சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் உள்ள திரையரங்கிற்கு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெண், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (33). இவரின் கணவர் பாலாஜி, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் 9-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையம்

இந்தச் சூழலில், நேற்றிரவு தன் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கச் சென்றுள்ளார். படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, பாத்ரூமுக்கு சென்று வருவதாகக்கூறி, தியேட்டரில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா, பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதியின் 4வது மாடிக்கு ஓடிச் சென்றார். அவரைக் கண்ட அங்குள்ள கார் ஓட்டுநா்கள் சத்தம் போட்டு தடுக்க முயன்றனர்.

எனினும், அதைப் பொருட்படுத்தாத அவர், 4வது மாடி தடுப்புச் சுவரில் ஏறி, கீழே குதித்தார். கீழே விழுந்த ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய காவல்துறையினர், விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து, விமான நிலைய காவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ஐஸ்வர்யா கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்ததாக உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என்றனர்.

மன உளைச்சல்

ஐஸ்வர்யா உறவினர்களிடம் பேசியபோது, “என்ன பிரச்னை என்றே தெரியவில்லை. ரொம்ப இறுக்கமாவே அவர் இருந்துள்ளார். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வந்தால் சரியாகிவிடும் என்று நினைத்தோம். இப்படியாகும் என்று நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளையும் பார்க்கவே முடியவில்லை” என்றனர்.

ஒருவருக்குத் தன் உயிரை மாய்த்து தற்கொலை செய்து கொள்ள உரிமையில்லை. இழப்புகளும் துயரங்களும் பூமிக்கு புதிதல்ல. அனைத்தில் இருந்தும் மீண்டு வருவதே வாழ்க்கை. தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் – 104

சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் – 044 – 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.