சமீபத்தில் வெளியான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. உரிமைத்தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்.

அவர், சாலையோரத்தில் வணிகம் செய்பவர்கள், மீனவப் பெண்காள், சிறுதொழிலில் குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும் யார், யாருக்கெல்லாம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற விவரம் வெளிவராத நிலையில் யாருக்கெல்லாம் அது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பெண்ணிய செயற்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

கவிதா கஜேந்திரன்

உரிமைத்தொகை குறித்து பெண்ணிய சிந்தனையாளரும், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினருமான கவிதா கஜேந்திரனிடம் பேசினோம். அவர், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்று குறிப்பிட்டபோது நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும். வீட்டில் வேலை செய்வதும் உழைப்பு என்ற பார்வையில் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நினைத்தோம்.

முதல்வரின் விளக்கத்தைப் பார்க்கும்போது, அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடுகிற பெண் தொழிலாளர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது புரிகிறது. ஆனால் அமைப்பு சாரா தொழில்கள் என்பதற்கு கீழே எக்கச்சக்கமான துறைகள் இருக்கின்றன. அத்தனை துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு கோடி பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவர் என்று அறிக்கை தெரிவித்துள்ள போதும், ஒரு கோடிக்கு மேற்பட்ட பெண்கள் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாருக்கும் இந்தத் தொகை வழங்கப்படுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இங்கே நடைபாதையில் வாழும் பெண்களுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. உரிமைத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்துவோம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. வங்கிக் கணக்கு குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பெரும்பான்மையான உழைக்கும் பெண்கள் இருக்கின்றனர்.

குறைந்தபட்ச பணம் வங்கிக்கணக்கில் வைத்துக்கொள்ள இயலாத, தெரியாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் பாதி பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் அரசின் கஜானா துடைத்தெடுக்கப்பட்டதால் அரசின் பொருளாதார நெருக்கடியையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நெருக்கடியிலும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் மேற்கூறியவற்றை எல்லாம் அரசு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்

வழக்கறிஞர் திலகவதி

வழக்கறிஞர் திலகவதியிடம் பேசினோம். அவர்,“கிராமங்களில் உடல்நிலை மற்றும் பிற காரணங்களால் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை, தனிக்குடும்பமாகக் கருதி ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் என்ற அடிப்படையில் திருநங்கைகளும், ஒற்றைப்பெற்றோராக குழந்தையை வளர்ப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும்”என்றார்.

அரசின் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது வரவேற்கக்கூடியது. ஆனால் விளிம்புநிலையில் உள்ள பெண்களும் இந்தத் திட்டத்தால் பயன்பெறுகிறார்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.