கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது முதல்வராக உம்மன் சாண்டி இருந்தார். அந்த சமயத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் சரிதா நாயர். அந்த வழக்கில் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பாலியல் புகார்கள் கூறி பரபரப்பை கிளப்பினார் சரிதா நாயர். சரிதா நாயர் மீதான சோலார் மோசடி வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்று வருகிறது. சரிதா நாயருக்கு கார் டிரைவராகவும், அவரின் வலது கரமாகவும் செயல்பட்டவர் வினு குமார். 2018-ம் ஆண்டில் இருந்தே ஜூஸ் மற்றும் தண்ணீரில் ஸ்லோபாய்சன் கலந்து தனக்கு கொடுத்ததாக வினுகுமார் மீது சரிதா நாயர் பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதுகுறித்து சரிதா நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் கிரைம் பிரான்ச் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரிதா நாயர்

2018-ம் ஆண்டு முதல் தனது உடலில் ஆங்காங்கே தடிப்பு ஏற்பட்டதாகவும். அதன் பிறகு நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டதாகவும். மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றபோது எனது உடலில் ஆஸனிக், மெர்க்குரி, லெட் போன்ற ரசானங்களின் தன்மை தெரிந்தது எனவும் சரிதா நாயர் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்தார். முதலில் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை செய்தார். தொடர்ந்து திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இதுபற்றி கூறிய சரிதா நாயர், “கீமோதெரபி சிகிச்சையால் எனது முடி அனைத்தும் உதிர்ந்துவிட்டன. ரசாயனங்கள் உடலுக்குள் சென்றதால் இடது கண்ணில் பார்வை குறைந்துள்ளது. இடது கால் பாதிக்கப்பட்டுள்ளது. எனது எதிரிகளின் தூண்டுதலின்பேரில் வினு குமார் என்னை மெல்ல கொலைச் செய்யும் திட்டத்துடன் ரசாயனங்களை உணவில் கலந்து தந்திருக்கலாம். மீண்டும் பழைய சரிதாவாக மாற முடியாத நிலையில் உள்ளேன்” எனக் கூறியிருந்தார்.

சரிதா நாயர்

‘சரிதா நாயர் மீதான ஊழல் விவகாரங்களை தான் வெளியே கூறிவிடுவேன் என்ற அச்சத்தில் அவர் என்மீது அபாண்டமாக புகார் கூறுகிறார்’ என வினுகுமார் கூறியிருந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக சரிதா நாயருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் சரிதா நாயருக்கு ரசாயனம் அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் விதமாக சரிதா நாயரின் முடி, ரத்த மாதிரிகளை கோர்ட் மூலம் டெல்லியில் உள்ள நேஷனல் ஃபாரன்சிக் லேபுக்கு கிரைம் பிரான்ச் போலீஸார் அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு வந்தபிறகு இந்த வழக்கு இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.