வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

கடந்த சில நாட்களாக நடிகர் கரண் பற்றி பல்வேறு தவறுதலான தகவல்கள் சமூக வலைதளங்களில் உளவிக்கொண்டிருக்கின்றன. நடிகர் கரண் பற்றி இங்கு ஒன்றும் பொிதாக அறிமுகம் தேவையில்லை. சில வருடங்கள் ஒரு குறிப்பிட்ட நடிக-நடிகையரை நாம் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லையென்றால், உடனே அந்தக் குறிப்பிட்ட நடிக – நடிகையரைப் பற்றி கண்டதெல்லாம் எழுதி, கீழ்த்தரமான பதிவுகளை சில அதிமேதாவிகள் எழுதிக்கொண்டிருப்பதையும் பார்த்தேன். சமீபத்தில் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் யூ டியூப் சேனலுக்கு கொடுத்த ஒரு நோ்காணல் பார்த்தேன்.

நடிகர் கரண் பற்றி அவர் கூறிய ஒரு சில விடயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும், கரண் பற்றி சிறப்பாகவே கலந்துரையாடினார் என்று நினைக்கையில் மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.

Actor Karan

சரி இப்போது விடயத்துக்கு வருகிறேன். நானும் பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் இருக்கிறேன். சமூக ஊடகங்களில் எழுதியும் வருகிறேன்.

எத்தனையோ மூத்த பத்திரிகையாளர்களோடும், ஊடகவியலாளர்களோடும் நெருங்கிப் பழகுபவன் என்கிற முறையில் இங்கே சில விடயங்களைப் பதிவு செய்ய நினைக்கிறேன். இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஒரு பொதுநல அடிப்படையிலான ஒன்றேயொழிய, நடிகர் கரணுக்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்காக அல்ல.

நானும் திரைத்துறையில் இருப்பதனால், பல்வேறு திரையுலகம் சார்ந்த நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். இந்தக் குரல் ஒட்டுமொத்த திரைத்துறையின் குரலாகத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

நடிகர் கரணை எனக்குக் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாகத் தொியும். அவர் தோற்றம் சற்று கம்பீரமாகவோ, திமிராகவோ பிறருக்குத் தோன்றலாம். ஆனால், அவரோடு பழகியவர்களுக்குத் தொியும், மிகவும் எளிமையானவர், அனைவரிடத்திலும் மிகவும் அன்பாக, சிரித்த முகத்தோடு பழகக்கூடியவர். பல வருடங்கள் அவர் மலையாளத் திரையுலகிலும் தமிழ்த் திரையுலகிலும் பிஸியாக இருந்தவர்.

Actor Karan

தனது மூன்று வயதில் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிக்கத் தொடங்கிய கரண், பல்வேறு உச்சபட்ச நட்சத்திரங்களுடன் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக உலக நாயகன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக நவரச நாயகன் கார்த்திக் நடித்த, இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’யில் அவர் ஏற்று நடித்த ஐ.சி.மோகன் (Inferiority Complex Mohan) கதாபாத்திரத்தை யாரும் எளிதில் மறந்துவிட இயலாது. 

பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கொக்கி, கருப்பசாமி குத்தகைக்காரர், கனகவேல் காக்க, காத்தவராயன், மலையன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். கொக்கி படத்திற்காக அவர் தன்னுடைய தோற்றத்தையே அபாரமாக மாற்றியிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. பிறகு 2016-17 வாக்கில் ‘உச்சத்தில சிவா’ என்ற படத்தில் நடித்தார்.

அப்படம் சரியாகப் போகவில்லை. அடுத்து சிறந்த கதைக்காகவும், சரியான வெற்றிக்காகவும் பயணிக்கும் வேளையில் கொரோனா பெருந்தொற்று வந்தது. அதன்பிறகு அவர் அமொிக்காவிலேயே போய் பதுங்கிக் கொண்டார் என்ற அண்டப்புழுகை நினைக்கையில் சிரிக்கத்தான் தோன்றுகிறது. 

இதை நான் ஆணித்தரமாக மறுப்பதற்குக் காரணம் நானும் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அமொிக்காவில் வசிக்கிறேன். நான் அங்கு ஹாலிவுட் படங்களில் பணிபுரிவதாலும், கரண் எனது நெருங்கிய குடும்ப நண்பர் என்கிற வகையிலும் பல வேளைகளில் அவர் அங்குள்ள திரை சார்ந்த விடயங்களை மிகுந்த ஆர்வத்தோடு விவாதிப்பார். 

Actor Karan

கரண் என்ற கலைஞனுக்கு உலக நாயகன் கமல் ‘நம்மவரில்’ சும்மா ஒன்றும் வாய்ப்புக் கொடுத்துவிடவில்லை. தனக்கு இணையாக சினிமாவை யார் நேசித்தாலும், அவர்களைக் கூடவே வைத்துக் கொண்டாடத் தவறாத உத்தமர் கமல் அவர்கள். அதில் குறிப்பாக காலஞ்சென்ற நடிகர் நாகேஷ், நாசர், கரண், அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்கள்.  

நடிகர் கரணோடு நானும் சில படங்களில் நடித்தும் இருக்கிறேன். யூடியூப் இந்தியாவில் பிரபலமாகாத காலகட்டத்தில் எனது அதிகாலை யூடியூப் வலையொளிக்காட்சிக்கு அவரை பிரத்தியேகமாக சில நேர்காணல்கள் செய்தும் இருக்கிறேன். அது மட்டுமின்றி அவரது உறவினர்கள் அமொிக்காவில் வசிக்கிறார்கள்.

Actor Karan

இரண்டு மூன்று முறை கரண் அமொிக்கா சென்று வந்ததை நானும் அறிவேன். “அவருடைய அமொிக்கப் பயணம், அவரது சினிமா சார்ந்த அடுத்த கட்ட நகர்வுக்கே ஒழிய, ஒளிந்துகொள்ள அல்ல” என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுபற்றிய அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவரத்தான் போகிறது. இறுதியாக, இதுபோன்று தவறுதலாக இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் எழுதும், காணொளிகள் தளமேற்றும் ஒரு சில அன்புச் சொந்தங்களுக்கும் மிகப் பணிவாக ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு நடிகரோ, நடிகையோ அல்லது எந்தத் துறை சார்ந்தவராயினும் அவர்கள் பற்றிய நல்ல குணாதிசயங்களையும், திறமைகளையும் கொஞ்சம் மேற்கோள் காட்டுங்கள். 

ஒரு நல்ல கலைஞனைப் பற்றி எழுத ஏராளம் இருக்கிறது. அப்படி எழுதினால், அவை புதிதாகத் திரைக்கு வரும் தலைமுறைக்குக் பயனுள்ளதாக இருக்கும். கரண் போன்ற எத்தனையோ திறமையான கலைஞர்களை தமிழ் திரையுலகம் இன்னும் தன் வசம் வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

திறமையுள்ள எவரையும், எந்தத் துறையும் நிராகரித்ததில்லை. பல்வேறு அழுத்தங்களாலும், பிரச்சினைகளாலும் அல்லது சரியான திட்டமிடுதலுக்காகவும், சந்தர்ப்பத்திற்காகவும், வாய்ப்புகளுக்காகவும், கதைகளுக்காகவும் தற்காலிகமாக வெளியில் வராமல் இருக்கிற பிரபலங்களைத் தேடிக் கண்டுபிடித்து இப்படி கேவலப்படுத்தாதீர்கள். 

Actor Kamal with Karan

நேற்று கரண் பற்றிய ஒரு செய்தியை வாசித்தவுடன் எனக்கு நெருடலாகப்பட்டது. ஒருவேளை அமொிக்காவில் இருப்பாரோ, நடுநிசியாயிற்றே என நினைத்து, இந்திய நேரப்படி நேற்று மதியம் புலனத்தில் (Whatsapp) நடிகர் கரணுக்கு ‘வணக்கம்’ என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அலைபேசியில் வருகிறார். வழக்கம்போல் சிரித்தபடியே ‘சொல்லுங்க நவின்’ என்கிறார்.

நான் அதிர்ந்துபோய் இன்னும் தூங்கலையா என்கிறேன். கலகலவெனச் சிரித்துக்கொண்டு, நவின், நீங்களுமா? அட போங்க நவின், நான் சென்னைலதான் இருக்கேன், என்கிறார். ‘என்ன கரண் இதெல்லாம்’ என்கிறேன். ‘நவின் நமக்கு நெறய வேலை இருக்கு, கடந்து போவோம், வாங்க…. என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கடந்து செல்கிறார். நமக்கும் நிரம்ப பணிகளும், தலையாயப் பொறுப்புகளும் இருக்கின்றன. கடந்து செல்வோம்.

வாழ்க தமிழ் ! வெல்க திரையுலகம் ! 

வற்றாத அன்புடன் 

– நவின் சீதாராமன் (அமெரிக்கா)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.