சமகால இதழியல், ஊடகப் போக்குகளுக்கு ஏற்றவாறு இதழியல் பயிலும் மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ‘செய்தி தயாரிப்புத் திறன்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சிப் பட்டறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

துணதுவேந்தர் குமார் உரை

பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட, மூன்று நாள்கள் நடந்த இந்தப் பயிற்சி பட்டறையை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை ஒருங்கிணைத்தது. நிகழ்வில்  துணைவேந்தர் ஜெ.குமார்  தலைமை உரையாற்ற, இதழியல் துறைத்தலைவர் முனைவர் ஜெனிபா செவ்லின் வரவேற்று பட்டறையின் நோக்கத்தை சுருக்கமாக விளக்கினார். பல்வேறு நிறுவனங்களில் பணி புரியும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

ஊடகவியலாளர் குணசேகரன் பேசும்போது, “ஊடகத்துறை சுவாரஸ்யங்கள் நிறைந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி தற்போதைய மாணவர்களுக்கு ஊடகத்துறையில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. செய்தி தயாரிப்புக்கு தேவை, திறன் மற்றும் கருத்துகளின் முக்கியத்துவம் ஆகும். செய்தியின் உட்கருத்துகள் வலுவாக இருக்க வேண்டும்” என்றவர், பின்பு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பயிற்சி பட்டறை

பத்திரிகையாளர் கிருத்திகா ஸ்ரீநிவாசன், அச்சு ஊடகத்திற்கான செய்தி சேகரிப்பு மற்றும் எடிட்டிங், செய்தி எழுதுதல் குறித்தும், குற்றவியல் செய்திகளை எப்படி அணுக வேண்டும், பட்டியலின மக்களுக்கு நடந்த லாக்கப் கொடுமைகள், அவற்றை எவ்வித சமரசமுமின்றி தொடர்ந்து அணுகியதன் மூலம் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பேசினார். நீதிமன்றம் அல்லது அரசு உடனடியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கும் ஊடக செய்திகள், மாணவர்கள் ஏன் அச்சு ஊடகங்களில் பணிபுரிய முன்வர வேண்டும், அதற்கான தேவை என்ன என்பது பற்றியும் பேசியவர் ‘’களத்தில் இருப்பவர்களுக்கு மிரட்டல்கள் வரத்தான் செய்யும். வரவில்லை என்றால், இன்னும் உண்மையான பத்திரிகையாளர் ஆகவில்லை என்று அர்த்தம்” என்றார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ், விவாத நிகழ்ச்சிகளை எப்படி ஒருங்கிணைத்து நடத்துவது, கோர்வையாகப் பேச அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் மற்றும் வரலாறு சார்ந்த தகவல்கள், சிறந்த செய்தித்தளங்கள், எப்படி பல கோணங்களில் கேள்விகளை கேட்பது என்பது பற்றி விளக்கியதோடு சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

இதழியல் மாணவர்கள்

அவரை தொடர்ந்து `நேரலை செய்திகள் மற்றும் மின்னணு செய்தி சேகரிப்பு நுட்பங்கள்’ என்னும் தலைப்பில் ஊடகவியலாளர் அங்கயற்கண்ணி, ஒரு செய்தி தொலைக்காட்சியில் வெளிவருவதற்கு முன் எந்தெந்தத் துறைகளுக்குச் செல்கிறது, எவ்வாறு அதன் உண்மைத்தன்மையை ஆராய்கிறார்கள், செய்தி தொலைக்காட்சி எவ்வாறு 24×7 செயல்படுகிறது, பேரிடர் காலங்களில் செய்தி சேகரிப்பு மற்றும் செய்தி ஊடகங்களின் பங்கு, ஒரு செய்தி வாசிப்பாளர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கலந்துரையாடினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறையால் வெளியிடப்பட்ட மாணவர்களின் ஆவணப்படங்களில் ஒன்றான ‘வேர்களின் இசை’ திரையிடப்பட்டது. இதழியல் பயிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சி பட்டறை அது தொடர்பான இயங்கு தளம் குறித்த சந்தேகங்களில் பல கதவுகளை திறந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.