அமைச்சர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தஞ்சாவூர் வந்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தஞ்சை வந்ததால் அவருக்கு தி.மு.கவினர் பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

உதயநிதி

இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக தஞ்சாவூர் அரசு விழிச்சவால் மற்றும் காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய சாப்பாடாக மட்டன் பிரியாணி அமைச்சர் உதயநிதி கையால் பரிமாறுவதற்கான ஏற்பாட்டை தி.மு.க நிர்வாகிகள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதியம் ஒரு மணிக்கு தட்டில் மட்டன் பிரியாணியை போட்டதுடன் விழிச்சவால் மாணவர்களை அதன் முன் உட்கார வைத்து சாப்பிட வைக்காமல் காக்க வைத்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்க்கு மேல் தாமதமாக உதயநிதி வந்தார் அதன் பிறகே மாணவர்களை சாப்பிட வைத்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வேதனையுடன் நம்மிடம் பகிர்ந்தவர்கள், “விழிச்சவால் மற்றும் காதுகேளாதோர் அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகளுக்கு மேல் படிக்கிறார்கள். அங்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் உயதநிதி தன் கையால் மட்டன் பிரியாணி பரிமாறுவார் என்றனர்.

உதயநிதியை வரவேற்கும் யானை

எப்போதும் சரியாக 12.30 மணிக்கு அப்பள்ளி மாணவர்கள் சாப்பிட்டு விடுவார்கள். அந்த நேரத்திற்குள் உதயநிதி வந்து விடுவார் என கூறியிருந்தனர். அவர் வருவதற்கு தாமதமானதால் 1ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை சாப்பிட வைத்தனர். 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் உதயநிதி வந்த பிறகு சாப்பிடலாம் என்றனர். இதையடுத்து 1 மணியளவில் உதயநிதி வரப்போகிறார் என தட்டில் பிரியாணியை விழிச்சவால் மாணவர்களை உட்கார வைத்தனர்.

பிரியாணியின் வாசம் மாணவர்களுக்கு சாப்பிடத்தூண்டியது. ஆனால் தி.மு.க-வினர் உதயநிதி வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். அதுவரை யாரும் தட்டில் கை வைக்க கூடாது என சொல்லிவிட்டனர். நேரம் போனதே தவிர உதயநிதி வரவே இல்லை. மாணவர்கள் பசியால் தவித்து கொண்டிருந்தார்கள். தட்டில் பிரியாணி காய்ந்து விட்டது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரியாணி முன் சாப்பிடாமல் அமர்ந்திருந்தது பெரும் கொடுமை. இது தி.மு.கவினர் அறியத் தவறியது தான் வேதனை. அதன் பிறகு சுமார் மூன்று மணியளவில் உதயநிதி வந்தார்.

உதயநிதி

பார்வையற்ற மாணவர்களுக்கு உதயநிதி எப்படி இருப்பார் என்றே தெரியாது. அவர் குரலையாவது கேட்கலாம் என பசியோடு காத்திருந்தார்கள். ஆனால் அவர் வந்த உடனேயே, சில தட்டுகளுக்கு இனிப்பு பரிமாறினார். பின்னர் சாப்பிட சொன்னார்கள். சில நிமிடங்கள் மட்டுமே இருந்த உதயநிதி ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்று விட்டார். ஏன் இவ்வளவு நேரமாக சாப்பிடாமல் இருக்கிறீர்கள் என்று கூட அவர் கேட்க வில்லை.

விழிச்சவால் மாணவர்கள் பற்றியும், பசியை பற்றியும் நினைக்காமல் இதுவும் ஒரு நிகழ்ச்சியாக நினைத்து விட்டார் போல். மாணவர்கள் சாப்பிட்டு முடிக்க மாலை நான்கு மணி ஆகிவிட்டது” என்றனர் வேதனையுடன். மாணவர்களுக்கு அமைச்சர்கள், கட்சியினர் நலதிட்டங்களை நேரில் வந்து வழங்குவது நல்லது தான். கூடவே அவர்களின் கருத்துகளை பொறுமையாக கேட்டு இருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கு குறிப்பாக சிறப்பு குழந்தைகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் போது, அவர்களுக்கு எந்த விதமான அசெளகரியமும் இல்லாமல் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம் அடிப்படை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.