பங்குகளின் விலையை உயர்த்தி காண்பிக்க அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, அரசியல் வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் அனலைக் கிளப்பியது. பிரதமர் மோடியையும் தொழிலதிபர் அதானியையும் தொடர்புபடுத்தி நாடாளுமன்றத்தில் அதிரடியான பல கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எழுப்பினார்.

மோடி

 “நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றபோது, எத்தனை முறை உங்களை அதானி சந்தித்திருப்பார்… வெளிநாடுகளில் நீங்கள் இருந்தபோது, ஒப்பந்தங்களைப் பேசி முடிப்பதற்காக எத்தனை முறை அதானி அந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பார்… கடந்த
20 ஆண்டுகளில், தேர்தல் பத்திரங்கள் உட்பட பா.ஜ.க-வுக்கு கௌதம் அதானி நன்கொடையாக அளித்த பணம் எவ்வளவு?” என்று ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பினார்.

ராகுல் பேசியபோது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘மலிவான குற்றச்சாட்டுகளைக் கூறாதீர்கள். அதற்கு ஆதாரங்களைக் காட்டுங்கள்’ என்றார். அப்போது, அதானியின் விமானத்தில் பிரதமர் மோடியும் கௌதம் அதானியும் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ராகுல் காந்தி காண்பித்தார். அதற்கு, சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

கௌதம் அதானி

ராகுல் காந்தியின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றார், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி. அதையடுத்து, ராகுல் காந்தி பேச்சின் சில பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது, அதானி என்ற பெயரை ஒரு தடவைகூட அவர் உச்சரிக்கவில்லை. மாறாக, அதானி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், வேறு பல விஷயங்கள் குறித்தே மோடி பேசினார். ‘நான், 140 கோடி மக்களைக் கொண்ட குடும்பத்தில் ஒருவன். எதிர்க் கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றிலிருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை இருக்கிறது’ என்றார் மோடி.

மோடி

மேலும், அமலாக்கத்துறை சோதனைகளையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் இணைத்து ஒரு விஷயத்தை மோடி குறிப்பிட்டார். ‘அடிக்கடி தேர்தல் தோல்விகளைச் சந்தித்தபோதும் ஒன்றுசேராத எதிர்க்கட்சிகள், இப்போது ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு கைகோத்துள்ளன. தங்களை ஒற்றுமைப்படுத்தி அமலாக்கத்துறைக்குத்தான் அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார் பிரதமர். தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் நலன்களுக்காக மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது என்றும் மோடி கூறினார்.

மாநிலங்களவையில் பிப்ரவரி 9-ம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் மோடி, ‘பிரிவு 256-ஐ பயன்படுத்தி 90 முறை மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்திருக்கிறது. கருணாநிதி ஆட்சியும் எம்.ஜி.ஆர் ஆட்சியும் காங்கிரஸ் கட்சியால் கலைக்கப்பட்டன. தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாமா…’ என்றார்.

அதானி – மோடி

ஆக மொத்தத்தில் அதானி பற்றிய எந்த கேள்விக்கும் மோடியிடம் பதில் இல்லை. பிரச்னையின் மையப்புள்ளியான அதானி விவகாரம் குறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் பேசவில்லை. ‘நான் ஒன்றும் சிக்கலான கேள்வி எதையும் கேட்கவில்லை. எத்தனை முறை உங்களுடன் அதானி பயணம் செய்தார் என்பது போன்ற எளிமையான கேள்விகளைத்தான் கேட்டேன். அதானி குறித்து நான் எழுப்பிய எந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. மோடி அதிர்ச்சியில் இருக்கிறார்’ என்றார் ராகுல் காந்தி.

மோடியும் அதானியும் நண்பர்கள் என்பது உலகம் அறிந்த செய்தி. அப்படிப்பட்ட நண்பருக்கு எதிராக பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அது பற்றி பதில் சொல்வதற்கு பிரதமருக்கு சில சங்கடங்கள் இருக்கலாம். அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால், அந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே தயங்கும் பா.ஜ.க அரசு, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு எப்படி உத்தரவிடும்?

ராகுல் காந்தி, அதானி – மோடி

‘அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் பிரதமரால் கூற முடியாது. அப்படிச் சொன்னால் அவர் சிக்கிக்கொள்வார். ஏனென்றால், அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துத்தான் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவேதான், இந்தப் பிரச்னைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையெல்லாம் நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசுகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.