வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

என்‌ வீட்டு எதிரில் வசிக்கும் ஒரு சிறுவன் என்னிடம் வந்து , “ஆன்டி., என் புது சைக்கிள் பாருங்க” எனக் காண்பித்து மகிழ்ச்சியுடன் ஓட்டிச் சென்றான் .. குழந்தைகள் பயிலும் முதல் வாகனம் என்றென்றும் சைக்கிள் தான் .

தமிழில் இதற்கு ஈருருளி என்ற பெயர் இருந்தும், நாம் சைக்கிள் என்றுதான் வழக்கத்தில் அழைக்கிறோம். சைக்கிள் என்றவுடன் அனைவர்க்கும் பால்யகால நினைவுகள் வராமல் இருக்காது. தற்போது நாற்பதுகளில் இருப்பவர்களுக்கு, பெரும்பாலும் முதன்முதலில் ஓட்டிய சைக்கிள் என்றால் அது கண்டிப்பாக வாடகை சைக்கிளாகத் தான் இருக்கும். ஒரு மணிநேரத்திற்கு ஐம்பது பைசா முதல் ஒரு ரூபாய் வரை வசூலிக்கப்படும். வாடகை சைக்கிள் கடைகளில் வரிசையாக நிறைய சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

சிறுவர்கள் போய், அண்ணா அண்ணா எனக்கு இந்த சைக்கிள் வேணும், அந்த சைக்கிள் வேணும் எனக் கேட்டால், அவ்வளவு சீக்கிரத்தில் அதைக் கொடுத்துவிட மாட்டார்.

Representational Image

ஒரு பழைய சைக்கிளைக் காண்பித்து அதை எடுத்துச் செல்ல அனுமதிப்பார். சரியாக அரைமணி நேரத்தில் வண்டியை கொண்டு வந்து விட வேண்டும் எனக் கறாராக கூறுவார். வண்டியை எடுக்கும் முன் அவர் அதை ஒரு முறை சரியாக இருக்கிறதா என சோதித்து விட்டுத் தான் கொடுப்பார். அந்த சைக்கிள் கடைக்காரரிடமே நாம் எப்போதும் சென்று வாடகைக்கு சைக்கிள் எடுத்தால், நம் மீது நம்பிக்கை ஏற்பட்டு நாம் கேட்கும் சைக்கிளை நமக்குத் தர ஒப்புக் கொள்வார்.

என் நினைவுப்படி, நான் மூன்றாம் வகுப்பிலிருந்தே குரங்கு பெடல் அடித்து சைக்கிள் பழகினேன். பிறகு ஒரு அழகான மெரூன் நிற பிஎஸ்சி சைக்கிள் வீட்டிற்கு வந்தது. வீட்டில் நிறையபேர் இருந்ததால் , அது எப்போது வீட்டில் யாரும் எடுக்காமல் நிறுத்தப் பட்டிருக்குமோ அப்போதெல்லாம் அதை ஓட்டிக்கொண்டிருப்பேன்.

Representational Image

என் பாட்டி அடிக்கடி என்னை கடைத்தெருவிற்கு அனுப்பி அதை வாங்கி வா இதை வாங்கி வா எனக் கூறும் நேரத்தில் எல்லாம் சைக்கிள் தான் என் துணை. அப்போதெல்லாம் முதலில் ஒரு கை ஹேண்டில் பாரில் இருந்து எடுத்து ஒரு கையை வைத்து ஓட்டுவது ஒரு ஸ்டைல். அந்த ஸ்டைலை மிக சீக்கிரமாக கற்றுக் கொண்டேன்.

பிறகு யாருமில்லாத சாலைகளில் இரண்டு கையையும் எடுத்து ஓட்ட முயன்று, சைக்கிள் தாறுமாறாக ஓட , அவசர அவசரமாக கையை ஹேண்டிலின் மீது வைப்பேன். தலை தப்பிய தருணங்கள் அவை.

Representational Image

பிறகு வீட்டில் டிவிஸ் 50 வரவே கவனம் அதன் மீது சென்றது. வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் அது மாடாய் உழைத்தது. இது ஒருபுறம் இருந்தாலும், தோழிகளுடன் வெளியில் சுற்ற சைக்கிள் தான் கை கொடுத்தது. போக்குவரத்து இல்லாத.காலகட்டம் அது. எனவே எல்லாத் தோழிகளும் ஜாலியாக பேசியபடியே தெருவில் பேசிக்கொண்டே சைக்கிளில் செல்வது அப்போதைய டைம் பாஸ் மற்றும் ஸ்டெர்ஸ் பஸ்டர்.

எனக்கு வருத்தமளித்த ஒரு விஷயம்..எங்காவது சைக்கிள் ஓட்டும் போது ப்ரேக் போட்டு நிற்க வேண்டுமானால் என் தோழிகள் அனைவரும் அழகாக ஸீட்டில் அமர்ந்தபடியே ப்ரேக் போட்டு காலை தரையில் ஊன்றியபடி இருப்பார்கள். என் உயரத்திற்கு அது முடியாது. எனவே ப்ரேக் போடும் ஒவ்வொரு முறையும் நான் சைக்கிளை விட்டு கீழே இறங்கவேண்டும். வெறுப்பாக இருக்கும். என்னடா ..என் உயரத்திற்கு வந்த சோதனை,, ரோதனை என நினைத்துக் கொள்வேன். எங்கள் வீட்டு சைக்கிள் , டிவிஸ் 50 என.எல்லாமே ஒரு நாள், உங்களுக்கு உழைத்தது போதும் ஆளை விடுங்க என ஓடாமல் நின்று விட்டன.

Representational Image

இதற்கு நடுவில் எங்கள் ஏரியா சாலைகள் இருந்த லட்சணத்திற்கு, நாங்கள் எங்கள் வாகனங்களை சர்வீஸ் செய்யாமல் விட்டதற்கு, நான் இந்த இரண்டு வாகனங்களை ஓட்டிச் சென்றபோதும், முன் சக்கரம் ஒரு புறம், நான் ஒரு புறம் வண்டி ஒருபுறம் என இரண்டு வாகனங்களில் இருந்தும் கீழே விழுந்து எழுந்திருக்கிறேன். மருத்துவரிடம் சென்று காண்பிக்கும் அளவிற்கு அடிப்பட்டது.

இரண்டு நாட்கள் பற்கள் எல்லாம் ஆடுவது போல் ஓர் உணர்வு. நானே மருத்துவரிடம் சென்று, என் பற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா ன்னு பாருங்க டாக்டர், சாப்பிடும் போது க்ர்க் க்ரக் என சத்தம் வருகிறது என்றேன். அப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் ஒரே மருத்தவர் தான். ஸ்கேனிங் , எக்ஸ் ரே பயமுறுத்தல்கள் எல்லாம் கிடையாது. அந்த ஒரு மருத்துவரும் அனைத்து துறையிலும் தேர்ந்தவராக இருப்பார். நீங்க போய் ஒரு டென்டிஸ்ட் ஐ பாருங்களேன் எனக் கூறமாட்டார் . அவர் பார்த்து விட்டு, எல்லாம் சரியா இருக்கு சரியாயிடும் என சிரித்தபடியே வழியனுப்பினார். அவர்.கூறியது போலவே இன்றளவும் என் பற்களுக்கு எதுவும் ஆகவில்லை.

Representational Image

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு மெகா சைஸ் Hercules சைக்கிள் வீட்டிற்கு வந்தது. என் உயரத்திற்கும் அதற்கும் ஏணி வைக்க வேண்டும். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்த சைக்கிளை கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன். என் திருமணத்திற்குப் பிறகு அந்த சைக்கிள் என்ன ஆனது எனத் தெரியவே இல்லை. நானும் அதை மறந்து விட்டேன். பிறகு என் மகளிற்கு பிங்க் நிற lady bird சைக்கிள் வாங்கித் தந்தவுடன், மீண்டும் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். சில நேரங்களில் கடைக்கு செல்ல, அல்லது மாலை நேரங்களில் அவள் விளையாடும் போது அந்தத் தெருவில் அவளருகிலேயே நிற்காமல் அவளை சுற்றி சுற்றி வர என, சைக்கிளில் வலம் வந்தேன்.

பின் என் மகன் இரண்டு வயதிலிருந்தே தெருவில் சைக்கிள் ஓட்டுவேன் என அடம்பிடிக்க அவன் குட்டி சைக்கிள் பின்னாலேயே நானும் பெரிய சைக்கிளில் ஜாலியாக சென்று கொண்டிருந்தேன். அவன் மூன்றாம் வகுப்பு வந்தபோது, அம்மா ப்ளீஸ் பின்னால வராத.. நானே போறேன் எனக் கூறியவுடன்.. நீ எந்தப் பக்கம் போறியோ..நான் அதுக்கு எதிர்ப்பக்கமா வர்றேன்..உன் பின்னால வர்ற மாட்டேன் போதுமா என விடாமல் ஓட்டிக் கொண்டிருந்தேன்.

Representational Image

மாலை நேரங்களில் குழந்தைகள் விளையாடும் சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது மனதிற்கு இனிதாக இருந்தது. ஒரு‌ கட்டத்திற்குப் பின்.. , எனக்கு சைக்கிளை எடுக்கும் வாய்ப்பு வரவேயில்லை. அது சும்மாவே ஒரு ஓரத்தில் இருந்தபோதும்., ஸ்கூட்டியை பயன்படுத்தினேனே தவிர, அதை கையில் எடுக்கவே இல்லை. யாரோ கேட்டார்கள் என அதை அவர்களிடம் கொடுத்தும் விட்டேன். மீண்டும் சைக்கிள் ஓட்டுவேனா எனத் தெரியவில்லை. ஆனால் அதை ஓட்டிக் கொண்டிருந்த காலங்களில் ஏற்பட்ட நினைவுகளில் இன்றும் வாழ்க்கை எனும் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

-Mrs. J. Vinu

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.