கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டி20 போட்டியில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

image

டெஸ்ட் தொடரை வென்ற தெ.ஆ! சமனில் முடிந்த ஒரு நாள் தொடர்!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இரண்டாது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

258 ரன்கள் குவித்து மலைக்க வைத்த மேற்கு இந்திய தீவுகள்!

இதில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது. இதன்மூலம் டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தை மேற்கிந்திய தீவுகள் பிடித்தது. இந்த அளவுக்கு அந்த அணி ரன்களைத் தொடுவதற்கு கைலே மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் ஆகியோர் காரணமாக இருந்தனர். அவர்கள் நடத்திய வாணவேடிக்கையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் விழிபிதுங்கி நின்றனர். மேயர்ஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 51 ரன்களில் வெளியேற, சார்லஸ் 46 பந்துகளில் 10 பவுண்டரி, 11 சிக்ஸருடன் 118 ரன்கள் குவித்து வெளியேறினார்.

image

இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 20வது இடத்தைப் பிடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது சாஸத் (118 ரன், 67 பந்து) மற்றும் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் (118 ரன், 43 பந்து) அந்தப் பட்டியலில் இணைந்தார். அவர்களுடன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்கியதால்தான் அந்த அணி 250க்கு மேல் ரன்னை குவிக்க முடிந்தது. இறுதியில் பவல் 19 பந்துகளில் 28 ரன்களும், ஷெப்பர்டு 18 பந்துகளில் 41 ரன்களும் ( 1 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்திருந்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும் பர்னல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதுவரை யாரும் 250 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை!

பின்னர் மிகமிகக் கடுமையான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. காரணம், டி20 போட்டிகளில் 250 ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை 2வது இன்னிங்ஸில் எடுப்பது என்பது இயலாத காரியம். ஆனால், அந்த ரன்களையும் எங்களால் எடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

சதம் விளாசிய டி காக்.. பவுண்டரி மழை பொழிந்த ஹெண்ட்ரிக்ஸ்

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க பேட்டர்களே மேற்கிந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அவர்களுடைய அதிரடியில் அந்த அணி 5.3 ஓவர்களிலேயே 100 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வெற்றிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குயிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்ஸருடன் 100 ரன்களில் அவுட்டானார். அதுபோல் ரீஷா ஹெண்டிரிக்ஸ் 28 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 68 ரன்களில் வீழ்ந்தார்.

image

வெற்றியை உறுதி செய்த மார்க்ராம்!

நல்ல தொடக்கத்தை அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்துவிட்டுச் சென்றதால் பின்னர் வந்த வீரர்களும் சோடை போகாமல் மேற்கிந்திய தீவு அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் எய்டன் மார்க்ராம் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

18.5 ஓவரிலேயே 259 ரன் சேஸ்.. தெ.ஆ அசத்தல் வெற்றி!

இறுதியில் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. மேற்கிந்திய தீவு அணி 20 ஓவரில் எடுத்த ரன்னை, 7 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே தென் ஆப்பிரிக்க அணி வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. மேலும், டி20 போட்டிகளில் இவ்வளவு பெரிய ரன்களை சேசிங் செய்து வெற்றிபெற்ற ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டும்தான்.

434 சேஸிங்கை நினைவூட்டிய போட்டி!

இதற்கு முன் இதே அணி, ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அடித்த அதிகபட்ச ரன்னையும் சேசிங் செய்து சாதனை படைத்தது. கடந்த 2006ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிலும் ஒரு பந்து மீதமிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றதன் மூலம் இன்று டி20யில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்த மேற்கிந்திய தீவு அணியை, கொஞ்ச நேரத்துக்குள்ளேயே கீழிறக்கியது.

image

தற்போது இந்த டி20 போட்டியில் பெற்ற வெற்றியையும் ஏற்கெனவே ஒருநாள் போட்டியில் சேசிங்கில் பெற்ற வெற்றியையும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை சேசிங் செய்து வெற்றி பெற்ற அணியில் தென் ஆப்பிரிக்கா வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதற்குமுன் 2018இல் நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய 245 ரன்களை சேசிங் சாதனையாக இருந்தது. அதை, தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.

இன்றைய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!

1. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் சேஸ் இது தான்.

இதற்கு முன்பு 2018இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த இடத்தை 259 ரன்களை சேஸ் செய்து தென் ஆப்பிர்க்கா தட்டிச் சென்றது.

2. ஒரே போட்டியில் அதிக ரன்கள்.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி குவித்த 258 ரன்கள், தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்த 259 ரன்கள் என இரண்டும் சேர்த்து இன்றையப் போட்டியில் மொத்தம் 517 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிக பட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு இந்த ஆண்டில் கிளேட்டிர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் எடுத்த 515 ரன்களே சாதனையாக இருந்துவந்தது.

3. பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.

தென் ஆப்ரிக்க அணி பவர் பிளேவின் 6 ஓவரில் 102 ரன்கள் குவித்தது. இதுதான் அதிகபட்ச பவர் பிளே ரன். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக குவித்த 98 ரன்கள் தான் முதலிடத்தில் இருந்தது.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.