தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி நடத்தவுள்ளதாக, தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. இந்த விழாவில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனிப்பார் எனவும் அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவுக்கு ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக இருக்கும் கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களின் முதல்வர்களை அழைத்திருக்கிறது தி.மு.க தலைமை.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வரின் பிறந்தநாளையொட்டி தி.மு.க ஏற்பாடு செய்திருக்கும் பிறந்தநாள் விழாவின் பின்னணி என்ன என்ற விசாரணையின் இறங்கினோம்.

முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி தி.மு.க-வின் திட்டம் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அமைச்சர் ஒருவர், “நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டியே இந்தத் திட்டம்” என எடுத்த எடுப்பிலேயே முக்கியக் காரணத்தை முன் வைத்தவர் தொடர்ந்து பேசினார். “ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை வைத்து தேசிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எல்லா கட்சிகளும் ஒரு பாதையில் சென்றாலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பாதையில் செல்கிறது. மம்தாவையும் காங்கிரஸ் கட்சியையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்றால் அது எங்கள் தலைமையால் மட்டுமே முடியும். அப்படி எல்லோரையும் ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க இந்தப் பிறந்தநாள் விழா அமையும். பா.ஜ.க-வை எதிர்க்கச் சரியான தலைமை தி.மு.க-தான் என்பதை உணர்த்தவே சில நாள்களுக்குமுன், `கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மம்தா பானர்ஜி – ஸ்டாலின்

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இந்தப் பிறந்தநாள் விழா குறித்து எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. அன்றைய விழாவில் ஒவ்வொருவரும் பேசும் பேச்சில் அரசியல் கணக்கு இருக்கும் என்பதால் அந்த நாளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.