சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கான் குர்ஜர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் கொக்கு வகையை சார்ந்த சாரசு கொக்கு என்றழைக்கப்படும் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை மீட்ட அவர், உடல்நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வந்தது. ஆரிப் கான் உண்ணும் தட்டிலேயே அது உணவு உண்ணும். அவரின் குடும்பத்தினரிடமும் அன்பாக பழகி வந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.  அதன்பின்பு ஆரிப் கான் – சாரசு கொக்கு இடையிலான நட்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது.

image

இந்நிலையில், ஆரிப் கானிடம் இருந்து சாரசு கொக்கை உத்தரப் பிரதேச வனத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். வனச் சட்டப்படி பறவையை வீட்டில் வளர்ப்பது குற்றம் என்றும் மேலும், இயற்கையான சூழலில் அந்த பறவை இருக்க வேண்டும் என்பதற்காகவும் ரேபரேலியில் உள்ள சமஸ்புர் பறவைகள் சரணாலயத்துக்கு அது மாற்றப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

image

இருப்பினும் ஆரிப் கானுடன் நட்பாக பழகி வந்த பறவையை பிரித்து சரணாலயத்திற்கு அனுப்பி வைத்ததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தார். பறவைகள் சரணாலயத்தில் விடப்பட்ட அந்த பறவையை காணவில்லை என்றும் பறவை விஷயத்தில் மாநில அரசு காட்டும் இந்த அலட்சியப்போக்கு முக்கியமாக பேசப்படவேண்டிய விவகாரம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் பிரதமர் இல்லத்தில் உள்ள மயில்களை எடுத்துச் செல்ல எந்த அதிகாரிக்காவது தைரியம் இருக்கிறதா எனவும் காட்டமாக பேசினார்.

image

இந்நிலையில்  சாரசு கொக்கை பராமரித்து வந்த ஆரிப் கான் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாரசு கொக்கை ஓராண்டாக வளர்த்து வந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி கவுரிகஞ்ச் கோட்ட வன அதிகாரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு  ஆரிப் கானுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.