திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு அரசு நகரப் பேருந்து ஒன்று நேற்று மதியம் கிளம்பியது. பேருந்தில் சுமார் 25 பயணிகள் இருந்திருக்கின்றனர். பேருந்து துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டி – லிங்கம்பட்டிக்கு இடையே சென்றபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சுமார் 20 காட்டெருமைகள் திபுதிபுவென சாலையைக் கடந்திருக்கிறது. காட்டெருமை கூட்டத்தைக் கண்டதும் டிரைவர் பேருந்தை ஓரம்கட்டியிருக்கிறார்.

இருந்தபோதிலும் பேருந்து சத்தத்தைக் கேட்டு கோபமடைந்த காட்டெருமை கூட்டம், அரசுப் பேருந்தினை ஆவேசமாக முட்டித் தள்ளியது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன பயணிகள் அலறியபடி, பேருந்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

காட்டெருமை கூட்டம்

காட்டெருமை தாக்கியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்ததோடு, பேருந்தின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. சிறிதுநேரம் பேருந்தைச் சுற்றியபடியே வலம்வந்த காட்டெருமைகள், அதன்பிறகு விளைநிலங்களுக்குள் இறங்கி ஓடின. நடத்துனர் அளித்த தகவலின்பேரில் துவரங்குறிச்சி வனத்துறையினர் மற்றும் நத்தம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடந்த சில நாள்களாகவே துவரங்குறிச்சி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள், விளை நிலங்களுக்குள் புகுவதும், சாலையோரம் செல்பவர்களை தாக்குவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனால் துவரங்குறிச்சி பகுதி மக்கள் பீதியடைந்து கிடக்கின்றனர். வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகும் காட்டெருமைகளைத் தடுக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.