வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

“பெண்களுக்கு வீடு என்பது வெறும் வசிப்பிடம் அல்ல… ஒரு மாயத்தோட்டம். வீட்டுக்குள் போனதும் பெண் உருமாறி விடுகிறாள். ஆண்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத விநோதமும் ரகசியமும் சுகந்தமும் வீட்டினுள் இருக்கின்றன. ஆண்கள் வீட்டை பயன்படுத்துகிறார்கள், பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள்!” – எஸ். ராமகிருஷ்ணன் (அவளது வீடு சிறுகதையில்…)

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் “அவளது வீடு” சிறுகதையை விகடனில் வாசிக்க முடிந்தது. அக்கதையில் சிறுவயது முதலே தீப்பெட்டி மாதிரியான வீட்டில் வசித்து வந்த ஒரு பெண் தனக்கு எந்த மாதிரியான வீடு எந்த மாதிரியான வசதிகளுடன் கிடைத்திட வேண்டும் என்று கனவு காண்கிறார். எப்படியாவது அந்த மாதிரியான வீடு கிடைத்திட வேண்டுமென ஏங்குகிறார். ஆனால் அவருக்கு அமைந்ததெல்லாம் அதே தீப்பெட்டி மாதிரியான வீடு தான்.

இறுதியில் அவர் தன்னுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொண்டாரா இல்லையா என்பது மிச்சக்கதை. இக்கதையை வாசித்த பிறகு ஒரு பெண்ணுக்குள் இருக்கும் வீடு பற்றிய கனவுகளும் அதை காட்சிப்படுத்திய திரைப்படங்களும் மனதிற்குள் சுழன்றாட ஆரம்பித்தன.

Representational Image

அந்த வகையில் ஒரு பெண்ணின் மனதிற்குள் இருக்கும் சொந்த “வீடு” பற்றிய ஏக்கங்களை மூன்று தமிழ்த் திரைப்படங்கள் அழுத்தமாக நேர்த்தியாக பதிவு செய்திருக்கின்றன. அவை பாலுமகேந்திராவின் “வீடு”, வெற்றிமாறனின் “ஆடுகளம்”, செழியனின் “டூலெட்”.

“வீடு” படம், படித்த ஒரு இளம்பெண் தனியொரு ஆளாக சொந்த வீடு கட்ட எடுக்கும் முயற்சிகளையும் அதில் வரும் தடங்கல்களையும் அதை அந்த அப்பாவி இளம்பெண் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதையும் அழுத்தமாக பேசியிருந்தது.

வீடு திரைப்படம்

வாடகைக்கு இருக்கும் வீட்டை திடீரென காலிசெய்ய வேண்டிய சூழல் வர, தனது தாத்தாவுடன் அந்த இளம்பெண் வாடகைக்கு வீடு தேடி அலையும் காட்சிகளிலும், சொந்தமாக வீடு கட்ட முடிவெடுத்து அதற்காக அலைந்து திரியும் காட்சிகளிலும், படத்தின் கிளைமேக்ஸில் அவ்வளவு கஷ்டப்பட்டு கட்டப்பட்ட வீடு அப்பெண்ணுக்கு கிடைக்காமல் போய்விட நாயகி கலங்கி நிற்கும் காட்சிகளிலும் ஒரு பெண்ணின் மனதிற்குள் இருக்கும் சொந்த வீடு கனவுகள் எப்படிபட்டது என்பதை ரொம்பவே தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

“ஆடுகளம்” படத்தில் தனுஷின் அம்மா, அடிக்கடி பேசும் வசனம் “வீட்ட எப்படியாவது திருப்பிட்றா கருப்பு” என்பதுதான். “இது உங்க அப்பா வாழ்ந்த வீடு டா… நீ ஓடி ஆடி திரிஞ்ச வீடு” என்று தனுஷின் அம்மா தழுதழுத்த குரலில் சொல்லும் காட்சியில் அவரது மனதிற்குள் சொந்த வீடு குறித்த ஏக்கங்கள் எப்படிபட்டது என்பதை அறியலாம்.

ஆடுகளம்

தனுஷிற்கு சேவல் போட்டியில் பெரிய தொகை கிடைத்ததும், தனுஷின் அம்மா எப்படியும் வீட்டை திருப்பி விடலாம் என்று கனவு காண்கிறார். ஆனால் அந்தப் பணம் களவு போய்விட, மனம் நொறுங்கிப் போன அம்மா தூக்கத்திலயே உயிரை விடுகிறார்.

ரொம்பவே கனமான காட்சி அது. ஆடுகளம் படத்தின் கிளைமேக்ஸில் தனுஷும் டாப்சியும் ஊரைவிட்டு வெளியேற அப்போது தனுஷின் வீட்டைக்காட்டி “எப்படியாவது வீட்ட திருப்பிட்றா கருப்பு” என்று அவரது அம்மா பேசும் வசனத்தை ஒலிக்கவிட்டிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன்.

அந்த அம்மாவின் குரலில் இருக்கும் பல வருட ஏக்கம் நிச்சயம் நம் மனதை கலங்கடிக்கும். சற்று நிதானமாக யோசித்து பார்க்கையில் “வீடு” படத்தை எடுத்த பாலுமகேந்திராவிற்கு “வீட்ட எப்படியாவது திருப்பிட்றா கருப்பு” என்ற வசனம் ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்க கூடும் என்றும் அதனால் தான் ஆறு தேசிய விருதுகளை அப்படைப்பிற்கு பெற்றுத் தந்துள்ளார் என்றும் நினைக்க தோன்றுகிறது.

டூ லெட்

“டூலெட்” படத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு இளம்பெண் சந்திக்கும் சங்கடங்கள் எப்படிபட்டது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பார் இயக்குனர் செழியன். அதிலும் குறிப்பாக வீட்டில் குடியிருக்கும்போதே வீடு வாடகைக்கு பார்க்க வரும் நபர் ஒருவர் நாயகியின் கண்முன்னே அலமாரி கதவை திறக்க அப்போது நாயகியின் உள்ளாடை கீழே விழும் காட்சியும் அதை பார்த்த அந்த நபர் “ஸாரி… ஸாரி…” என பதறும் காட்சியும் அவ்வளவு வலி நிறைந்தது.

இந்த மூன்று படங்களும் தேசிய விருது வாங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.