சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியிருந்தது. இந்த டிக்கெட் விற்பனையின்போது மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருந்தது.

சேப்பாக்கம்

வருகிற 30 ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்றைய தினம் காலை 9:30 மணிக்கு தொடங்கியிருந்தது. 1500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடில் சேப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கவுன்ட்டரில் வழங்கப்பட்டன. 2000 மற்றும் 2500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் வாலாஜா சாலையிலுள்ள பட்டாபிராமன் கேட் அருகேயுள்ள கவுன்ட்டரில் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்கு முன்பாக மூன்று போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்த மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையின் போதுமே எக்கச்சக்க அசௌகரியங்களும் சிக்கல்களும் எழுந்ததாக பலரும் புகார் தெரிவித்திருந்தனர். பெண்களுக்கென தனி வரிசை ஒன்று இல்லை என்பது அதில் ஒரு புகார். இதைப்பற்றி நாமே கடந்த போட்டியின் டிக்கெட் விற்பனையின் போது செய்தி வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து நேற்றைய டிக்கெட் விற்பனையின் போது 2000 மற்றும் 2500 ரூபாய்க்கான டிக்கெட் கவுன்ட்டர்களில் பெண்களுக்கான தனி வரிசை அமைக்கப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.

ஆனாலும் 1500 ரூபாய் டிக்கெட் கவுன்ட்டரில் பெண்களுக்கென தனி வரிசை இருந்ததாகத் தெரியவில்லை. இருக்கிற அந்த ஒரே வரிசையும் ரொம்பவே குறுகலாக நெருக்கடியாக இருந்தததையும் பார்க்க முடிந்தது. இதுவே பெண்களுக்கு பெரும் அசௌகரியத்தைக் கொடுத்தது. பெண்களைவிட இன்னும் அதிக சிரமத்தை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொண்டனர். அந்த 1500 ரூபாய் கவுன்ட்டரில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கவுன்ட்டரே அமைக்கப்படவில்லை. ஆனாலும் சில மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் டிக்கெட் வாங்க வந்திருந்தனர். ஆனால் அப்படி வந்தவர்கள் வந்திருக்கவே வேண்டாமோ எனும் அளவுக்கு சிரமத்தை எதிர்கொண்டனர். `எங்களுக்குக் கொஞ்சம் டிக்கெட் வாங்கிக் கொடுங்கள்!’ என போலீசாரிடம் மாற்றுத்திறனாளிகள் கெஞ்சி கேட்கும் நிலையே இருந்தது.

சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்கக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள்

‘நீயெல்லாம் மேட்ச் பார்க்கதான் வர்றியா…’ என கடுமையான வார்த்தைகளால் போலீசார் மாற்றுத்திறனாளிகளைக் கடிந்தனர். ‘கொஞ்சம் பொறுமையா ஓரமா நில்லு. கொஞ்ச பேரு போனதுக்கு அப்புறம் ஒத்த ஒத்தையா தனியா அனுப்புறோம்’ என அவர்களை ஓரமாகவும் நிற்க வைத்தனர்.

கூறியபடியே சிலரை தனி வழியாக அனுப்பினாலும் அது முறைப்படி நடத்தப்படவில்லை. சிலரை அனுப்பியவர்கள். சிலரை அனுப்பவே இல்லை. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கவுன்ட்டர் முன் வைக்கப்பட்டிருந்த கம்பி வலைக்குப் பின்னால் நின்று ஒரு போலீஸ்காரரிடம் நீண்ட நேரம் கெஞ்சி பணத்தை கொடுத்து கவுன்ட்டரிலிருந்து டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். டிக்கெட்டை பெற்று வெளியேறிய மாற்றுத்திறனாளிகள் சிலரிடம் ‘அன்னைக்கு வந்து பார்ப்பேன்… நீ மட்டும் மேட்ச் பார்க்க வரல. தொலைச்சுருவேன்..’ என மிரட்டும் தொனியிலும் பேசி அனுப்பி வைத்தனர்.

மாறுத்திறனாளிகள் அங்கே நடத்தப்பட்ட விதம் பெரும் கோபத்தை வரவழைப்பதாக இருந்தது. அவர்களின் சுயமரியாதையை எள்ளி நகையாடும் வகையில்தான் போலீசாரின் செய்கைகள் அமைந்திருந்தன. ‘ரொம்ப படுத்துறாங்க சார். நீயெல்லாம் மேட்ச் பார்க்க வர்றியான்னு கேட்குறாங்க.

நாங்கல்லாம் மேட்ச் பார்க்க வரக்கூடாதா? கேளுங்க சார் என்னனு’ என்று பெயர் குறிப்பிட விரும்பாத மாற்றுத்திறனாளி ஒருவர் தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டினார். இத்தனை சிரமங்களை எதிர்கொண்ட பிறகும் டிக்கெட்டை பெற்றுவிட்டு

‘தோனிக்காகதான் சார் வர்ரேன். லாஸ்ட்டு 3 மேட்ச்சும் வந்தேன். அடுத்த 3 மேட்ச்சுக்கும் கூட வருவேன். முன்னாடி இருந்தே தோனி ஃபேன் சார். தோனியோட லாஸ்ட் சீசன்ல அதனால எல்லா மேட்ச்சும் பார்த்தே ஆகணும்னு இருக்கேன்’

எனக் கூறினார் அந்த மாற்றுத்திறனாளி.

சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரைக்கும் `I’ கேலரியில் ஒரு பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மைதானத்திற்குள் இப்படி ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு வெளியே மாற்றுத்திறனாளிகளுக்கென ஒரு தனி வரிசைகூட இல்லாதது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. மேலும்,

உதயநிதி ஸ்டாலின்

இந்த சேப்பாக்கம் தொகுதி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தொகுதி. அதுபோக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியே இருக்கிறார். உரியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து அடுத்த முறையாவது சிக்கல் எழாமல் தவிர்த்து மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையைக் காக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.