இந்தியாவில் நடந்த டாப் 10 மிகப்பெரிய மோசடி சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1. விஜய் மல்லையா

ஒரு காலத்தில் ‘King of Good Times’ என்று அழைக்கப்பட்டவர் விஜய் மல்லையா. ஆனால் இப்போது அவர் ஒரு தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளி. இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகள் உட்பட பல்வேறு வங்கிகளில் விஜய் மல்லையா வாங்கிக் கட்டத் தவறிய கடன் பாக்கி மட்டும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல். இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியாவை விட்டு தப்பியோடி இங்கிலாந்தில் தலைமறைவானார். இதனால் அவர் நீதிமன்றத்தால் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவரை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் அவர் வாங்கிய கடனைத் திரும்ப வசூலிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்குகள் இந்தியா மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.   

image

கடந்த ஆண்டு, நீதிமன்ற உத்தரவை மீறி தனது குழந்தைகளுக்கு 40 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.317 கோடி) பரிவா்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது குறிப்பிடத்தக்கது.  

image

2. நிரவ் மோடி

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.11,400 கோடி கடன் வாங்கி இருந்தனர். பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வங்கித் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கும் தப்பிச் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஆன்டிகுவாவுடன் ஏற்படுத்தப்படவில்லை என்பதால் மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

நீரவ் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஆஜராவதற்கு ஏற்ப, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசு, பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்திய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் லண்டன் சிறையில் இருக்கிறார். அவர் தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

image

3. வின்சம் டயமண்ட்ஸ் குழுமம்

தொழிலதிபர் ஜதின் மேத்தாவின் வின்சம் டயமண்ட்ஸ் குழுமம் 15 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.7,000 கோடி தொகையை கடன் பெற்றது. 3 நிறுவனங்கள் பெயரில் வின்சம் இந்தக் கடனை வாங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டு கோடைக்காலம் முதல் இந்த நிறுவனம் வங்கிக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து  வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வின்சம் குழுமம் மோசடி செய்வதாக வங்கிகள் அறிவித்தன. ஜதின் மேத்தா, அவரது மனைவி சோனியா மற்றும் அவர்களது மகன்கள் விபுல், சூரஜ் ஆகியோர் இந்தியாவை விட்டு தப்பியோடினர். சிபிஐ இந்த நிறுவனத்திற்கு எதிராக 2014இல் வழக்குப் பதிவு செய்தது. மேத்தா மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

image

4. ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம்

ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ உட்பட 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் ரூ.22,842 கோடி கடன் பெற்றது. ஆனால், இந்தக் கடனை முறையாக பயன்படுத்தாமல் மோசடி செய்தது. இந்நிறுவனத்தின் 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான கணக்குகளை தணிக்கை செய்தபோது இந்த மோசடி வெளியே தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக எஸ்பிஐ 2019 நவம்பர் மாதம் சிபிஐ-யிடம் புகார் அளித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 2022 செப்டம்பர் மாதம் இந்தப் புகார் தொடர்பாக ரிஷி அகர்வாலையும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளையும் சிபிஐ கைது செய்தது. வங்கிகளிலிருந்து பெற்ற கடனில் ரூ.5,000 கோடியை ரிஷி அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் முதலீடு செய்துள்ளதை கண்டறிந்த சிபிஐ, 1000 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.

பல்வேறு வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தது. அவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும், 19 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

image

5. கனிஷ்க் கோல்டு நிறுவனம்

சென்னையை சேர்ந்த பூபேஷ் குமார் ஜெயின் மற்றும் நீட்டா ஜெயின்  தம்பதியர், ‘கனிஷ்க் கோல்டு பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தனர். தம்பதியர் இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். நகைகளை பொதுமக்களுக்கு சில்லறை விலையிலும், பெரிய நகைக் கடைகளுக்கு மொத்தமாகவும் விற்று வந்தனர்.

இந்நிலையில், நகை இருப்பு விவரம், விற்பனை, லாபம் தொடர்பாக போலி ஆவணங்களைக் கொடுத்து பல வங்கிகளில் பூபேஷ் குமார் கடன் வாங்கியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு முதல் அவர் இவ்வாறு மோசடி செய்து வந்துள்ளார் என்று தெரியவந்தது. எஸ்பிஐ உட்பட 14 வங்கிகளிடம் வாங்கிய கடன், வட்டியுடன் சேர்த்து ரூ.824 கோடியே 15 லட்சத்தை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின்பேரில், பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி நீட்டா ஜெயின் உட்பட 6 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.  இதற்கிடையில், அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்பிலான நகை தொழிலகத்தை முடக்கினர்.

வங்கி மோசடியில் தொடர்புடைய பூபேஷ் குமார், அவரது பங்குதாரர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ தரப்பில் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

image

6. ஆந்திரா வங்கி மோசடி

குஜராத்தை சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன உரிமையாளர்கள் நிதின் சந்தேஷரா, சேத்தன் சந்தேசரா, திப்தி சந்தேஷரா மற்றும் ஹிதேஷ் படேல் ஆகியோர் ஆந்திரா வங்கி கூட்டமைப்பில் ரூ.8,100 கோடி கடன்  பெற்று மோசடி செய்தனர். இவர்களில் சந்தேஷரா தற்போது நைஜீரியாவிற்கும், படேல் அமெரிக்காவிற்கும் தப்பி சென்றுள்ளனர்.  இவர்கள் மீது அமலாக்கத்துறை, சிறப்பு நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சந்தேஷரா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்களை நாட்டுக்கு திரும்ப கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

image

7. பேனா தயாரிப்பு நிறுவனம் மோசடி

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 750.54 கோடிக்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதையடுத்து இந்நிறுவனம் மீது மற்றுமொரு மோசடி புகாரை பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்தது. பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 7 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்புக்கு ரூ. 2,919 கோடி கடனை ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது. இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய பங்கு மொத்த கடனில் 23 சதவீதமாகும். இந்நிறுவனம் வங்கியை ஏமாற்றி முறைகேடாக நிதியைப் பெற்றதுடன், நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 image

8. வீடியோகான் மோசடி

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பதவி வகித்தபோது விதிமுறைகளை மீறி அவர் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. வங்கி ஒழுங்குமுறை விதி, ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மீறி வீடியோகான் குழுமத்துக்கு கடன் வழங்கியதற்காக பிரதிபலனாக சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நியூபவர் ரீனிவபிள்ஸ் நிறுவனத்தில் வேணு கோபால் தூத் ரூ.64 கோடியை முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தொகை வீடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கிய 2010 மற்றும் 2012-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பகுதி பகுதியாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும அதிபர் வேணுகோபால் தூத் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தது.

image

9. தேசிய பங்கு சந்தை முறைகேடு

தேசிய பங்குச் சந்தையில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிர்வாக இயக்குனராக பதவி வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். அவர் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்றுள்ளதாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) புகார்கள் குவிந்தன.

மேலும் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரின் ஆலோசனையின்படி பங்குச்சந்தை தொடர்பான முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா எடுத்ததாகவும், அவரிடம் பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், தன் விருப்பப்படி ஒருவரை தன் ஆலோசகராக நியமித்து, அந்த நபருக்கு ஆண்டுக்கு 4.6 கோடி ரூபாய் வரை சம்பளமாக சித்ரா ராமகிருஷ்ணா வாரி வழங்கியுள்ளார்.  

இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் ஆகியோர் விசாரணை முடியும் வரை நாட்டைவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக `லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

image

10. யெஸ் வங்கி கடன் முறைகேடு

மும்பையை மையமாக வைத்து செயல்பட்ட யெஸ் வங்கியில் கடந்த 2020ம் ஆண்டு ரூ.4,300 கோடி அளவுக்கு நடந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டார். முறைகேடு தொடர்பாக ராணா கபூர் மனைவி மற்றும் அவரது மகள்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ராணா கபூர் நிர்வாகத்தின் கீழ் வங்கி இருந்தபோது தகுதியில்லாத பல பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. அதற்குப் கைமாறாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன. இதனால் யெஸ் வங்கியின் வாராக் கடன் கடுமையாக உயர்ந்தது. வாராக்கடன் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் ராணா கபூருக்கு சொந்தமான ரூ.2,011 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. 

image

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது. அந்த அறிக்கையின் எதிரொலியாக, பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ள அதானி குழுமத்திற்குக் கணிசமான கடன் இருப்பதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அதானி குழுமம் கடன்களுக்கான பங்குகளை உத்தரவாதமாக அளித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானி குடும்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள் குறித்து செபி கண்டும் காணாது இருப்பது பற்றி அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிக்கையை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஹிண்டன்பா்க் நிறுவனம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு 413 பக்கத்தில் பதிலளித்திருந்த அதானி குழுமம், தங்கள் மீதான குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு என்றும், நாட்டின் வளா்ச்சியைத் தடுப்பதற்கான சதிச் செயல் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்’ என்று அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தின் தாக்கம் நான்கு வாரங்களாக நீடித்து வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.