ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்:

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கோச்சடை, பல்கலைக்கழகம், செக்கானூரணி வழியாக அம்பட்டையான்பட்டி வரை செல்லும் டி.என்-58 என்-2028 என்ற எண் கொண்ட மாநகராட்சி பேருந்து மிகவும் மோசமான நிலையிலும், பயணிகள் பயன்படுத்த ஏதுவான நிலையில் இல்லாத போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் பயணிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மதுரை பேருந்து

பெரியாரிலிருந்து அம்பட்டையான்பட்டி வரை செல்லும் பேருந்தை, பள்ளி மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் இந்த போக்குவரத்தையே பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

 இது மட்டுமின்றி அதிகாலை மார்க்கெட்டில் வியாபாரம் முடித்து, பகலில் வீடு திரும்புவோர் என, சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடமாக இது இருக்கிறது.  இந்நிலையில் இந்த பேருந்தில் பின்பகுதியில் இருக்கும் கண்ணாடி மற்றும் தகரம் உடைந்து பெரிய ஓட்டையாக இருந்தது. மழை பெய்தால் பெருமளவு தண்ணீர் இதன் வழியாக பேருந்திற்குள் வரும் நிலையே உள்ளது.

பின்பகுதி படிக்கட்டு இருக்கும் இடத்தின், மேற்பகுதியில் இருக்கும் தகரம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது.  மொத்தமாக கீழே விழுந்து விடாமல் இருக்க ஒரு மூலையில் கட்டுக் கம்பி போட்டு கட்டி வைத்திருந்தார்கள். பேருந்து கொஞ்சம் வேகமாக சென்றால் கூட ரோட்டில் இருக்கும் குண்டு குழிகளின் தாளத்திற்கு ஏற்ப இந்த தகரமும் ஆட துவங்கிவிடுகிறது. வயதானவர்களும் பேருந்தில் பயணிக்கிறார்கள், அவர்கள் மெதுவாக இறங்குவதற்குள் அது எங்கு கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இது மட்டுமின்றி பேருந்தின் வலது புறத்தில், அதாவது ஓட்டுநரின் பின்னால் இருக்கும் இருக்கைகளின் வரிசையில், மேற்பரப்பில் இருக்கும் தகரமும் உடைந்து இருந்தது. விழுந்துவிடாமல் இருக்க இதனை பிளாஸ்டிக் கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.

மதுரை பேருந்து

இது குறித்து கல்லூரி மாணவி ஒருவர் கூறியதாவது, “பெரியார்-ல இருந்து நாங்க போக வேண்டிய இடம் கொஞ்சம் தூரம். ரொம்ப நேரம் நின்னுக்கிட்டே போக முடியாது. சீட் இருக்கு உட்காரலாம்னு உட்கார்ந்தா, பள்ளம் வரும்போது எல்லாம் இது எங்க தலையில விழுந்திருமோன்னு பயமா இருக்கு” என்றார்.

 மேலும் பின்புறம் இருக்கும் பெயர்ப் பலகை வைக்கும் பெட்டியிலும் தாழ்பாள் இல்லாததால் அதனையும் கயிறு போட்டு கட்டி வைத்திருந்தனர். இது தவிர சில இடங்களில் கம்பிகளின் இணைப்பு பிரிந்தும், மரப்பலகைகளில் ஆணியின்றி கீழே விழும் அபாயமும் இருந்தது. மேலும் முன்பகுதி படிக்கட்டின் மேற்பகுதியிலும், கூர்மையான முனையுடன் கூடிய தகரம் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

ஜன்னலின் கண்ணாடிகள் பெரும்பாலானவற்றை சரிவர மூட முடியவில்லை. மேலும் பல ஜன்னல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமாக இருந்தது. இதனால் சிறிய குழந்தைகள் பயணிக்கும்போது, காயம் ஏற்படும் அபாயமும் இருந்தது.

மதுரையில் விசாரித்தால், இதே நிலையில் தான் ஏராளமான மாநகராட்சி பேருந்துகளும் இருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. விபத்து ஏற்பட்ட பிறகு சரி செய்யாமல் முன்பே இதை கவனிக்கலாமே..

மதுரை பேருந்து

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளரைத் தொடர்பு கொண்டு பேசிய போது, ”இப்படி பழுதடைந்த   பெரும்பாலான பேருந்துகளை அவ்வப்போது கவனிச்சு சரி  செய்துட்டு இருக்கோம். சில பேருந்துகள்ல  இது  போன்ற  பிரச்னைகள் இருக்கலாம். இனி அதையும் கருத்தில் கொண்டு  விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேருந்துகள் சரி  செய்யப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.