மெக்ஸிகோ தீ விபத்து!

அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள மெக்ஸிகோவின் சியுடாட் ஜுவாரெஸ் நகரத்திலுள்ள அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. திங்கட்கிழமைதான் புதிதாக சுமார் 71 அகதிகள் இந்த மையத்துக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த மாநிலத்தில் வரும் மே மாதத்துடன் தற்போதைய ஆட்சி முடிவுறும் நிலையில், கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரங்களை வேகப்படுத்தியிருக்கின்றன. அண்மையில் காங்கிரஸ், 124 வேட்பாளர்கள்கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அண்மையில் காலியாக அறிவிக்கப்பட்ட வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அண்மையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பன்னீர் தரப்பு மேல்முறையீடு… எடப்பாடி தரப்பில் கேவியட் மனு!
அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியதோடு, பன்னீர் தரப்பு வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையே அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். அதாவது, தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன் முகமது சபீக் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், `தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.