‘குவேம்பு தேசிய விருது மற்றும் சாகித்திய அகாடமி விருது பெற்ற புனைகதையாளர் இமையம்’ எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையின் மூலம் இன்று ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கத்தை மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி தலைமையேற்று நடத்தினார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், எழுத்தாளர் அரவிந்தன், பேரா. அ.ராமசாமி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் உட்பட பல முன்னணிப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு, பல தலைப்புகளின் கீழ் தங்களின் ஆய்வுரைகளை வழங்கினர்.

கோபாலகிருஷ்ணன் காந்தி

”’செல்லாத பணம்’ நாவலில் மருத்துவமனையின் உள்ளேயும் வெளியேயும் நடக்கின்ற தத்தளிப்புகளைக் கையாண்டிருக்கிறார். அதே வேளையில் ‘ஆறுமுகம்’ என்ற நாவலில் மனித உறவுகளுக்கு இடையில் உள்ள சிக்கல்கள் குறித்து எழுதியுள்ளார். தமிழ்ச் சமூக வாழ்க்கையை அச்சு அசலாகக் காட்டும் எழுத்தாளர் இருக்கிறார் என்பதில் பெருமைப்படுகிறேன்” என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷணன் காந்தி பாராட்டு தெரிவித்தார்.

‘இமையத்தை மொழிபெயர்த்தல்’ என்னும் தலைப்பில் பேசிய, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதரன், “மொழிபெயர்ப்பு ‘Translation’ என்ற வார்த்தைக்கு ஏந்துதல் ‘Carry’  எனும் பொருள்படும். அதுபோலத்தான் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் தாங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அதன் படைப்பாளர் எவ்வாறு படைத்திருக்கின்றாரோ அப்படியே ஏந்த வேண்டும். இமையத்தின் ஒவ்வொரு படைப்பையும் படிக்கும்போது எனக்கு ஒரு முறைகூட இமையத்தின் குரல் கேட்டதில்லை. அந்தக் கதாபாத்திரத்தின் குரல் மட்டுமே கேட்கும். எனவே அவரது படைப்புகளை மொழிபெயர்க்கும் போது நான் அதிக கவனத்துடனே இருப்பேன்” என்று கூறினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி பிரபா ஸ்ரீதரன்

‘இமையத்தின் எழுத்துவெளி நகர்வுகள்’ என்னும் தலைப்பில் பேசிய பேரா. அ.ராமசாமி, “இமையத்தின் படைப்புகள் அனைத்துமே கீலைத்தேய (Orientalism) மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் இவரது ‘சேடல்’ நாவல், மூன்று வெளிகளில் நடப்பதாக இருக்கும், ‘வாழ்க வாழ்க’ நாவலில் தமிழகத்தின் அரசியல் களத்தினை நையாண்டி பாணியில் பேசியிருப்பார். சமீபத்தில் வெளியா ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலில் கார்ப்பரேட் வாழ்வியலைப் பதிவு செய்திருக்கிறார்” என்று கூறினார்.

‘கூடுவிட்டுக் கூடு பாயும் இலக்கிய வித்தைக்காரர்’ என்னும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் அரவிந்தன், “எழுத்து என்பதைப் பொறுத்தவரையில் பிறருடைய அனுபவத்தை வைத்து எழுதுவது கடினமாகவும் சுய அனுபவத்தைக் கொண்டு எழுதுவது ஒப்பீட்டு அளவில் எளிமையாக இருக்கும் எனக் கொள்ளலாம். அவ்வாறிருக்க எழுத்தாளர் இமையத்தின் படைப்புகள் பலத்தும் மற்றவர்களின் அனுபவத்தை வைத்து எழுதப்பட்டதாகவே இருக்கும் ஆனாலும் தன் படைப்புகளுக்குள் அந்தந்த கதாபாத்திரங்களாகவேதான் நம்மிடம் பேசுவார். இன்னும் சொல்லப்போனால் இமையம் தன் உடலைவிட்டு கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அந்தக் கதாபாத்திரங்களின் உடலுக்குள்ளேயே புகுந்து பேசுவார்” என்று பேசினார்.

குவேம்பு தேசிய விருது மற்றும் சாகித்திய அகாடமி விருது பெற்ற புனைகதையாளர் இமையம்

தமிழ் இலக்கியத்துறை மாணவி சௌமியா கூறுகையில் “என்னுடைய பேராசிரியர் முதலில் எனக்கு இமையத்தின் ‘பெத்தவன்’ நாவலைப் படித்துப்பார் என்று கொடுத்தார். அதைப் படித்த பிறகு, அதற்கு அடுத்த மூன்று நாள்கள் என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. அதில் அவர் ஒவ்வொரு எழுத்தையுமே நுணுக்கமாக அமைத்திருப்பார். படிக்கும் பொழுது அந்தக் கண்ணீரையும் வலிகளையும் நானே உணர்வதைப் போலிருந்தது.

பெத்தவன் புத்தகம்

அதற்கு அடுத்தபடியாக அவரது ‘ஆறுமுகம்’ நாவலைப் படித்தேன் அதில் ஐந்து பேரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அதைப் படிக்கும் பொழுது ‘இப்படியெல்லாம் நடக்குமா’ என்ற உணர்வு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.