வழக்கத்தைவிட சற்று முன்னரே தன் தாக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது கோடை. எங்கே பார்த்தாலும் தர்பூசணிப் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தாகம் தணிக்க தர்பூசணி வாங்கும்போது, அதன் தோலைத் தூக்கிப் போடாமல் சுவையான சமையலுக்குப் பயன்படுத்தலாம். மஃபின்ஸ் முதல் பன் வரை இந்த வார வீக் எண்டை தர்பூசணித் தோல் ஸ்பெஷலாக்குங்கள்…

வாட்டர்மெலன் ரிண்ட் சேவரி மஃபின்ஸ்

தேவையானவை:

* வாட்டர்மெலன் ரிண்ட் (துருவியது) – அரை கப்

* மைதா மாவு – ஒரு கப்

* பூண்டுப் பொடி (garlic powder) – கால் டீஸ்பூன்

* ரெட் சில்லிஃப்ளேக்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்

* பேக்கிங் பவுடர் – அரை டேபிள்ஸ்பூன்

* சோள முத்துகள் – கால் கப்

* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

* துருவிய சீஸ் – கால் கப்

* வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

* முட்டை – ஒன்று (உடைத்து, நன்கு அடித்து பாதியளவு எடுத்துக்கொள்ளவும்)

* பால் – அரை கப்

* உப்பு – அரை முதல் முக்கால் டீஸ்பூன் வரை

வாட்டர்மெலன் ரிண்ட் சேவரி மஃபின்ஸ்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, பூண்டுப் பொடி, ரெட் சில்லிஃப்ளேக்ஸ், பேக்கிங் பவுடர், வாட்டர்மெலன் ரிண்ட் துருவல், சோள முத்துகள், துருவிய சீஸ், நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் பால், அடித்த முட்டை, வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து மைதா கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையை மஃபின் கப்களில் முக்கால் பாகம் அளவுக்கு ஊற்றவும் (எந்த வடிவ மஃபின் கப்களிலும் ஊற்றலாம்). இதை பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் 20 – 25 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, ஆற விடவும். மயோனைஸ் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

வாட்டர்மெலன் ரிண்ட் ஹண்ட்வோ

தேவையானவை:

* வாட்டர்மெலன் ரிண்ட் (பொடியாக நறுக்கியது) – அரை கப்

* அரிசி – ஒரு கப்

* கடலைப்பருப்பு – கால் கப்

* துவரம்பருப்பு – கால் கப்

* பாசிப்பருப்பு – கால் கப்

* தயிர் – அரை கப்

* பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)

* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்)

* தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

* மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

* மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

* ஃப்ரூட் சால்ட் – அரை டீஸ்பூன்

* சீரகம் – அரை டீஸ்பூன்

* எள் – ஒரு டீஸ்பூன்

* கறிவேப்பிலை – 2 ஆர்க்கு

* பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

* எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

வாட்டர்மெலன் ரிண்ட் ஹண்ட்வோ

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றைக் கழுவி, 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும். இதை தயிர் சேர்த்து ரவை பதத்தில் அரைக்கவும் (தண்ணீர் சேர்க்க வேண்டாம்). மாவைப் பாத்திரத்துக்கு மாற்றவும். அதில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து இரவு முழுவதும் புளிக்கவிடவும். பிறகு பொடியாக நறுக்கிய வாட்டர்மெலன் ரிண்ட், ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலக்கவும். மாவை எண்ணெய் தடவிய பேக்கிங் பாத்திரத்துக்கு மாற்றவும்.

கடாயில் எண்ணெய்விட்டு சீரகம், எள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து மாவின் மேலே சேர்க்கவும். பேக்கிங் பாத்திரத்தை அவனில் வைத்து, 180 டிகிரி சென்டிகிரேடில் 15 – 20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து ஆறவிடவும். ஹண்ட்வோ தயார்.

இதே ரெசிப்பியை கடாயிலும் செய்ய லாம். தாளிதம் செய்த பிறகு, மாவைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டுத் திருப்பிப் போட்டு இருபுறமும் மொறுமொறுப்பானதும் எடுக்கவும். இதை கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.

சீஸி மசாலா வாட்டர்மெலன் ரிண்ட் பன்

தேவையானவை – பன்னுக்கு:

* மைதா மாவு – 3 கப்

* பூண்டுப் பொடி (garlic powder) – ஒரு டீஸ்பூன்

* பார்மேசன் சீஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன்

* துருவிய சீஸ் – கால் கப்

* இஸ்டன்ட் ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன்

* சர்க்கரை – ஒரு டீஸ்பூன்

* வெதுவெதுப்பான நீர் – அரை கப்

* எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

* உப்பு – ஒரு டீஸ்பூன்

மசாலாவுக்கு:

* பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

* வாட்டர்மெலன் ரிண்ட் (துருவியது) – ஒரு கப்

* பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

* மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

* மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

* கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

* எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

வாட்டர்மெலன் ரிண்ட் பன்

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு மசாலா செய்யக்கொடுத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மற்ற பொருள்களையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து, ஆறவிடவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, பூண்டுப் பொடி, சீஸ் பவுடர், துருவிய சீஸ், உப்பு, வதக்கிய மசாலா சேர்க்கவும்.

இதனுடன் ஈஸ்ட் கலவை சேர்த்து நன்கு பிசையவும். இதில் எண்ணெய் சேர்த்து மீண்டும் 5 – 10 நிமிடங்கள் பிசையவும். மாவை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு ஒரு மணி நேரம் அல்லது மாவு இரண்டு மடங்காக ஆகும்வரை அப்படியே வைக்கவும். பிறகு சம அளவிலான பாகங்களாகப் பிரிக்கவும்.

ஒரு பாகத்தை எடுத்து கைகளால் உருண்டை வடிவமாகச் செய்யவும் (படம் பார்க்கவும்). அதை பேக்கிங் ட்ரேயில் வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதே போல செய்யவும். அவற்றின் மீது `எக் வாஷ்’ அல்லது பால் தடவி பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் 180 டிகிரி சென்டிகிரேடில் 20 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துப் பரிமாறவும்.

வாட்டர்மெலன் ரிண்ட் முதியா

தேவையானவை – முதியாவுக்கு:

* வாட்டர்மெலன் ரிண்ட் (துருவியது) – அரை கப்

* கோதுமை மாவு – ஒரு கப்

* ரவை, கடலை மாவு – அரை கப்

* பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

* கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்

* வறுத்த சீரகம் – ஒரு டீஸ்பூன்

* மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

* பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

* மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – அரை டீஸ்பூன்

* பேக்கிங் சோடா, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய கீரை – கால் கப்

* எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

* எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

* கடுகு, சீரகம் – ஒரு டீஸ்பூன்

* பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

* எள் – ஒரு டேபிள்ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிதளவு

அலங்கரிக்க:

* கொத்தமல்லித்தழை – சிறிதளவு

ரிண்ட் முதியா

செய்முறை:

பெரிய பாத்திரத்தில் முதியா செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவை இரண்டு சம அளவு பாகங்களாகப் பிரித்து, சிலிண்டர் வடிவில் உருட்டிக் கொள்ளவும். இதை 15 – 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும் (நன்றாக வெந்திருக்க வேண்டும்).

பிறகு ஆறவிட்டு அரை இன்ச் ஸ்லைஸ்களாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, எள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் முதியா ஸ்லைஸ்களைச் சேர்த்து 4- 5 நிமிடங்கள் அல்லது மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.