கடந்த திங்கட்கிழமை அதிகாலை நான்கரை மணிக்கு துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கஸியாண்டெப் நகரத்தில், நிலத்திலிருந்து 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு மாவட்டமான எல்பிஸ்டானில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இவை இரண்டுமே ஒரே நிகழ்வின் அங்கங்கள்தான் என்று நிலம்சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்போதுவரை அந்த நிகழ்வின் பின்விளைவாகச் சிறிதும் பெரிதுமாக 650க்கும் மேற்பட்ட குறு நிலநடுக்கங்கள், நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றை ‘Aftershocks’ என்று அழைப்பார்கள்.

இதுவரை நிலநடுக்கத்தால் சிரியாவில் 3,377 பேரும் துருக்கியில் 17,674 பேரும் உயிரிழந்திருக்கின்றனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 21,000-க்கும் அதிகமாக இருக்கிறது. 28,000 பேருக்கு மேல் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Turkey – Syria Earthquake

நிலநடுக்க பாதிப்பால் துருக்கியில் மொத்தம் 3000 கட்டடங்கள் சேதமடைந்திருக்கின்றன. இவற்றில் பொது மருத்துவமனைகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க மரபுசார் கட்டுமானங்களும் உண்டு. ஒரு இடத்தில் பதினான்கு மாடிக் கட்டடம் ஒன்று அப்படியே இடிந்ததில் உள்ளே இருந்த 92 பேர் உடனடியாக உயிரிழந்திருக்கின்றனர். துருக்கியின் சமகால வரலாற்றில் மிகப்பெரிய துயர சம்பவமாக இது மாறியிருக்கிறது.

இவ்வளவு பெரிய நிலநடுக்கம், இத்தனை உயிரிழப்புகள் ஆகியவை ஏற்பட என்ன காரணம்?

பூமியின் மேற்பரப்பில் பல டெக்டானிக் தகடுகள் இருக்கின்றன என்று படித்திருப்போம். அனடோலியன் தகடு, அரேபியத் தகடு மற்றும் ஆப்பிரிக்கத் தகடு ஆகிய மூன்று தகடுகள் சந்திக்கும் இடமாகத் துருக்கி இருக்கிறது. துருக்கியின் பெரும்பாலான நிலப்பரப்பு வடக்கு அனடோலியன் விளம்பு மற்றும் கிழக்கு அனடோலியன் விளிம்பு ஆகியவற்றுக்கு நடுவில் இருக்கிறது. விளிம்புப்பகுதிகள் Fault lines என்று அழைக்கப்படுகின்றன. இவை அடிப்படையில் பலவீனமானவை. இங்கு எப்போதுமே ஏதாவது ஒரு மாற்றம் நடந்தபடியே இருக்கும். அருகருகே இருக்கும் தகடுகளின் நகர்வு மற்றும் உராய்தலால் விளிம்புப்பகுதிகள் தொடர்ந்து மாறுபடும். விளிம்புப்பகுதிகளில் நிலையற்ற தன்மை அதிகம் என்பதால் இங்கு நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நடக்கவும் அதிகமான வாய்ப்பு உண்டு.

Turkey – Syria Earthquake

இதைத் தவிர துருக்கியின் நிலப்பகுதியில் வேறொரு நிகழ்வும் நடந்துகொண்டிருக்கிறது. அரேபியத் தகடு துருக்கியை மேற்கு நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துருக்கியின் மொத்த நிலப்பரப்பும் மேற்கு திசையை நோக்கி 2 செண்டிமீட்டர் நகர்கிறது. விளிம்புப்பகுதிகள் அதிகம் இருப்பதாலும் தொடர்ந்து வரக்கூடிய மேற்கு நோக்கிய அழுத்து விசையாலும் துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்தன. துருக்கி நிலப்பரப்பு நிலநடுக்கம் ஏற்படக்கூடிய Active Earthquake Zone பகுதி என்று முன்பே நில வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

Active Zone வகை இடங்களில் தொடர்ந்து பேரிடர்கள் வரும் என்று இதைப் புரிந்துகொள்ள முடியாது.

‘பதற்றமான சூழல்’ என்று சொல்வார்கள் இல்லையா? அதைப் போலத்தான் இதுவும். ஏற்கெனவே பதற்றம் நிலவும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வரலாம் என்பதைப் போல, ஏற்கெனவே தகடுகள் ஒன்றோடொன்று உரசி இடித்துக்கொண்டு இருக்கும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் எல்லா நிலநடுக்கங்களும் தீவிரமானவையாக ஆயிரக்கணக்கானோரைப் பலி வாங்கும் என்றும் சொல்லிவிட முடியாது. நிலநடுக்கத்தின் தீவிரமும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பல காரணங்களைப் பொறுத்து மாறுபடும்.

துருக்கியின் நிலத்திலேயே இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் புதைந்து பல ஆண்டுகளாகக் காத்துக் கிடந்திருக்கின்றன. அவை எல்லாம் ஒத்திசைவாக வீறு கொண்டு எழுந்ததில் பெரிய அளவிலான, அதிக ஆற்றல் கொண்ட ஒரு நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது.

நிலநடுக்கத்தால் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பது அந்த சூழலைப் பொறுத்து மாறுபடும். அதிகாலை நான்கரை மணிக்கு துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் எல்லாரும் வீட்டுக்குள் இருப்பார்கள், தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஆகவே அதிர்வுகளை உணர்ந்து வெளியேறுவதற்கு முன்னதாகவே பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள்.

Turkey – Syria Earthquake

“அது மட்டும் காரணமல்ல” என்கிறார் அர்ஸு அர்ஸ்லான் கெலாம். 2022ல் வந்த ஒரு ஆய்வறிக்கையில், ரிக்டர் அளவில் 6.5 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டால்கூட கஸியாண்டெப் நகரில் கடுமையான பாதிப்பு இருக்கும் என்று இவர் கணித்திருக்கிறார். எளிதில் நொறுங்கக்கூடிய தரக்குறைவான செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இங்கு அதிகமாக இருப்பதாகவும், சரியான திட்டமிடல் இன்றி அவை மிகவும் நெருக்கமாகக் கட்டப்பட்டிருப்பதாகவும், இந்தக் காரணிகள் பாதிப்பை அதிகரிக்கும் என்று அவர் கணித்திருந்தார். அவரது ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது ஏற்பட்ட 7.8 நிலநடுக்கம் ஏன் இத்தனை பேரைப் பலிவாங்கியது என்று எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உயிரிழப்புக்கு மற்றொரு காரணத்தை முன்வைக்கிறார் பேரிடர் ஆராய்ச்சியாளர் ராஸ் ஸ்டீன். “1999ம் ஆண்டு துருக்கியின் இஸ்மிட்டில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அடுத்த சில ஆண்டுகளிலேயே கட்டுமானங்களுக்கான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. பெரிய அளவிலான நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய அளவில் கட்டடங்களைத் தயார் செய்வதற்குப் பல விதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் பல இடங்களில் அவை பின்பற்றப்படுவதில்லை. அதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். எளிதில் ஏமாற்றுகிறார்கள். இப்போது இடிந்த கட்டடங்கள் பழையனவா அல்லது இப்படி ஏமாற்றிக் கட்டப்பட்டவையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.

வேறு சில வல்லுநர்களோ, இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டடங்கள் 2000க்கு முன்பு கட்டப்பட்டவை என்றும், நிலநடுக்க பாதிப்பு பற்றிய புரிதல் இல்லாத காலகட்டத்தில் அவை மோசமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.

Turkey – Syria Earthquake

சிரியாவில் ஏற்பட்ட இழப்புகளுக்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அங்குத் தொடர்ந்து நடந்துவரும் மோதல்களால், கையில் எது கிடைக்கிறதோ அதை வைத்து ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கடியான சூழலில் பலர் வசித்திருக்கின்றனர். அது நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாள், நேரம், இடம், அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அப்படியே நாம் கணித்தாலும் உடனடியாக எல்லாரையும் இடம் பெயர்த்துக் காப்பாற்றிவிட முடியாது. ஆகவே, ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள அபாயகரமான இடங்களில் கட்டுமானம் உட்பட எல்லாவற்றையுமே பேரிடரை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் ஒரு தயார்நிலையில் வைப்பது மட்டுமே நம்மால் முடிந்தது. உயிரிழப்புகளைக் குறைக்கவும் தடுக்கவும் நமக்கு இருக்கும் ஒரே வழி அதுதான்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.