பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணியில் மோதின. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மையப்படுத்தி பெங்களூர் அணி ஆண்டுக்கு ஒரு முறை அணியும் பச்சை ஜெர்சியுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்கியது.

சில நாட்களாக பெங்களூருவின் வில்லனாக இருந்த ஹர்ஷல் நேற்று ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக இல்லாவிட்டாலும் செகண்ட் ஹீரோவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால் பெங்களூரின் மிடில் ஆர்டர் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வில்லனிலிருந்து காமெடியன்களாக மாறிக்கொண்டே வருகின்றனர்‌.

RCBvRR

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் பர்னலுக்கு பதிலாக டேவிட் வில்லி களமிறங்கினார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் இல்லை. பெங்களூருவின் வழக்கமான கேப்டன் டூ ப்ளெஸ்சிஸ் காயத்தால் அவதியுறுவதால் கடந்த ஆட்டத்தைப் போலவே கோலி கேப்டனாக செயல்பட்டார். முதல் ஓவரை ராஜஸ்தான் அணியின் போல்ட் வீசினார்.‌ பல பெங்களூர் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வண்ணம் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார் கோலி. போல்ட் வீசிய‌ அந்த அழகிய இன்-ஸ்விங்கர் 2019 உலகக்கோப்பை அரையிறுதியை ஒரு கணம் கண் முன்‌ நிறுத்தியது.

கடந்த முறை பச்சை ஜெர்சியுடன் ஆடிய போதும் கோலி முதல் பந்திலேயே அவுட் ஆனார் என்பதும் இதில் ஹைலைட்.

Virat

மேல் வரிசையில் இறக்கி பரிசோதனை செய்யப்பட்ட ஷபாஷ் அகமத் இரண்டு ரன்களிலேயே வெளியேறினார். எப்போதும் போல அடுத்து ஆட்டத்தை டூ ப்ளெஸ்சிஸ் மற்றும் மேக்ஸ்வெல் கையில் எடுத்தனர். முதல் ஓவரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டும் கொடுத்த போல்ட் ஓவரிலேயே மேக்ஸ்வெல் வந்தவுடன் 10 ரன்கள் வந்தன. அதன் பின்பு ரன் மழை நிற்கவே இல்லை. அஸ்வின், சஹால் என‌ எல்லாரின் ஓவர்களும் பவுண்டரிக்கு பறந்தன. இவர்கள் கொடுத்த அழுத்தத்தில் போல்ட் கூட 17 ரன்கள் ஓவரை வீசினார்.

இருவருமே மிக எளிமையாக அரை சதம் கடந்தனர். எப்படியோ டூப்ளெசிஸ் ஒரு கட்டத்தில் ரன் அவுட் ஆக, அடுத்த ஓவரிலேயே மேக்ஸ்வெல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களத்திற்கு வந்த பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் நாம் பெங்களூருக்கு விளையாடுகிறோமா அல்லது ராஜஸ்தானுக்கு விளையாடுகிறோமா என்று தெரியாதது போல ஆட ஆரம்பித்தனர். லோம்ரோர், பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் என யாருமே எதிர்பார்த்த அளவு ரன்கள் சேர்க்காத காரணத்தால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது.

Siraj

பெரிய இலக்காக தெரிந்தாலும் சின்னசாமி மைதானத்தை பொருத்தவரை எல்லாமே சிறிய இலக்கு தான். அந்த தைரியத்தில் ஆட வந்த ராஜஸ்தான் பேட்டிங்கின் முதுகெலும்பான பட்லரை இரண்டு அவுட் ஸ்விங்கர் ஒரு இன் ஸ்விங்கர் என வீசி தன்னுடைய வலைக்குள்‌ விழ வைத்து பவுல்ட் முறையில் ஆட்டமிழக்க‌ வைத்தார் சிராஜ்.‌ பட்லர் வேகமாக முதல் ஓவரிலேயே வெளியேறினாலும் அதன் பிறகு ஜோடி சேர்ந்த படிக்கல் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடினர். பத்து ஓவர்களிலேயே 92 ரன்கள் எடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது ராஜஸ்தான்.

எந்த அணியாக இருந்தாலும் இந்நேரத்தில் சின்னசாமி மைதானத்தின் அளவுகளை பயன்படுத்தி ரன்களை அதிகமாக எடுக்கவே முயற்சிக்கும். ஆனால் ராஜஸ்தானோ ரிவர்சில் சென்று அடுத்த நான்கு ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை பெங்களூரு மிக எளிதாக பயன்படுத்தி இரண்டு விக்கெட்டுகளை வேறு இந்த நேரத்தில் எடுத்தது. அதன் பிறகு சாம்சன் சில ஷாட்டுகளை அடித்தாலும் ஆட்டத்தில் பெங்களூருவின் கையே கடைசி வரை ஓங்கி இருந்தது. ராஜஸ்தானின் இளம் நட்சத்திரம் ஜுரல் கடைசி நேரத்தில் சில நம்பிக்கைகளை கொடுத்தாலும் ராஜஸ்தானுக்கு அது போதவில்லை.

ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட ஹெட்மையர் முந்தைய ஓரிலேயே அவுட்டாகி விட்டார்.

Harshal

கடைசி நேரத்தில் ஹோல்டருக்கு முன்பே அஸ்வின் வந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தாலும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. ரன்களை வாரி வழங்கும் ஹர்ஷல் நேற்று அற்புதமாக வீசி கடைசி ஓவரில் பெங்களூர் அணிக்காக வென்று கொடுத்தார்.

RCB

இவ் வெற்றியின் மூலம் பெங்களூரு புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கோலி, டூப்ளெசிஸ், மேக்ஸ்வெல் என‌ மூன்று பேர் மட்டுமே வரிசையாக ரன்கள் எடுக்கின்றனர் பெங்களூர் அணிக்காக. மற்ற மிடில் ஆர்டர் வீரர்களில் ஒருவர் கூட 50 ரன்களை தாண்டவில்லை இந்த தொடர் முழுக்க. அதுவும் டூப்ளெசிஸ் எல்லாம் ‌ காயத்தையும் பொருட்படுத்தாமல் 400 ரன்கள் வரை அடித்துக் கொடுத்துள்ளார். தங்கள் அணி கேப்டனுக்கு மரியாதை செய்யும் விதமாகவாது பெங்களூரின் மிடில் ஆர்டர் வீரர்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் வெற்றிகள் தொடராமல் போய்விடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.