தூத்துக்குடி: போலி அரசு சான்றிதழ் தயாரித்த கும்பல்; மடக்கிப் பிடித்த போலீஸ் – என்ன நடந்தது?

தூத்துக்குடி, இந்திராநகரைச் சேர்ந்தவர் வந்தியதேவன். இவர், தன் நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தார். அதற்கு காவல் நிலையத்தில் மனு ரசீது பெற்று, காவல் நிலைய சான்று பெற உதவி செய்ய யாரேனும் உள்ளனரா என விசாரித்திருக்கிறார்.

இதனை தன் நண்பரான புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்ராஜிடம் கூறியிருக்கிறார். அவர், தன் நண்பர்களான புஷ்பாநகரைச் சேர்ந்த அசோகர், மறவன்மடத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த இம்மானுவேல், ரகுமத்துல்லாபுரத்தைச் சேர்ந்த காளீசுவரன் ஆகிய 5 பேரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதன்பின்னர் மனு ரசீது பெற்றுத் தர 30,000 ரூபாய் பணம் பெற்றுக் கொடுத்திருக்கிறார் பொன்ராஜ்.

போலி ரப்பர் ஸ்டாம்புகள்

அடுத்த சில நாள்களில் மனு ரசீதை வந்தியதேவனிடம் கொடுத்திருக்கிறார் பொன்ராஜ். அந்த மனு ரசீதை பெற்றுக் கொண்ட வந்தியத்தேவன், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொடுத்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான போலீஸ் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறார். அப்போது மனு ரசீதை தென்பாகம் போலீஸார் ஆய்வு செய்திருக்கின்றனர்.

அது போலியான ரசீது என்பது தெரியவந்திருக்கிறது. வந்தியத்தேவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவரின் நண்பரான பொன்ராஜ் மற்றும் சிலர் மூலம் மனு ரசீது பெற்ற விவரத்தைச் சொல்லியிருக்கிறார் வந்தியதேவன். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பொன்ராஜ், அவரின் நண்பர்கள் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து பொன்ராஜ், அசோகர், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீஸ்வரன் ஆகிய 5 பேரையும் கைதுசெய்தனர்.

போலி அரசு சான்றிதழ்கள்

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வீட்டுவரி ரசீது, கிராம கணக்கு அடங்கல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் போன்ற பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து போலீஸ் ஸ்டேஷன் சீல்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், மாநகராட்சி ஆணையாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,  தாசில்தார் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் இண்டர்நெட் சென்டர் நடத்தி வரும் இரண்டு பேர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

போலி ரப்பர் ஸ்டாம்புகள்

கைதான பொன்ராஜ், ஓட்டப்பிடாரம் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர். இவர், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவராவார். பொன்ராஜூக்கு சொந்தமான ரப்பர் ஸ்டாம்புகள் செய்யும் கடையிலும் போலீஸார் சோதனை நடத்தி 50-க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.