானல், சாந்தம்பாறை பஞ்சாயத்துகளில், அரிசிக் கொம்பன் யானையால் பத்தாண்டுகளுக்கு மேலாக பல உயிர்கள் பறிபோனதால், அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சின்னக்கானலிலும், சாந்தம்பாறையிலும் அடர்த்தியாக வாழும் தமிழர்கள் அரிசிக் கொம்பனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த யானையால் தமிழர்கள் பொருள் சேதத்தையும், பல உயிர்ப் பலிகளையும் சந்தித்தனர். 

முதலில் அரிசிக் கொம்பனைப் பிடித்து பரம்பிக்குளம் ஆழியார் வனப்பகுதியில்தான் விடப்போகிறோம் என்கிற நிலைப்பாட்டை கேரள வனத்துறை எடுத்தது. அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்குமானால், அதை ஜனநாயகரீதியில் எதிர்ப்பதற்கு இந்த நாட்டிலே மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், பரம்பிக்குளத்தில்விட்டால் அது முதலமடை பஞ்சாயத்துக்குள் நுழைந்துவிடும் என்கிற கதையை கவனமாகக் கையில் எடுத்த ரம்யா ஹரிதாஸ் எம்.பி, ஆர்ப்பாட்டத்திலும் இறங்கினார். பரம்பிகுளத்தின் கிழக்குப் பகுதியிலும் பாபு எம்.எல்.ஏ தலைமையில் அதிரப்பள்ளி பஞ்சாயத்திலும் கடையடைப்பு நடந்தது. 

வனத்துக்குள் அரிசிக் கொம்பன்

இதனால் கேரள வனத்துறை அமைச்சரின் முடிவுப்படி பெரியாறு புலிகள் காப்பகத்தினுள் அரிசிக் கொம்பனை விட்டுவிடலாம் என்று முடிவுசெய்தவர்கள், மேட்டகானத்தில் விட்டு வெடிவைத்து தெற்கு நோக்கி விரட்டப்போகிறோம் என்று சொன்னார்கள். முறைப்படி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட அரிசிக் கொம்பன், மேட்டகானத்திலிருந்து தெற்கு நோக்கி விரட்டப்பட்டிருந்தால், அது ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மையப் பகுதிக்கு வந்து சேர்ந்திருக்கும்.

மேட்டகானத்திலிருந்து இடதுபுறமாக திரும்பி வண்ணாத்திப்பாறை வனப்பகுதிக்குள் நகர ஆரம்பித்தது அரிசிக் கொம்பன். இது மங்கள தேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு நாளை சீர்குலைப்பதற்காக இந்த நடவடிக்கையை கேரள மாநில வனத்துறை எடுத்ததா என்கிற கேள்வியை எழச் செய்திருக்கிறது. 

கண்ணகி கோயிலில் பக்தர்கள்

வண்ணாத்திப்பாறையிலிருந்து அரிசிக் கொம்பன் மேகமலை வனப்பகுதிக்குள் வரும், இல்லையெனில் சுருளியை ஒட்டியிருக்கும் பள்ளத்தாக்கு வழியாக அது சுருளிக்கு வர வேண்டும். இரவங்கலாறுக்குச் சென்று, வெள்ளிமலை ரேஞ்சுக்கு இடமாறி, அது கோரையூத்து காமன்கல்லு வழியாக வருசநாடு அல்லது வாலிப்பாறை வழியாக கீழிறங்கலாம். 

முறைப்படி பிடிக்கப்பட்ட அரிசிக் கொம்பனை, ஒன்றிரண்டு மாதங்களாவது தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து விரும்பி உண்ணும் அரிசி உணவு முறையை மாற்றி வனத்துக்குள் விட்டிருக்கலாம். எதுவுமே செய்யாமல் அரிசியையும் சீனியையும் எந்த நெருக்கடியிலும் சாப்பிட்டு வாழ்ந்த ஒரு யானையை, மனித நடமாட்டத்திலிருந்து கூப்பிடு தொலைவில் விட்டுவிட்டதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கேரள வனத்துறை நினைத்துவிட்டது. 

அழைத்துச் செல்லப்பட்ட அரிசிக் கொம்பன்

திட்டமிட்டே மங்கள தேவி கண்ணகி கோயில் அமைந்திருக்கும் வண்ணாத்திப்பாறையைச் சுற்றி விட்டிருக்கின்றனர். இதனால் சித்திரை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் வருவர். மேலும் ஊரடங்கு போட்டு திருவிழாவே நடத்தவிடாமல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் தமிழக எல்லைக்குள் அரிசிக் கொம்பன் நுழைந்துவிட்டதா என்பதை தேனி மாவட்ட வனத்துறை முதலில் உறுதிசெய்ய வேண்டும். உறுதிசெய்வதோடு அரிசிக் கொம்பனை தமிழக எல்லையில் பிடித்து, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்குக் கொண்டு சென்று, அதற்கு பண்பு பயிற்சி அளிப்பதற்கு தமிழக வனத்துறை தயாராக வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.