வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இந்த மாத இறுதியில் என்‌ மகனின்‌ பள்ளிப் பருவத்தின்‌ இறுதித் தேர்வுகள் முடிவடைந்து விடும்.‌ அதன்‌ பிறகு ஸ்கூல்‌ என்ற‌ வார்த்தை எங்கள் குடும்பத்தில் உச்சரிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நின்று‌விடும். ஐந்தாண்டுகளுக்கு முன்‌ என்‌ மகள் பள்ளிப்படிப்பை முடித்தபோது எனக்குப் பெரியதாக ஒன்றும் தோன்றவில்லை.‌ ஏனென்றால் அவளுக்கு அடுத்தபடியாக இருந்த என் மகன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான்..

குழந்தைகளின் உலகமும் சரி, அவர்களைப் பெற்றவர்களின் உலகமும் சரி.., என்னைப் பொறுத்தவரையில் மிகவும் உயிர்ப்புடன் இருக்கும் காலகட்டம் என்றால், அது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய காலங்களே..

Representational Image

எத்தனையோ ஆடைகளை அணிவித்து குழந்தைகளை அழகு பார்த்தாலும், அவர்களுக்கு பள்ளிச் சீருடைகள் போல் அழகான ஆடைகள் எதுவுமே இல்லை.. யூனிஃபார்ம், படிய‌ வாரிய‌ தலை, ஷூ..ஸாக்ஸ், ஐடி கார்டு, ஸ்கூல் பேக், லஞ்ச் பேக்.. இவற்றுடன் சேர்ந்த இவர்களின் காலை நேர..அம்மா போய்ட்டு வர்றேன்.. bye bye.. என்ற‌ வார்த்தைகள் எப்போதுமே காதில்‌ ஒலிக்கும் ரீங்காரங்கள் தான்..

பள்ளி வளாகங்கள்..‌இதைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். ஓபன்-டே எனப்படும் பேரன்டஸ்-டீச்சர் மீட்டிங் நாள் அன்றுதான் , குழந்தைகளின் வகுப்பறைக்குள் செல்ல முடியும்.. அன்று அவர்களின் பள்ளியை ஒரு சுற்று சுற்றலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரு ஆசிரியராகச் சென்று பார்ப்பது, அவர்களின் நம் குழந்தைகள் பற்றிய கருத்துக்கள்,. அறிவுரைகள், ஒவ்வொன்றும் அந்நாட்களில் புது அனுபவமாக இருக்கும். 

Representational Image

குழந்தைகளின் பள்ளி நாட்களில் நான்  மிகவும் ரசிப்பது ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் தான். என் குழந்தைகள் பங்கேற்றாலும் சரி..இல்லை என்றாலும் சரி, பள்ளி ஆண்டு விழாவிற்கு தவறாமல் சென்று கடைசிவரை இருந்து ரசிப்பது எப்போதுமே தடையில்லாமல் நடந்தது. குழந்தைகளின்‌ கலை நிகழ்ச்சிகள் என்றுமே அற்புதமானவை..

குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வீடுகளில் காணப்படும் காலை நேர‌ பரபரப்பு பின்னாட்களில் நினைத்து மகிழ வேண்டிய ஒன்று.

ஹோம் வொர்க் ஐ மறந்து, அவசரமாக செய்வது, ஒரு ஸாக்ஸ்  காணாமல் போவது, சாப்பிட்டதை வாந்தி எடுத்து கலாட்டா செய்வது, நீ போட்ட பின்னல் நல்லாவே இல்ல என‌ அதை அவிழ்த்து மீண்டும் போட வைப்பது, இவ்ளோ எண்ணெய்யை தலைல வக்காதீங்கமா என‌ சண்டை போடுவது, சில நேரங்களில் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்வது, எல்லாம் ரெடி செய்தபின்னர், நா வேணா இன்னிக்கு ஸ்கூலுக்கு லீவ் போடட்டுமா எனக் கெஞ்சுவது, இவையெல்லாம்‌ நடந்தேறாத வீடுகளே இல்லை‌ எனலாம்..

Representational Image

குழந்தைகளின்‌ பள்ளிப் பருவங்கள் மட்டும்தான்‌ அவர்கள் நம்முடன்‌ ஒட்டி உறவாடும் காலங்கள்.‌ அதன்‌ பின்னர் அவர்கள்‌ அவர்களின்‌ வாழ்க்கையைத் தேடி ஓடும் நிலைகளில் நம்முடன்‌ நேரம் செலவிடுவதென்பது குறைய‌ ஆரம்பித்து‌ விடும்.. எப்போதான்‌‌ இவங்க வளர்ந்து பெரியவங்க ஆகப்போறாங்களோ? எப்படித்தான்‌ இவர்களை வளர்க்கப் போகிறோமோ? என‌ அங்கலாய்த்துக் கொண்ட‌ பெற்றவர்கள் நாம் தான்.. அவர்கள் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என‌‌ அவர்களின் பள்ளி இறுதி நாட்களில் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்..

Mrs. J.Vinu

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.