கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றிப் பார்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ராமாயன கண்காட்சி கூடத்தை பார்வையிட்டார்.

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒருநாள் பயணமாக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு, தமிழக தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

இதைத் தொடர்ந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளத்திற்குச் சென்ற குடியரசுத் தலைவர் அங்கிருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கு அவரை விவேகானந்தர் நினைவு மண்டப நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் பேட்டரி கார் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றிப் பார்வையிட்ட குடியரசுத் தலைவர் அங்குள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

image

இதையடுத்து படகுமூலம் கரை திரும்பிய குடியரசுத் தலைவர், கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திற்குச் சென்றார். அங்குள்ள ராமாயன கண்காட்சி கூடத்தை பார்வையிட்ட அவர், பாரத மாதா கோவிலில் வழிபாடு செய்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு திரும்பிய குடியரசுத் தலைவர், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார்.

image

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி தென் மாவட்டங்களைச் சேர்ந்த 1800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ரோந்துக் கப்பல்கள் கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டன. தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிவிரைவு ரோந்து படகுகளில் கன்னியாகுமரி கடல் பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.