‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் இரண்டாவது நாளாக இன்று மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, தேனி மாவட்டங்களின் ஆட்சியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் தொன்மை நாகரிகத்தின் முக்கியமான பகுதியாக விளங்கக்கூடிய தென் மாவட்டங்களைப் பொருளாதாரரீதியாகவும், தொழில்ரீதியாகவும் மேம்படுத்தவேண்டி இந்த அரசு பல திட்டங்களை வகுத்துவருகிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களில், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மனுக்களைப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காட்டப்பட வேண்டும். இவை ஏழை, எளிய, விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய திட்டங்கள்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தொகையை விரைந்து முழுமையாகச் செலவு செய்து முடியுங்கள். இன்றைய ஆய்வின்படி கடந்த ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணிகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதைக் கருத்தில்கொண்டு, பணிகளைத் துரிதப்படுத்துங்கள்.

ஆய்வுக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர்களாகப் பணிபுரியும் நீங்கள் அரசின் முன்னுரிமை இனங்கள் எவை என்பதை தெளிவாக உணர்ந்து செயலாற்ற வேண்டும். யாரால் உரத்த குரல் கொடுக்க முடியாதோ, அவர்களின் தேவையை உணர்ந்து நிறைவேற்றித் தருவதே அரசு நிர்வாகம். அந்த வகையில், சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் மக்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், அரசு மருத்துவமனையை நாடும் ஏழை, எளிய மக்கள், அரசுப் பள்ளிகள், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர், திருநங்கையர் ஆகியோரின் தேவைகளை, குறைகளை அறிந்து நிறைவேற்றித் தரவேண்டியது நம் அனைவருடைய கடமை.

இந்த அரசின் முக்கியமான புதிய திட்டங்களை நீங்கள் பட்டியலிட்டுப் பார்த்தால் அவற்றில் ஓங்கி ஒலிப்பது, சமூகநீதியின் குரல். அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழ் மொழி மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மைகளைப் போற்றிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல் எனக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்தத் திட்டங்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பான தேவை இருக்கும். உதாரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பழ வகைகள், காய்கறிகள் விவசாயம் தொடர்பான தேவைகள் இருக்கும். மலை மாவட்டம் என்பதால் சில சிறப்புத் தேவைகள் இருக்கும். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அவ்வப்போது காணப்படும் வறட்சி நிலை, பெரும் தொழில்கள் இல்லாததால் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கவேண்டிய தேவை அங்கு இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் குறிப்பிட்ட வளர்ச்சி தொடர்பான தேவைகள் எனக் குறிப்பிடலாம்.

மனுக்களைப் பெற்ற முதல்வர்

அரசு எத்தகைய பெரிய திட்டங்களை வகுத்தாலும், அவற்றைச் சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய பெரும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட நிலையிலுள்ள அலுவலர்களுக்கும்தான் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு முக்கியமான இனம், பட்டா மாறுதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், சான்றிதழ்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குதல் ஆகியவை. ஒரு விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலகத்தில் மனு சமர்ப்பித்தால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள், ஏற்கெனவே சட்டத்தில் வகுத்தபடி இருக்கும் கால அளவுக்குள், அந்தச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் அல்லது ஏன் வழங்க இயலாது என்பதற்கான தகவல் அவருக்குச் சென்றடைய வேண்டும். மக்கள் பணி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்யவேண்டியதாகும். பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை நாடி வந்து மனுக்களைச் சமர்ப்பிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் அரசு. எனவே, உங்களால் இயன்றவரை அந்தப் பிரச்னையை, தேவையைப் பூர்த்திசெய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல, அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தீர்கள். உங்கள் உறுதிமொழிகளைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு என்றும் துணை நிற்கும்” என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதியம் வரை நடந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய முதலமைச்சர், ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பும், விருந்தினர் மாளிகைக்கு முன்பும் காத்திருந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.