சேலம், ஓமலூரில் நேற்று அ.தி.மு.க புறநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினார். தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை எடுத்துரைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்துப் பட்டியல்தான் வெளியிட்டார். ஊழல் பட்டியல் வெளியிடட்டும், பிறகு பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி

கர்நாடகத் தேர்தல் குறித்து நாளை (இன்று) நடைபெறவிருக்கும் செயற்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவுசெய்யப்படும். டி.டி.வி.தினகரன் லண்டனில் சொத்து வைத்திருப்பதாக தி.மு.க ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருக்கிறது. டி.டி.வி.தினகரனின் லண்டன் சொத்துகளைக் கண்டறிந்து, அவற்றை அரசுடைமையாக்க வேண்டும். ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார். அதனால் அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஓ.பி.எஸ்-ஸின் தர்மயுத்தம் எப்படியிருக்கும் என்று மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும்.

அ.தி.மு.க கடந்த சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்காததால், பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சசிகலா கூறினார். அ.தி.மு.க இப்போது செல்வாக்கு மிகுந்த கட்சியாக இருப்பதால், சசிகலா அடிக்கடி பேட்டி கொடுக்கிறார்” என்றார்.

பெரியகுளம் கலவர சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை செயலிழந்துவிட்டது. தலைவர்களின் பிறந்தநாள் விழாவில் பதற்றமான சூழ்நிலை இருக்கிறதென்றால், அங்கு உளவுத்துறை மூலம் ஆராய்ந்து பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டாலினுக்குத்தான் ஓர் அடிக்கு ஓர் அடி போலீஸார் நிற்கிறார்கள். வேறு எங்கேயுமே காவல்துறை பாதுகாப்பு இல்லை” என்றார்.

அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “சில அரசியல் தலைவர்கள் பேட்டி கொடுத்து தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொள்கின்றனர். அது போன்று பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். மூத்த தலைவர்கள் பற்றி கேளுங்கள், நான் சொல்கிறேன்” என்றார்.

`எதிர்க்கட்சித் தலைவர்மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படிதான் அ.தி.மு.க ஆட்சியில் கட்டடப் பணிகள் 55 சதவிகிதம் முடிக்கப்பட்டன.

ஸ்டாலின்

மீதி 45 சதவிகிதம் தி.மு.க ஆட்சியில் முடிக்கப்பட்டு, சான்று வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி விசாரணை செய்தால், ஸ்டாலினிடம்தான் முதலில் விசாரிக்க வேண்டும்.

சில இடங்களில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் ஸ்டாலின்தான் கையொப்பமிட்டிருக்கிறார். என்மீது பழி சொல்ல வேண்டும் என்பதற்காக இது போன்று சொல்லிவந்த ஸ்டாலின், இப்போது அவர் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார். சட்டமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சட்டமன்றத்தில் நான் பேசுவதை ஒளிபரப்பு செய்ய மறுக்கின்றனர். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எதிர்க்கட்சிகள் பேசுவதை மட்டும் ஒளிபரப்ப தடைசெய்வது, பயத்தால்தான். சட்டமன்றத்தில் ஜனநாயகம் கிடையாது. ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்குத் தகுதி கிடையாது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.