அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியைச் சேர்ந்தவர் வந்தனா கலிதா. இவரின் கணவர் அமர்ஜோதி. அமர்ஜோதியின் தாயார் சங்கரி. வந்தனாவுக்கு வேறு வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களின் இந்த உறவுக்கு கணவர் அமர்ஜோதி இடையூராக இருந்திருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண திட்டமிட்ட வந்தனா, தன்னுடைய கணவர், மாமியாரைக் கொலைசெய்ய முடிவு செய்தார்.

கொலை

இதற்காக, தான் தொடர்பிலிருக்கும் அந்த நபருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார். இரவில் கணவர், மாமியார் உறங்கிய பிறகு, அந்த நபரின் துணையோடு அவர்கள் இரண்டு பேரையும் கொலைசெய்தார் வந்தனா. பின்னர் இருவரின் உடல்களை பல துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் கவரில் தனித்தனியாக அடைத்து அவற்றை வீட்டிலிருந்த ஃபிரிட்ஜில் வைத்தார். அதனைத் தொடர்ந்து வந்தனாவும், அந்த நபரும் சேர்ந்து இருவரின் உடல் உறுப்புகளை அருகிலிருக்கும் மேகாலயா மாநிலத்திலுள்ள சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று டிஸ்போஸ் செய்தனர். இந்தக் கொலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்திருக்கிறது. ஆனால் இப்போதுதான் கொலை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வந்தனா இருவரையும் கொலைசெய்து அவர்களின் உடல் உறுப்புகளை மேகாலயாவின் சிரபுஞ்சி, தவ்கி பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வனப்பகுதிக்குள் வீசியிருக்கிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கு வந்தனாவுடன் பழகிவரும் அரூப், தங்ஜித் ஆகியோர் உதவி செய்திருக்கின்றனர். கொலை நடந்த இடத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவுக்கு உடலை எடுத்துச் சென்று டிஸ்போஸ் செய்திருக்கின்றனர். வீட்டில் வந்தனா தன்னுடைய கணவர், மாமியாரோடு வாடகைக்கு வசித்து வந்தார். ஆனால் கொலைக்குப் பிறகு வந்தனா வீட்டை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டார். கொலைக்குப் பிறகு இரண்டு பேரையும் காணவில்லை என்று போலீஸிலும் புகார் செய்தார். வந்தனாவை சிரபுஞ்சிக்கு அழைத்துச் சென்று கொலைசெய்து வீடப்பட்ட உடல் உறுப்புகளை போலீஸார் மீட்டிருக்கின்றனர்.

வந்தனா

கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர் என்று போலீஸ் துணை கமிஷனர் திகந்த குமார் சவுத்ரி தெரிவித்தார். கொலைசெய்யப்பட்ட அமர்ஜோதியின் உறவினர் கொடுத்த புகாரில் வந்தனாமீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் சவுத்ரி தெரிவித்தார்.

அதோடு இரண்டு கொலைகளும் வேறு வேறு வீட்டில் நடந்திருப்பதாகவும், இரு காவல் நிலையங்களில் இந்தக் கொலைகள் குறித்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இரண்டு பேரையும் கொலைசெய்துவிட்டால் சொத்துகளை முழுமையாக அபகரிக்கலாம் என்ற நோக்கில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.