வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

என் மகளுக்குப் பிறந்த நாள். அவளுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதினேன். “நிர்மலமான வானத்தில் வானவில் தோன்றுமா? எனக்குத் தெரியாது. ஆனால் கனவுகளற்ற என் திருமண வாழ்வில் வந்த முதல் வசந்தமும் நீ தான். முதன்முதல் தோன்றிய வானவில்லும் நீ தான்! வாசமுள்ள, பார்த்த மாத்திரத்தில் கண்களை கவர்ந்து நெஞ்சம் நிறைத்த ரோஜாப்பூ செண்டை நான் பெற்றெடுத்தேன். ஆம் மகளே.

முழுநாள் வலியிலிருந்து, மறுநாள் விடியலில் உன்னைப் பெற்று சோர்ந்திருந்த என்னிடம், பிரசவம் பார்த்த செவிலி உன்னைக் காட்டிய போது சிறு பூவைப் போல இருந்த நீ, என் கையில் கிடைத்த போது அழகான பூக்குவியலாக மாறியது அதிசயம் என்றால் அதைத் தொடர்ந்து வந்த நாட்களும், மாதங்களாக, வருடங்களாக, தூரங்களாக மாறிய போதும் இன்றும் என் கண்களில் பூக்குவியலாகவே இருப்பது பேரதிசயம் தானே!

Representational Image

இன்று உனக்கு பிறந்த நாள். காலங்கள் கடந்தாலும், உருவங்கள் தொலைதூரம் போனாலும், என் மடியில் பிள்ளையாய் நீ கிடந்த நினைவுகள் மாறிப் போகவில்லையே!

நான் உன்னிடம் எப்போதும் சொன்னதைப் போல இப்போதும் சொல்கிறேன். என் தாய் என்னை அன்பு செய்ததை விட நீ என்னை அதி தீவிரமாகவும் அதிகமாகவும் அன்பு செய்தவள். என்னைத் தவிர வேறு உலகமறியா பிள்ளையாக வளர்ந்தாலும், இன்றும் உனக்கே உனக்கான உலகத்தில் என்னையும் மறவாமல் இருப்பவள் நீ!

Representational Image

அன்றோ என் கையை பிடித்துக் கொண்டு நடந்த சிறுமி, இன்றோ என்னைக் கண் கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கும் காவல் தேவதை நீ! என் வாழ்க்கையில் நான் ஏதேனும் சாதித்திருப்பதாக நான் நினைத்தால் அதன் அடித்தளமும் மூலக்காரணமும் நீயும் அப்பாவும் தான்! பள்ளி மாணவியாக படித்துக் கொண்டிருந்த உன்னுடனே நானும் உலகை படிக்கும் மாணவியாக வளர்ந்தேன். ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னைத் தேடி எனக்கே கொடுத்தவள் நீ! 

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த என் மகளே என் மகளே! நீ நூறு வருடங்கள் ஆரோக்கியமாக அமோகமாக ஆனந்தமாக கடவுள் உனக்கு கொடுத்திருக்கும் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தி கணவனுடன் இயைந்த வாழ்க்கை வாழ, வாழ்வாங்கு வாழ உன்னை உன் பிறந்த நாள் அன்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!”

தபால் ஆபிசைத் தேடி சென்று அனுப்புவது இயலாததாகிப்  போனாலும், மனதின் வேகத்தை விட அதிக வேகமாக செய்தியை அனுப்பி விட தேவதூதனாக வாட்ஸப் இருக்க கவலை எதற்கு!   எனவே ஊரார் உலகத்தார் உறவினர் உற்றார் வழக்கப்படி நானும் கடிதத்தை எழுதி வாட்ஸப்பில் அனுப்பினேன். 

திருவண்ணாமலை கோயில்

அலுவல் நிமித்தமாக சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்திருந்ததாலும், மகளின் பிறந்த நாள் என்பதாலும் அன்று மகாசிவராத்திரி ஆதலால் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு நானும் என் கணவரும் காலையில் போயிருந்தோம். டூரிஸ்ட் மக்களால் கோயிலில் நல்ல கூட்டம். அத்தனை பேரும் சிறப்புக் கட்டண தரிசனத்திற்குப் போனார்கள். நாங்கள் பொது தரிசன வரிசையில் நின்று கொண்டோம். எப்போதுமே அப்படித் தான். சிறப்புக் கட்டண வரிசையில் சென்றால் முன்னே போனவர்கள் சாமியின் முன் நின்று பின்னால் நிற்பவர்களுக்கு மறைத்துக் கொண்டு நிற்பார். நகரவும் மாட்டார்கள்.

பணம் கொடுத்து வந்திருக்கிறோம் எதற்கு அவசரமாக நகர வேண்டும் என்ற எண்ணம். அதுவே பொது தரிசனத்தில் நம்மை நிற்க விடாமல் கோயில் ஊழியர்கள் நகர்த்தி விடுவார்கள். எனவே நம் வரிசை விரைந்து நகரும். எண்ணமெல்லாம் இறையிருக்கையில் கண்ணெதிரில் கண நேரம் கண்டாலும் மனம் நிறைந்து போகாதா என்ன!

Representational Image

நல்லக் கூட்டம். நீண்ட வரிசை. விரைந்து நகர்ந்து சந்நிதியின் முன் வந்து விட்டோம். என் பின்னால் ஒரு இளம் கர்ப்பிணி பெண், தொடர்ந்து இடித்துக் கொண்டே வந்தாள். பாப்பா தள்ளி நில்லம்மா என்று சொல்லவும் முடியாத நெரிசல். எனவே அவள் முழு கனத்தையும் என் முதுகில் தாங்கிக் கொண்டு முன் நகர்ந்தேன் நான். அவள் பின்னால் அவளுடைய தாய். சரியாக சாமிக்கு முன் வரும் போது தீபாராதனை காட்டவே பின்னால் நின்று கொண்டிருந்த கூட்டம் ஒருத்தரை ஒருத்தர் இடித்து தள்ளி கொண்டு வந்ததில் என் பின்னால் நின்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் முழுவதுமாக என் முதுகில் சாய்வதும் அப்படியே பக்கவாட்டில் சரிவதும் என்னால் உணர முடியவே அவள் தாய் மெய்யுருக தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

சட்டென்று அவளை என் கைகளில் பற்றி அப்புறம் கொண்டு வந்தேன். அப்படியே வெளியே பிரகாரத்தில் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் உட்கார வைத்து, என் பையிலிருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவளுக்குக் குடிக்கக் கொடுத்து, கொஞ்சம் நீரால் அவள் முகத்தை துடைத்து, முதுகை நீவி விடவே ஒரு நீண்ட பெருமூச்செடுத்து விட்டாள் அவள். விரதமிருந்து வந்திருக்கிறாள். பசி மயக்கம். கூட்ட நெரிசலில் காற்று பற்றாமல் மூர்ச்சையாக வந்திருக்கிறது. என் கையில் எப்போதும் பிஸ்கட் இருக்கும். சமயத்துக்கு உதவியது. அந்த பெண்ணைத் தேடிக் கொண்டு அவள் தாய் பதறியவாறே வந்ததும் நான் நகர்ந்து கொண்டேன்.

Representational Image

அதுக்குள்ளே எங்கே போயிட்டே நீ என்று என் கணவர் என்னைத் தேடிக் கொண்டு வந்தவர் என்னையும் அந்த பெண்ணையும் பார்த்து விட்டு புரிந்து கொண்டவராக, மீண்டும் கூட்ட நெரிசலில் போகணுமே என்ற தயக்கத்துடன், நம்ம பொண்ணுக்கு பிறந்த நாள்ன்னு கோயிலுக்கு வந்துட்டு நீ சாமி பாக்காம எப்படி போறது?” என்று ஆதங்கப்பட்டார்.

பிரகாரத்தின் வலதுபுறம் திரும்பும் போது திரும்பும் போது தன்னிச்சையாக அந்த பெண்ணைப் பார்த்தேன். அவளும் அவள் தாயும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது என் கண்ணில் பட்டது.

“திரும்ப சாமி பாக்க போகலாமா என்று கேட்டார்.

“இல்ல, பரவாயில்ல. மனசு நெறஞ்சிருக்கு” என்றேன் நான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.