திருச்சி மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் முடிவுற்ற பல திட்டங்களை இன்று காலை முதல் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து வருகிறார். அந்தவகையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ காலனியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நவீன இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கினை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

சேதப்படுத்தப்பட்ட வீடு

இந்த எஸ்.பி.ஐ காலனி பகுதியில் தான் தி.மு.க., எம்.பி திருச்சி சிவாவின் வீடும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், திட்டத் தொடக்க விழா கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயரும் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இது திருச்சி சிவா ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

அதையடுத்து நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் கே.என்.நேரு வெளியே வந்ததும், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், கே.என்.நேருவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடியைக் காட்டியிருக்கின்றனர். இதனைக் கண்டு ஆக்ரோஷமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், உடனே திருச்சி சிவாவின் வீட்டிற்குச் சென்று அவரின் வீடு, கதவு, ஜன்னல் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அடித்து நொறுக்கப்பட்ட கார்

இதில் திருச்சி சிவாவின் வீடு, கார் கடுமையாகச் சேதமடைந்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக கே.என்.நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டிய திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருச்சி சிவாவின் வீடு மீது தாக்குதல் நடத்திய கே.என்.நேருவின் ஆதரவாளர்களையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தி.மு.க., எம்.பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கே.என்.நேருவுக்கு எதிர்ப்பு காட்டியிருப்பதும், கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மீது தாக்குதல் நடத்தியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.