பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியாக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருந்தது.

இந்திய அணியில் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுலுக்குப் பதில் கில் களமிறக்கப்பட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் முகமத் சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினார்கள்.

டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கில் இணை களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட் வாய்ப்பைத் தவறவிட்டது ஆஸ்திரேலியா. முதல் பந்திலேயே எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார் ரோஹித் சர்மா. ஆனால் ஆஸ்திரேலியா ரிவ்யூ எடுக்கவில்லை. அதே ஓவரில் LBW ஒன்றுக்கும் ரிவ்யூ எடுக்காமல் இருந்தது ஆஸ்திரேலியா. இருப்பினும் மேத்யூ குனமான் தனது முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவை 12 ரன்களில் அவுட் ஆக்கினார். 21 ரன்கள் எடுத்திருந்த கில், குனமானின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

Pujara

ஆஸ்திரேலியா அணியின் முதன்மை ஸ்பின்னரான நாதன் லயனுக்குக் களம் நன்றாக செட் ஆகியிருந்தது. லயன் தனது முதல் ஓவரிலேயே புஜாராவை ஒரு ரன்னில் அவுட் ஆக்கி வெளியேற்றினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன் நான்காவதாக ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஆனால் நான்கு ரன்களில் லயன் பந்துவீச்சில் குனமானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்திலேயே லயன் பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். 45 ரன்களில் 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது இந்திய அணி. விராட் கோலி, கே.எஸ் பரத் ஜோடி சற்று ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஆனால் 22 ரன்களில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தினார் மர்ஃபி.

கே.எஸ்.பரத் 17 ரன்கள் எடுத்திருந்தபோது லயன் பந்தில் LBW அவுட் ஆனார். அஷ்வினும் நான்கு ரன்களின் அவுட் ஆனார். உணவு இடைவெளிக்குப் பின், 33.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணி. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் லயன், குனமான் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணியை இவ்வளவு குறைவான ரன்களில் சுருட்டியதற்கு இவர்களின் பந்துவீச்சு முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. அதிகபட்சமாக மேத்யூ குனமான் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். நாதன் லயன் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அடுத்ததாக, ஆஸ்திரேலியா அணி முதலாவது இன்னிங்ஸை தொடங்கியது. டேவிட் வார்னர் அணியில் இல்லை. டிராவிஸ் ஹெட் உஸ்மான் கவாஜா இணை ஓபனிங் செய்தனர். ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் டிராவிஸ் ஹெட் ஒன்பது ரன்களில் வெளியேறினார்.

மீண்டும் ஜடேஜா ஓவரில் மார்னஸ் லபுஷேன் அவுட் ஆகினார். ஆனால் அது நோ பால் என்பதால் விக்கெட் திரும்பப்பெறப்பட்டது. உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர்.

Jadeja

தேநீர் இடைவெளிக்குப்பின் இருவரும் அதே ஆட்டத்தை தொடர்ந்தனர். உஸ்மான் கவாஜா தனது 21வது அரை சதத்தை அடித்தார். இருவரின் கூட்டணியில் ஆஸ்திரேலியா அணி 100 ரன்களை கடந்தது. பொறுப்புடன் ஆடிக் கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். அடுத்து, ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். ஆஸ்திரேலிய அணி 125/2 இருந்த நிலையில் ஜடேஜா உஸ்மான் கவாஜாவை அவுட் ஆகினார். நிதானமாக விளையாடிய ஸ்மித் ஜடேஜா பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தனது டெக்னிக்கலான சுழல் பந்தில் ஜடேஜா வீழ்த்தினார்.

சிறப்பாகப் பந்து வீசிய ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் 146/4 என்ற நிலையில் 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது ஆஸ்திரேலிய அணி.

கேமரூன் கிரீன் 6 ரன்னுடனும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

சுழற் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கும் மைதானம் உருவாக்கப் போகும் திருப்புமுனைகளை இரண்டாவது நாளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.