விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `காற்றுக்கென்ன வேலி’. அந்தத் தொடரில் ரூபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் டயானா. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கனா’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

டயானா

“என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். எதார்த்தமா என் வாழ்க்கையில் அமைஞ்சதுதான் மீடியா. ஒரு விபத்தில் என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. சின்ன வயசில இருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மையோடு குண்டா இருக்கிற பொண்ணுங்க லைஃப்ல என்னெல்லாம் அனுபவிப்பாங்களோ அதெல்லாத்தையும் நானும் அனுபவிச்சிருக்கேன். பாடிஷேமிங் மட்டுமில்லை.. `உன்னையெல்லாம் யார் கட்டிப்பாங்க?’னுலாம் என்கிட்ட கேட்டிருக்காங்க. என் வாழ்க்கையில் மேஜிக் மாதிரி அமைஞ்சதுதான் ஆக்டிங்!

சினிமாவில்தான் என்னுடைய கரியரை ஸ்டார்ட் பண்ணினேன். `பிளாக் பசங்க’னு ஒரு யூடியூப் சேனலில் நடிச்சிட்டு இருந்தேன். அது மூலமாகத்தான் `காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஆஃபர் கிடைச்சது. அப்படித்தான் இந்த சீரியலில் என்ட்ரியானேன். ரெண்டு வருஷம் சூப்பரா இந்த சீரியல் போயிட்டு இருந்துச்சு ஆனா இப்ப நான் அந்தத் தொடரில் இல்லை!”னு சொல்லவும் ‘என்ன ஆச்சு?’ எனக் கேட்டோம்.

டயானா

“2021-ல் ஒரு பெரிய படத்துல நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. எந்த செட்டியூலையும் மிஸ் பண்ணிடாம நடிச்சுக் கொடுத்தேன். துபாய்ல ஒருத்தங்க என்னை அடையாளம் கண்டுபிடிச்சு சூப்பரா நடிக்கிறீங்கன்னு பாராட்டினாங்க. அந்த அளவுக்கு இந்த சீரியல் மூலமா எனக்கு ரீச் இருந்துச்சு. அதனாலேயே எந்த அளவுக்கு அந்த சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமோ அந்த அளவுக்குக் கொடுத்தேன். ஆனால, சிக்கல் என்னன்னா தேதி பிரச்னைதான்… அதுவும் அவங்க எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணியிருந்திருக்கலாம். எனக்கும் ஒரு கரியர் இருக்கு. நான் பண்ணின ஒர்க் எல்லாத்துலயுமே எந்தப் பிரச்னையும் வராம பார்த்துக்கிட்டேன். ஏதோ சின்ன கிளாஷ். அதனால என்னை சீரியலிலிருந்து தூக்கிட்டாங்க.

பொதுவா எல்லாரும் நாங்க 15 நாளும் நடிக்கிறோம்னு நினைக்கிறாங்க. ஆனா, அப்படியில்லை. 15 நாள் நடக்குற ஷூட்டிங்கில் எங்களுக்கு 2, 3 நாள்தான் ஷூட்டிங் இருக்கும். தவிர, எங்களுக்கு இதுக்காக பெரிய பேமென்ட் எல்லாம் கிடையாது. நாங்க எல்லாம் சின்ன ஆர்ட்டிஸ்ட். எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது ரைட்டர்ஸ் கையிலதான் இருக்கு. என்னதான் மீடியா, அது இதுன்னு சொன்னாலும் இதுவும் ஒரு கார்ப்பரேட் கம்பெனிதாங்க!” என்றவரிடம் ஹரியின் தற்கொலை குறித்துக் கேட்டோம்.

டயானா

“செட்ல நாங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். மூணு மாசத்துக்கு முன்னாடியும் தற்கொலைக்கு முயற்சி பண்ணினான். அதுவும் `காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் இருந்து தூக்கிட்டாங்க. ஏன் தூக்கினாங்க, எதுக்கு தூக்கினாங்கன்னு எதுவுமே தெரியல. நாங்களே குழப்பத்துலதான் இருந்தோம். நான் பெருசா பேட்டியே கொடுக்க மாட்டேன். இப்ப ஏன் கொடுக்கிறேன்னா சாகுறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணினான். அந்தக் குற்ற உணர்ச்சியில்தான் இப்ப பேசுறேன்.

போன் பண்ணி ”தவமாய் தவமிருந்து’ சீரியலிலும் பெருசா டேட்ஸ் இல்ல. ஏதாவது ரெஃபரன்ஸ் இருந்தா சொல்லுங்க’ன்னு சொன்னான். ‘எனக்கும் பெருசா தெரியாதுடா. நான் படங்கள் பண்ணிட்டு இருக்கேன். உனக்கும் ரெஃபர் பண்றேன்’ன்னு சொன்னேன். அப்பவும் அவன்கிட்ட, ‘விடுடா பார்த்துக்கலாம்..!’னு சொன்னேன். டக்குன்னு யாரை வேணும்னாலும் அவங்க தூக்கலாம். நாம அவங்களை மட்டும் பிளேம் பண்ணிட முடியாதுதான். ஆனா, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாங்க… அந்த வாய்ப்பு உச்சாணிக் கொம்புக்குக் கூட்டிட்டுப் போச்சு… அப்படியே சட்டுனு கீழே போட்டுட்டா என்ன பண்றது? அவங்களும் பாவம் இந்தப் பசங்க கஷ்டப்பட்டு மேலே வந்திருக்காங்கனு நினைக்கலாம். இதை உசுரா நினைக்கிறவங்களால வேற வேலைக்கும் போக முடியாது. அதுதான் இங்க பிரச்னையே!

டயானா

ஹரிக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. ரொம்ப நல்ல பையன். வெற்றி, தோல்வி ரெண்டையும் ஏத்துக்கிற மனப்பான்மை வேணும்தான். ஆனா, என்னைக் கேட்டா, அவன் ஏத்துக்கிட்டான்னுதான் சொல்லுவேன். என்னை ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில் தூக்கின பிறகு சர்வைவலுக்காக ஒரு மாசம் என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்ப மறுபடி நடிக்க வாய்ப்பு கிடைச்சது. வேலையில் நல்ல பேமென்ட், நடிக்கப் போனா நார்மல் பேமென்ட்… ‘சரி பரவாயில்லை’ன்னு வேலையை விட்டுட்டு நடிக்க வந்துட்டேன். அவனுக்கு என்னை மாதிரி மாற முடியல. அவன்கிட்ட அவ்வளவு திறமை இருக்குங்க… நிச்சயம் பெரிய ஆளாகணும்னு ரொம்ப போராடிட்டு இருந்தான்!” என்று கலங்குகிறார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து டயானா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.