அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அடுத்து வெளியிட்ட அறிக்கை மூலம், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் ‘மொபைல் பேமென்ட்’ நிறுவனமான ‘பிளாக்’ (BLOCK) ஒரேநாளில் சரிவைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக கடந்த மார்ச் 22ஆம் தேதி அறிவித்திருந்தது. அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

image

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேக் டார்சி நடத்தி வரும் ‘மொபைல் பேமென்ட்’ நிறுவனமான ‘பிளாக்’கை ஹிண்டன்பர்க் குறிவைத்துள்ளது. இந்த நிறுவனம் நிதிசார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. ஜேக் டார்சி, பிளாக் நிறுவனத்தை கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கியிருந்த நிலையில், இந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கொரோனா காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடித்த இந்நிறுவனத்தின் வணிகத்திற்கு பின்னால் மேஜிக் புதுமை அல்ல. பிளாக் நிறுவனம் அசல் பயனர் எண்ணிக்கையை அதிக அளவில் மிகைப்படுத்தி, அதன் வாடிக்கையாளர் செலவுகளைக் குறைத்தும் மதிப்பிட்டுள்ளது. மேலும், தொற்றுப் பரவல் காலத்தில் 18 மாதங்களில் இந்நிறுவனத்தின் கேஷ் ஆப் தளம், 639 சதவீத வளர்ச்சியை முறைகேடாக எட்டியுள்ளது” என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு ஜாக் டார்சியின் நிகர மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. நேற்று (மார்ச் 23) ஒரே நாளில் மட்டும் டார்சியின் சொத்து மதிப்பு $526 மில்லியன் சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிளாக் பங்குகள் ஒரே நாளில் 22% சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

image

கடந்த மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறையாகும். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அறிக்கைபடி, சொத்து மதிப்பு 11% சரிந்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு $4.4 பில்லியனாக உள்ளது. இருப்பினும், பிளாக் நிறுவனம் வழக்கம்போல தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

பிளாக் நிறுவனத்தில், தற்போது தலைமை நிதி அதிகாரியாக உள்ள, இந்தியாவைச் சேர்ந்த அம்ரிதா அகுஜா மீதும் பங்கு பரிவர்த்தனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் அடுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.