புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில், ’கோசலை ஃபயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று மாலை அரியாங்குப்பம் ஓடவள்ளி பகுதியை சேர்ந்த மேகலா, சுமதி,  சிவனார்புரத்தை சேர்ந்த பிருந்தா, சக்தி,கோசலை, மனவெளி பகுதியை மனைவி மல்லிகா, பாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த அம்பிகா, செவ்வந்தி, லட்சுமி உள்ளிட்ட 10 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4 மணியளவில் அந்த பட்டாசு தயாரிக்கும் இடம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

பட்டாசு ஆலை விபத்து

இதில் அந்தப் பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த விபத்தில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டாட்டா சுமோ மற்றும் ஒரு கார் பலத்த சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த பிருந்தா, அம்பிகா, செவ்வந்தி, லட்சுமி, சுமதி, ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேகலா, சக்தி, கோசலை, ஆகியோர் சிகிச்சைக்காக ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம், டி.எஸ்.பி கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் வெடித்து சிதறியதில், அருகில் உள்ள நல்லவாடு பகுதியில் இருந்த தொகுப்பு வீடுகL சிலவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் கடலூர் எஸ்.பி ராஜாராம்

மேலும் ஜன்னல் கண்ணாடிகளும் சிதறி விழுந்தன. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, நில நடுக்கமா என்று பயந்து வெளியே ஓடிவந்து பார்த்தனர். அதன்பின்னர்தான் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது அவர்களுக்கு தெரியவந்தது. இந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சேகர் என்பவர் தனது மனைவி கோசலை பெயரில் உரிமம் பெற்று நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடந்த போது கோசலையும் பணியில் இருந்துள்ளார் மேலும், இந்த பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது இதை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு தென்னந்தோப்பில் கொட்டகையில் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் வெடி விபத்து ஏற்பட்டவுடன் அந்த கொட்டகை முழுவதும் தரைமட்டமானது. அதில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறி உள்ளன. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாசி மகம் விழாவுக்கு கடற்கரை கிராமங்களில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும் போது இரவு நேரங்களில் வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்படும் இதற்கு அதிக அளவில் பட்டாசுகள் தேவைப்படும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பட்டாசு ஆலை விபத்து

விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனும், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியனும் சந்தித்து ஆறுதல் கூறினர்.  அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், “கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட மதலப்பட்டு என்கிற கிராமத்தில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் தயாரிப்பு தொழில் கூடம் செயல்பட்டு வருகிறது . இங்கு மாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் சிக்கினார்.

இதில் ஒன்பது பேர் பெண்கள். விபத்தில் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டவர்களில் ஒரு பெண் பலியாகி உள்ளார். மேலும் ஐந்து பேர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு பேர் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடி பொருள்கள் தயாரிப்பு கிடங்கு உரிய லைசென்ஸ் பெற்று செயல்படுகிறது என வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர் . ஆனால் இதில் முழுமையான உரிமம் பெற்றுள்ளனரா என்பது குறித்தும்  விபத்து தொடர்பாகவும் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை அமையும். மேலும் தீக்காயம் அடைந்தவர்கள் மற்றும் வெடி பொருள்கள் தயாரிப்பு தொழில் கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர் மற்றும் படுகாயம் அடைந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதற்காக தமிழக முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். சிகிச்சை முறைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருந்து மேற்கொள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.