‘இப்போது இங்கே இந்தப் போட்டியில் நடந்த எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.’ அந்த கடைசி ஓவர் கொடுத்த பேரதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பேசியிருந்தார் கே.எல்.ராகுல்.

ராகுல் மட்டுமில்லாமல் அநேகமாக லக்னோ Vs குஜராத் போட்டியை பார்த்த அத்தனை பேரும் இதே மாதிரியான உணர்வோடுதான் உறைந்து போய் இருந்திருப்போம். நமது சிந்தையின் மீது அத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது மோகித் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர். மோகித்தே ஒரு அதிசயம். அவர் வீசிய அந்த கடைசி ஓவர் ஒரு பேரதிசயம்.

வெறும் 135 ரன்கள்தான் இலக்கு கைவசம் விக்கெட்டுகளும் இருக்கின்றன. கே.எல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன் களத்தில் இருக்கிறார் என்றால் ஆட்டம் முடிந்தது. இதில் சுவாரஸ்யமிருக்காது என்பதுதான் இயல்பாக அனைவருக்கும் தோன்றுவது.

ஆனால், நடப்பு ஐ.பி.எல் சீசனில் அப்படியெல்லாம் எளிதாக எதையும் கணிக்க முடிவதில்லை. இறுதி ஓவரில் என்ன வேண்டுமானலும் நடக்கும் தற்போது நடந்து முடிந்த லக்னோ, குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. கடைசி ஓவரில் வெற்றி பெற லக்னோ அணிக்கு 12 ரன்கள் தேவை. ஆனால், `2 W W W+1 W+1 0′ மோகித் சர்மா வீசிய இந்த கடைசி ஓவர் இன்னும் பல சீசன்களுக்கு பேசப்படும் ஒன்றாக இருக்கும். இதற்கு முன்பு குஜராத் ஆடிய ஒரு போட்டியிலும் மோகித் சர்மா கவனம் பெற்றார்.

IPL 2023

இந்த ஐ.பி.எல் சீசன் தொடங்கியதிலிருந்து எக்கச்சக்க ஆச்சர்யங்களை கண்டுகொண்டிருக்கிறோம். ரிங்கு சிங் இதுவரை ஒரு அடையாளமே இல்லாத வீரர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி மிரள வைத்திருக்கிறார். அவ்வளவுதான் என நினைக்கப்பட்ட ரஹானே மீண்டு வந்து பிரமிக்க வைத்திருக்கிறார். இப்படியான ஆச்சர்யங்களின் வரிசையில்தான் மோகித் சர்மாவையும் சேர்க்க வேண்டும்.

சில காலமாக எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த மோகித் சர்மா திடீரென குஜராத் அணிக்காக களமிறங்கி தனது முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். லக்னோவிற்கு எதிரான இன்றைய போட்டியிலும் அவரே ஆட்ட நாயகன்.

Mohit Sharma

மோகித் சர்மா ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்தவர். ஒரு ரஞ்சி சீசனில் மிகச்சிறப்பாக செயல்படவே சென்னை அணி அவரை ஏலத்தில் வாங்கி அணிக்குள் கொண்டு வந்தது. 2013 இல் முதல் சீசனிலேயே சென்னை அணிக்காக 20 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். எக்கானமி 6 ஐ சுற்றிதான் இருந்தது. ஒரு அறிமுக சீசனில் மிதவேகப்பந்துவீச்சாளர் ஒருவர் இத்தனை விக்கெட்டுகளை எடுத்ததும் அதுவும் இவ்வளவு குறைவான எக்கானமியில் எடுத்ததும் அதற்கு முன் நிகழ்ந்திடாதது.

Mohit Sharma

மோகித் அந்த சாதனையை அசால்ட்டாக செய்திருந்தார். பேக் ஆஃப் தி ஹேண்ட்ஸ் ஸ்லோயர் ஒன்கள், நக்குல் டெலிவரிக்கள், கட்டர்கள் இவைதான் மோகித்தின் பெரும்பலமாக இருந்தன. பேட்டர்களும் மோகித்தின் இந்த டெலிவரிகளுக்கு கடுமையாகத் திணறினர்.

விளைவு, 2014 ஐ.பி.எல் சீசனில் பர்ப்பிள் தொப்பியை மோகித் சர்மாதான் வென்றிருந்தார். அந்த சீசனிலும் சென்னை அணிக்காக 23 விக்கெட்டுகளை 8 ஐ சுற்றிய எக்கானமியில் எடுத்திருப்பார்.

தோனியின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற வீரர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார். சிஎஸ்கேவைத் தாண்டி தோனியின் தலைமையில் இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்புமே அவருக்கு கிடைத்தது. இந்திய அணிக்காகவுமே தனது முதல் ஓடிஐ போட்டியிலேயே ஜிம்பாப்வேக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். 2015 ஓடிஐ உலகக்கோப்பையில் இஷாந்த் சர்மா ஆட முடியாமல் போனபோது சீனியர்கள் பலர் இருந்தபோதும் அவருக்கு பதிலாக தோனி டிக் அடித்த பெயர் மோகித் சர்மாவே. ‘மற்ற பௌலர்களை விட மோகித் சர்மா தன்னை சூழலுக்கு ஏற்றவாறு எளிதில் தகவமைத்துக் கொள்வார். அதனால்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம்’ என மோகித் சர்மா மீதான தன்னுடைய நம்பிக்கையை தோனி வெளிக்காட்டியிருந்தார். அந்த உலகக் கோப்பையிலுமேகூட மோகித் சர்மா 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மோகித் சர்மா

இதுவரை எல்லாமே நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், இதன்பிறகான காலம் மோகித்துக்கு அத்தனை எளிதானதாக இல்லை. மோகித்தின் பெர்ஃபார்மென்ஸூம் பயங்கரமாக சரியத் தொடங்கியது. 2016 மற்றும் 2017 இரண்டு சீசனிலும் தலா 13 விக்கெட்டுகளை மட்டுமேதான் எடுத்திருந்தார். 2018 இல் 7 விக்கெட்டுகளை மட்டுமேதான் எடுத்திருந்தார். முதலில் சென்னை அணிக்கு ஆடிய போதும் அந்த அணியின் முக்கிய பௌலராகத்தான் மோகித் இருந்தார். அடுத்ததாக பஞ்சாபுக்கு ஆடியபோதும் அப்படித்தான். இரண்டு அணிகளும் அவரை பெரிதாக நம்பின. ஆனால், மோகித் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் சென்னை அணிக்கு வந்த போதாகட்டும் அல்லது அடுத்து டெல்லி அணியால் வாங்கப்பட்ட போதாகட்டும் இரண்டு அணியிலுமே அவர் பேக்கப் வீரராக பார்க்கப்பட்டு பென்ச்சில்தான் வைக்கப்பட்டிருந்தார். பெரிதாக வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஏலத்தில் விற்கப்படாத வீரராக ஆகியிருந்தார்.

பெரும் உச்சத்திலிருந்து சரிவின் அடி ஆழத்தை பார்த்துவிட்டவரை ஆஷிஸ் நெஹ்ரா குஜராத் அணியின் நெட் பௌலராக அழைத்திருக்கிறார். கடந்த சீசன் முழுவதும் குஜராத்தின் நெட் பௌலராக இருந்தவரை மினி ஏலத்தில் குஜராத் அணியே அடிப்படை விலைக்கு வாங்கிப் போட்டது. வாய்ப்பு கிடைக்குமா என பரிதவிப்புடன் பென்ச்சில் காத்துக் கொண்டிருந்தவருக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் போட்டியில் மோகித் சர்மா 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வீசிய நான்கு ஓவர்களில் 12 டாட் பந்துகள்.

Mohit Sharma

இந்தப் போட்டி மொஹாலியில் நடந்திருந்தது. ஸ்லோயர் ஒன் ஸ்பெசலிஸ்ட்டான மோகித் சர்மாவுக்கு ஏற்ற பிட்ச் இது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்து முடித்துவிட்டார்.

வீசிய 24 பந்துகளில் பெரும்பாலானவை குட் லெந்த்தில் நல்ல டைட்டான லைனில் வீசப்பட்ட பந்துகள். இப்படி ஒரு பந்தில்தான் ஜித்தேஷ் சர்மா அவுட் ஆகியிருந்தார். பஞ்சாப் அணியே தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தது. ஜித்தேஷ் சர்மா கொஞ்சம் துடிப்பாக ஆடக்கூடியவர் என்பதால் அவர் சிறப்பாக ஆடி அணியை மீட்டிருப்பதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும். அதை மோகித் சர்மா நிகழவிடமால் செய்தார். அதேமாதிரி, கடைசிக்கட்டத்தில் அதிரடி காட்டத் தயாரான சாம் கரனையும் ஒரு ஷார்ட் பாலில் வீழ்த்தி பஞ்சாபை கட்டுப்படுத்த முக்கிய காரணமானார். அதற்காகத்தான் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன் 34 வயதில் கம்பேக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றபிறகு அவர் பேசியது,

Mohit Sharma

`நான் இன்னும் கிரிக்கெட் ஆட வேண்டும் என விரும்பினேன். வீட்டிலேயே முடங்கியிருந்தால் அது சாத்தியமாகாது எனத் தெரியும். அதனால்தான் நெட் பௌலருக்கான வாய்ப்பு வந்தபோது அதை ஒத்துக்கொண்டேன். நெட் பௌலராக செயல்படுவது குறைவான காரியம் ஒன்றும் இல்லை.’ என மோகித் சர்மா பேசியிருந்தார்

அந்தப் போட்டியில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாகத்தான் இந்தப் போட்டியின் கடைசி ஓவரை எந்த சந்தேகமுமேயின்றி மோகித் சர்மாவிற்கே கொடுத்தார். மோகித்தும் கடந்த போட்டிக்கும் சேர்த்து வைத்து இந்தப் போட்டியில் விக்கெட் வேட்டை நடத்தி அணியையும் வெல்ல வைத்துவிட்டார். 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள். மோகித் சர்மா இதுவரை ஆடியிருக்கும் மூன்று போட்டிகளிலுமே எக்கானமி ரேட் 6 ஐ தாண்ட விடவில்லை.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய மோகித் சர்மா, ‘இது ஒன்றும் ஸ்பெசலான விஷயமெல்லாம் இல்லை. வழக்கமான இயல்பான விஷயம்தான். சீரான செயல்பாடும் அனுபவமும்தான் முக்கியம்’ என மோகித் பேசியிருந்தார். அனுபவத்தின் துணைகொண்டு வாழ்வின் கரைகளை கண்ட மனிதனாக மோகித் பெரும் பக்குவத்தோடு பேசப்பட்ட பேச்சு இது.

வேண்டிய வாய்ப்பு கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் மோகித் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.