சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் சன்ரைசர்ஸ் அணியும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியிருந்தது.

சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விற்பனையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களுக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை என்றும் ஆனால், ப்ளாக்கில் பல மடங்கு விலைக்கு டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதாகவும் புகார்களை அடுக்கி வந்தனர்.

இந்நிலையில், உண்மையிலேயே டிக்கெட் விற்பனையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய சேப்பாக்கம் மைதானத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று ஒரு ரவுண்டு அடித்தோம். மைதானத்தைச் சுற்றி வந்ததில் பார்த்த சில சம்பவங்களும் கேட்ட சில விஷயங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.

Chepauk

முதலில் அதிகாலை 4 மணிக்கு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியவுடனே விக்டோரியா ஹாஸ்டல் ரோடை நோக்கிச் சென்றோம். அந்தத் தெருவுக்குள் நுழையும்போதே எதோ கலவர பூமிக்குள் நுழைந்ததை போல இருந்தது. ஆங்காங்கே ரசிகர்கள் பலரும் கூட்டமாகவும் கும்பலாகவும் நின்று கொண்டிருந்தனர். நடைபாதையிலேயே பலர் படுத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்ற பக்கம் 1500 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கும் பகுதியாம். டிக்கெட்டுக்கான வரிசை எதுவுமே போடப்படவில்லை.

`ஒன்பதரைக்குதான் டிக்கெட் கொடுப்பாங்க. ஏழு மணிக்கு மேல வாங்க…’ என போலீசார் மைக்கில் அறிவித்துக் கொண்டே இருந்தனர்.

ஆனாலும் கூட்டம் கலையாமலேயே நின்று கொண்டிருந்தது. திடீரென போலீசார் லத்தியைத் தூக்க மொத்த கூட்டமும் தெறித்து ஓடியது. ஆனால், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே மீண்டும் கும்பலாகக் கூடிவிடுகின்றனர்.

“நேத்து நைட்டு 8 மணிலருந்து நிக்குறேன் ப்ரோ. இதே மாதிரி ஒரு 10-15 தடவ லத்திய தூக்கிட்டாங்க. எனக்கு எங்க ஏரியா தெரு கூடத் தெரியாது. ஆனா, இந்த ஏரியால அங்க இங்கன்னு ஓடி கொஞ்ச நேரத்துல எல்லா தெருவும் பழக்கமாகிடுச்சு ப்ரோ!” என்றார் போரூரிலிருந்து வந்திருந்த ஒரு ரசிகர்.

டிக்கெட் பெறுவதற்காகக் கூடியிருந்தவர்களில் 90% பேர் 25 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள்தான். அதில் சிலர் உண்மையிலேயே கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். ‘தோனியோட லாஸ்ட் சீசன் ப்ரோ. எவ்ளோ ரூபாய் கொடுத்துனாலும் பார்த்தே ஆகணும்’ என்றார்கள். பலர் அதே ஏரியாவைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்தது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட்டைப் பற்றிய அப்டேட்டே இல்லாமல் சும்மா அங்கே வந்திருந்தனர்.

சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை ஸ்பாட் விசிட்

`கோலி இந்த மேட்ச்சோட ரிட்டையர் ஆகுறாருப்பா’ அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என ஒரு இளைஞர் கூறினார். `என்னன்ணே சொல்றீக… இந்த விஷயம் கோலிக்குத் தெரியுமா…’ எனப் பதில் கேள்வியை கேட்டுவிட்டு அப்படியே அவரிடமிருந்து ஜகா வாங்கினோம்.

போரூர், குன்றத்தூர் என எங்கெங்கோ இருந்து கும்பலாக 10-15 பேராகச் சேர்ந்துதான் நிறைய பேர் வந்திருந்தனர்

“எங்கள பார்த்தா ப்ளாக்ல விக்குறவன் மாதிரியா சார் இருக்கு. போலீஸ்காரங்களும் லத்திய தூக்கிட்டு வராங்க. இங்க நில்லு, அங்க நில்லுன்னு சொன்னா கேட்டுப்போம். அதுக்கு எதுக்கு சார் அடிக்கணும்?” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியது தாம்பரம் அருகே இருந்து வந்து பல மணி நேரமாகக் காத்திருந்த ஒரு பாய்ஸ் கேங்.

விக்டோரியா ஹாஸ்டல் அருகே இருக்கும் டீக்கடையிலும் செம கூட்டம். டீ மாஸ்டரிடம் பேச்சு கொடுத்து டிக்கெட் சேல்ஸ் பற்றித் தேற்றலாம் என்றால் அதற்கு வழியே இல்லை. மாஸ்டர் அத்தனை பிஸி. பல மணி நேரமாகக் காத்திருந்த பலரும் அங்கேதான் பசியாறிக் கொண்டிருந்தனர்.

“டிக்கெட் சேல்ஸ் நடக்குதா?”

“ஆமாங்கண்ணு…”

“ப்ளாக்ல விக்குறாங்களா?”

“ஆமாங்கண்ணு…” என்றார். அதைத்தாண்டி எதையும் அவரிடம் கறக்க முடியாததால் சூடாக இஞ்சி டீயையும் வெங்காய போண்டாவையும் சுவைத்துவிட்டு அப்படியே அந்த விக்டோரியா ஹாஸ்டல் ரோடைக் கடந்து வாலாஜா ரோடு பக்கமாக வந்தோம். இந்த பக்கம் 2000-2500 ரூபாய் டிக்கெட்டுகள் வாங்க கூட்டம் வரிசை கட்டியிருந்தது. இங்கும் அதேமாதிரி அதே ஏரியாவைச் சேர்ந்த இளைஞர்களை வரிசையில் அதிகம் பார்க்க முடிந்தது. அவர்களை விசாரித்ததில் கிரிக்கெட்டில் நாட்டமில்லாத பதில்களே வந்தன.

சிலர் வரிசைக்கு வெளியே நின்றபடி, ‘என்னா சார்… இப்ப வந்தவனெல்லாம் முன்னாடி விட்டுட்டு இருக்கீங்க’ என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வரிசைகள் கூடும் எந்த இடத்திலும் இந்த மாதிரியான பஞ்சாயத்துகளைத் தவிர்க்கவே முடியாது போல. எல்லாரும் முண்டியடித்து லைனில் காரசாரமாக உரசலில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, ஒருவர் மட்டும் ஒரு ஓரமாக வெளியே ஜாலியாக நின்று கொண்டிருந்தார்.

“டிக்கெட் வாங்கவா சார் வந்தீங்க?” என அவரிடம் பேச்சு கொடுத்தேன். “ஆமாம்ப்பா… கவர்மெண்டு சர்வண்ட் நானு. டிக்கெட்டு வாங்கலாம்னு வந்தேன். ஆனா, இங்க இருக்குற கூட்டத்துல எப்டி புகுந்து டிக்கெட் வாங்குறதுனு தெர்ல. யாராவது லோக்கல் ஆளுங்க டிக்கெட் வாங்கிக் கொடுத்தா நாலாயிரம் ஐயாயிரம்னாலும் வாங்கிருவேன். எதாச்சு கான்டக்ட் இருந்தா கொடுங்க தம்பி…” என்றார் விரைப்பாக. “நீங்க எதாச்சு காண்டக்ட் இருந்தா கொடுங்க சார்…” எனச் சும்மா பதிலுக்கு அவரிடம் உதவிகேட்டு விட்டு விடைபெற முயன்றபோது, இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அருகே நின்ற இன்னொருவர் தன் பங்குக்குத் தனது கருத்தைக் கூற ஆரம்பித்தார். “ஆதார் கார்டு, ஃபிங்கர் பிரிண்ட்டெல்லாம் வாங்கிட்டு டிக்கெட்டு கொடுக்கணும் சார்… யார் டிக்கெட்டு வாங்குறாங்களோ அவங்கதான் மேட்ச்சுக்கு வரனும். அப்பதான் சார் ப்ளாக்ல விக்குறத தடுக்க முடியும்” என்றார்.

ஷங்கர் படங்களில் ஹீரோ புரட்சியாகப் பேசிய பிறகு மக்களிடம் மைக் நீட்டி கருத்து கேட்பது போல சீன் வைப்பாரே அதுதான் நினைவுக்கு வந்தது.

இப்படியான இடங்களில் தவிர்க்கவே முடியாத ஒரு ரகளையான கதாபாத்திரத்தையும் எப்போதும் பார்க்க முடியும். யதார்த்தமாக சேப்பாக்கம் பக்கம் ஒதுங்கியிருந்த குடிமகன் ஒருவரிடம், “அண்ணே…. எவ்ளோ ரூபாய் டிக்கெட் எடுக்கப் போறீங்க?” என்றேன்.

சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை

“200 வச்சிருக்கேன் எதாச்சு டிக்கெட்டு கொடுத்தா வாங்கிட்டுப் போவேன்” என்றார். அந்த சேப்பாக்கம் ஸ்டேடியமே ஒரு நிமிடம் துக்கம் தொண்டை அடைக்க குலுங்கிப் போனது.

‘அண்ணோவ் நீ நிக்க வேண்டிய லைனு பக்கத்து தெருல இருக்குணோவ்’ என அவருக்கு வழிகாட்டி விட்டு அப்படியே அந்த சேப்பாக்க தேசத்தில் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்தோம்.

நாம் பேச்சு கொடுத்ததில் ஒரு சிலர், “ஆமா சார்… 2000 ரூபாய்க்கு வாங்குறோம். 4000 ரூபாய்க்கு விக்குறோம். இவ்வளவு நேரம் நிக்கிறோம்ல. சும்மாவா…” என்ற கோபத்தோடும் பேசினர்.

“எல்லாருக்கும் அவ்ளோலாம் கொடுக்கமாட்டங்கப்பா… 100க்கும் 200க்கும் ஆசைப்பட்டு கீழே விழுந்து புரண்டு அவசரத்த அடக்கி இந்த வேலைய பார்த்து கொடுக்குறாங்க. அவங்களும் பாவம்தான்…” என ப்ளாக் டிக்கெட் விற்பவர்களைப் பற்றிய பரிதாப குரல்களையும் ஆங்காங்கே கேட்க முடிந்தது. “டிக்கெட் ரேட் அதிகம் சார்…” என்ற குமுறல்களையும் ஆங்காங்கே கேட்க முடிந்தது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசாருமே கொஞ்சம் திணறியிருந்தனர். போலீசாரிடம் பேசுகையில், “இங்க நிக்குறதுல 80% பேர் ப்ளாக்ல விக்குறதுக்குதான் டிக்கெட் வாங்குறாங்க. ஒரு கட்டத்துக்கு மேல எங்களாலயும் ஒண்ணும் பண்ண முடியல” என்கின்றனர் இயலாமையுடன்.

சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை

டிக்கெட் விற்பனை தொடங்கிய பிறகுமே கூட மந்தமான வேகத்திலேயே டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. டிக்கெட் கவுன்ட்டர்களும் ரொம்பவே குறுகலாகத்தான் வைக்கப்பட்டிருந்தன. மூச்சு முட்ட ரசிகர்கள் பலரும் திக்கித் திணறியதை பார்க்க முடிந்தது. குறைந்தபட்ச டிக்கெட்டுகளுக்கு பெண்களுக்கென தனிவரிசை இருந்ததாகவும் தெரியவில்லை.

ஒட்டுமொத்தத்தில் அங்கே அந்த சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றித் திரிந்ததில் ஒன்றே ஒன்று மட்டும்தான் தோன்றியது. டிக்கெட் விற்பனை கட்டாயம் முறைப்படுத்தப்பட வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.