சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாலிங்கம், இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி ராஜாலிங்கம், தன்னுடைய காரில் மாமல்லபுரத்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கேளம்பாக்கம் பகுதியில் காரில் வந்துக் கொண்டிருந்த ராஜாலிங்கத்தின் கார் மோதி இளம்பெண் ஒருவர் காயமடைந்ததாகக் கூறி ஒரு கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஆணும் இளம்பெண்ணும் ராஜாலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரௌடி முரளி

பின்னர் அந்த ஆண், ராஜாலிங்கத்தைத் தாக்கிவிட்டு அவரின் காரின் சாவியைப் பறித்துக் கொண்டார். பின்னர் காயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சமயத்தில் ராஜாலிங்கத்தின் காரை அவரைத் தாக்கிய ஆண் எடுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ராஜாலிங்கம், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னுடைய காரை திருடி சென்றுவிட்டதாக புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிளாட்சன்ஜோஷ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனால் மாதங்கள் கடந்தாலும் காரைத் திருடிச் சென்றவர்கள் குறித்த தகவல்கள் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்கு பைக்கில் வந்த ஆண், பெண் யார், அவர்கள் வந்த பைக்கின் பதிவு நம்பர்களை ஆய்வு செய்தனர். அப்போது திருவான்மியூரில் அதே பதிவு நம்பரைக் கொண்ட பைக்கை போலீஸார் கண்டறிந்தனர். ஆனால் அந்த நபருக்கும் கார் திருட்டு சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பு இல்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அப்போதுதான் பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் போலி பதிவு நம்பரைப் பயன்படுத்தியதையும் போலீஸார் கண்டறிந்தனர்.

கையில் மாவு கட்டுடன் முரளி

இந்தநிலையில் பைக்கில் வந்த ஆண் நபரின் சிசிடிவி காட்சியிள் தெளிவான பதிவு போலீஸாருக்கு சில தினங்களுக்கு முன்பு கிடைத்தது. அதைக் கொண்டு ஆய்வு செய்தபோது அது பிரபல ரௌடி முரளி எனத் தெரியவந்தது. இதையடுத்து முரளியுடன் வந்த பெண் யாரென்று போலீஸார் விசாரித்தனர். 4 மாத தேடுதல் வேட்டைக்குப்பிறகு முரளியும் அவரின் மனைவி சங்கீதாவையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திருடிய காரை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாகத் தெரிவித்தனர். முரளி அளித்த தகவலின்படி அந்தக் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் .கூறுகையில், “கைதான ரௌடி முரளி மீது இரண்டு கொலை, ஒரு கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முரளியைக் கைது செய்ய முயன்றபோது அவர் தப்பி ஓடியதில் அவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டிருக்கிறது. கைதான முரளி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல ரௌடி ஒருவரின் டீமில் இருந்தார். அப்போது அவரின் மனைவி விவகாரத்தில் அந்த பிரபல ரௌடியைவிட்டு பிரிந்து அவரின் எதிரணியில் முரளி இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார்.

போலீஸ் டீம்

சம்பவத்தன்று முரளியும் அவரின் மனைவி சங்கீதாவும் பைக்கில் மாமல்லபுரத்துக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது நடந்த விபத்து சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய முரளி, சொகுசு காரைத் திருடி அதை விற்று அந்தப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. சொகுசு காரைத் திருட கணவர் முரளியுடன் சேர்ந்து சங்கீதாவும் உதவி செய்திருக்கிறார். அதனால்தான் அவரையும் இந்த வழக்கில் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.

நூதன முறையில் சொகுசு காரைத் திருடிய வழக்கில் ரௌடி முரளி மற்றும் அவரின் மனைவி சங்கீதா ஆகியோரைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை கமிஷனர் அமல்ராஜ் பாராட்டியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.