பிப்ரவரி 2023 ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டில் புதிய வருமானவரி திட்டத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இன்னும் அதிர் வலைகளை எழுப்பியபடியே உள்ளன. புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ் இன்னும் ஒரு கோடிப் பேர் நன்மை பெறவிருப்பதாகவும், அதற்காக 80சி-யில் இடம்பெறும் முதலீட்டுத் திட்டங்களின்கீழ் மத்திய அரசு பெற்றிருக்கக்கூடிய முதலீடான ரூ.84,000 கோடியை விட்டுக் கொடுத்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

வருமான வரி

“வருமான வரித் திட்டத்தை இது எளிமைப்படுத்துவதால், வரி செலுத்துவோரில் 50 சதவிகிதத்தினராவது புதிய திட்டத்திற்கு மாறுவார்கள்” என்று வருவாய்த் துறை செக்ரடரி சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். இதன் மூலம் மக்கள் கையில் தங்கும் அதிகப் பணம், நுகர்வை (consumption) அதிகரித்து பொருளாதார சுழற்சியை வேகப்படுத்தும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது.

நம் நாட்டின் ஜி.டி.பி.யில் 60% தனிநபர் நுகர்வைச் சார்ந்துள்ளது. உலகளவில் நுகர்வு குறைந்து, ஏற்றுமதியும் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் உள்நாட்டளவில் தனிமனித நுகர்வை அதிகரிப்பது ஒரு நல்ல பொருளாதார தந்திரம்தான் என்று பலரும் பாராட்டுகிறார்கள். இதுவரை அரசு வரிச் சலுகை தந்த இடங்களில் பாய்ந்த முதலீடுகள் இனி பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளின் பக்கம் திரும்பும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

பொது மக்களில் சிலர் “புதிய வருமானவரித் திட்டம் நம் மீதுள்ள இறுக்கத்தைத் தளர்த்துகிறது; மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல, ஒரு பக்கம் சேமிப்பு, இன்னொரு பக்கம் வரி செலுத்துதல் என்று நடுத்தட்டு மக்களுக்கு இருந்த நெருக்கடிகள் இனி குறையும். எங்கு சேமிப்பது, எவ்வளவு சேமிப்பது, எவ்வளவு செலவழிப்பது போன்ற முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் தனி மனிதருக்குக் கிடைக்கும்”என்று மகிழ்கிறார்கள்.

இன்னும் சிலர், “பொய்யாக அதிகப்படுத்தி ஹெச்.ஆர்.ஏ-யின்கீழ் விலக்கு கோருவது, விலக்கு பெறுவதற்காக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது போன்ற தவறுகள் தவிர்க்கப்படும்” என்று கூறுகிறார்கள்.

இப்படி சேமிப்பின் பக்கம் இருந்து மக்களின் பார்வை விலக்கப்படுவது எவ்வளவு தூரம் சரி என்ற கேள்வியையும் பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கிறார்கள். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் “இன்னும் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கும் நம் நாட்டில் தனிநபர் சேமிப்பின் முக்கியத்துவம் குறைக்கப்படுவது வருத்தமளிக்கிறது; அதுவும் மேலைநாடுகளில் அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இங்கு இல்லாத நிலையில் தனிநபர் சேமிப்பு மிக அவசியம்” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ப.சிதம்பரம்

“புதிய வரித் திட்டத்தின் கீழ் நடுத்தட்டு மக்களின் கையில் பணம் தங்கலாம்; ஆனால், அதனை சரியான முறையில் சேமித்து எதிர்காலத்தை வளமாக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? உதாரணமாக, வீட்டுக் கடனுக்கான விலக்கு, அதன் வட்டிக்கான விலக்கு போன்றவை இல்லாத சூழ்நிலையுடன், கடனுக்கான வட்டி அதிகரிக்கும் நிலையும் சேரும் போது அவர்களின் வீடு வாங்கும் ஆர்வம் குறையும்” என்று பல ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கவலை கொள்கிறார்கள்.

ஆர்.இ.ஐ.டி., இன்விட், அடல் பென்ஷன் யோஜனா போன்ற முதலீடுகள், ஹெல்த் இன்ஷூரன்ஸ் மற்றும் 80 சி-யின்கீழ் வரக்கூடிய பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட், இ.எல்.எஸ்.எஸ்., நேஷனல் பென்ஷன் ஸ்கீம், செல்வமகள் சேமிப்புத் திட்டம், என்.எஸ்.சி., யூலிப், வரியில்லா ஐந்து வருட ஃபிக்சட் டெபாசிட்டுகள் போன்ற திட்டங்களுக்கு இனி அதிக வரவேற்பிருக்காது என்ற எண்ணத்தையும் பலரிடம் காணமுடிகிறது.

வருமான வரி

ஆனால், அந்நிய முதலீடு தொடர்ச்சியாக குறைந்து வரும் இந்த நேரத்திலும், பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை சிறு முதலீட்டாளர்கள் நிறுத்தவில்லை என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில், முதலீடு பற்றிய ஞானமும், மனமுதிர்ச்சியும் அதிகரித்துள்ளன என்பதையே இது காட்டுகிறது. ஆகவே, இதுவரை மேற்கொண்டு வந்த முதலீடுகளை வரிச்சேமிப்புக்கு உதவாது என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் கைவிட விரும்ப மாட்டார்கள். லாபகரமாக உள்ளது என்று புதிய வரித் திட்டத்திற்கு மாறினாலும், எந்தெந்த முதலீடுகளைத் தொடரலாம், எவற்றை நிறுத்தலாம் என்பது குறித்து திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிடுபவர்களுக்காக சில யோசனைகள்:

* இதுவரை பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் சேமித்து வந்தவர்கள் அதைத் தொடர்வது நல்லது. இதில் அதிக அளவு பணத்தை சேமிக்க முடியா விட்டாலும், அக்கவுன்ட்டை உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.500 வீதம் சேமித்து வந்தாலே போதும்.

* செல்வமகள் சேமிப்புத் திட்டத்திலும் வருடத்திற்கு ரூ. 250 சேமிப்பது நல்லது. பாதியில் நிறுத்த இயலாத இந்தக் கணக்குகளில் வருடத்திற்கு ஒரு குறைந்த தொகையாவது கட்டவில்லை எனில், அபராதம் கட்ட நேரிடும். மேலும், இந்த இரண்டு முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும், கடைசியில் வெளிவரும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிப்பு கிடையாது (இன்று வரை).

வரி சேமிப்பு

* இ.எல்.எஸ்.எஸ். முதலீடுகளைத் தொடர்வது நம் முதலீட்டுக்கு பல்வகைப்படுத்துதலைத் தருவதுடன், சந்தை தரக்கூடிய உயர் வருமானத்தையும் தரவல்லது. இதன் லாக்-இன் பீரியட் மூன்று வருடங்கள் மட்டுமே. இதில் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. மேலும் இதில் கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்திற்கு ரூ.1 லட்சம் வரை வரிவிதிப்பு இல்லை.

* வரிவிலக்கு இல்லை என்றாலும் மெடிக்கல் இன்ஷுரன்சைத் தொடர்வது நமது முதலீட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இதுவரை முதலீடு செய்த எண்டோமென்ட் பாலிசி, யூலிப் பாலிசி போன்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் ஏஜன்ட் உதவியுடன் பரிசீலித்து, அதிக நஷ்டமின்றி வெளியேறக் கூடிய பாலிசிகளை சரண்டர் செய்யலாம். அவற்றுக்கு பதில், டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுப்பது குறைந்த செலவில் அதிக கவரேஜ் பெற உதவும்.

* நேஷனல் பென்ஷன் ஸ்கீம் டயர் 2 திட்டத்தில் வட்டிக்கு மட்டுமல்லாது, வெளிவரும் மொத்தத் தொகைக்கும் வரிப் பிடித்தம் உண்டு என்பதால் இதில் வரிச்சலுகைக்காக ரூ.50,000 சேமித்து வருபவர்கள் இதில் இருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கலாம்.

சேமிப்பு

க்ரிசில் நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி, “புதிய வரித்திட்டத்தால் மக்களின் சேமிப்பு குறையாது; மூலதனச் சந்தைகளை (Capital Markets) நோக்கி திசை திரும்பும்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இது வரவேற்கக்கூடியதே.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மக்களின் முதலீடுகளைத் திசை திருப்ப அரசு விழைவதில் தவறில்லை; ஆனால், அந்த திசையில் செலுத்தப்படும் மக்களின் கடின உழைப்பில் விளைந்த பணம் பத்திரமாக இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.