மும்பையில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவு நடந்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கியிலிருந்து வந்த போலி மெசேஜைப் பார்த்து, அதை க்ளிக் செய்ததால் 40-க்கும் அதிகமானோர் லட்சக்கணக்கில் தங்களது பணத்தை இழந்தனர். கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்யும்படி மெசேஜ் வந்திருக்கிறது. பொதுமக்கள் அதை க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருந்த தகவல்களைப் பதிவுசெய்து, ஒன் டைம் பாஸ்வேர்டையும் பதிவுசெய்தபோது சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டது.

நக்மா

இந்த நிலையில், இதே மோசடியில் நடிகை நக்மாவும் சிக்கியிருக்கிறார். இது குறித்து நடிகை நக்மா போலீஸில் அளித்திருக்கும் புகாரில், “எனது போனுக்கு, `உங்கள் வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மெசேஜ் லிங்க் வந்தது. நான் அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், எப்படி கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

மோசடிப் பேர்வழி எனது போனை அவரது கட்டுப்பாட்டில் எடுத்து, எனது இன்டர்நெட் பேங்கிங் கணக்கைத் திறந்து… அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டார். அந்த நபரிடம் நான் எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை. அப்படியிருந்தும் பணம் பற்போய்விட்டது. எனது போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்தன.

அதன் மூலம் எனது வங்கிக் கணக்கிலிருந்து அதிக அளவில் பணம் எடுக்க முயன்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களால் அதிக அளவில் பணம் எடுக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த சில நாள்களில் மட்டும் இதே போன்ற மோசடியில் 80-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

காவல்துறை

அதுவும் ஒரு தனியார் வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்துவருகிறது. பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்றும், வங்கிகள் ஒருபோதும் ஒன் டைம் பாஸ்வேர்டு கேட்பதில்லை என்றும் போலீஸார் எச்சரித்திருக்கின்றனர். நடிகை நக்மா இப்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். தமிழில் `பாட்ஷா’ உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் நக்மா, இப்போது அரசியலில் கவனம் செலுத்திவருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.