ராமநாதபுரத்தில் ‘முகவை சங்கமம்’ என்ற பெயரில் பிரமாண்ட புத்தகத் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் சார்பில் இந்த 5-வது புத்தகத் திருவிழாவானது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதிவரை இந்தப் புத்தகத் திருவிழாவானது நடைபெற உள்ளது.

விகடன் புத்தக அரங்கில் மாவட்ட ஆட்சியர்

புத்தகத் திருவிழாவில் 114 புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், நடமாடும் நூலகம், கோளரங்கம், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவகம் எனப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, காந்தியம், இந்திய அரசியலமைப்பு, சட்டம், கம்பன் புதிய பார்வை, சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு, விவசாயம், உணவு சார்ந்த புத்தகங்கள் என ரூ.10 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள், அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கான நூல்கள், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். தேர்வுக்கான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் 50,000 எழுத்தாளர்கள் எழுதிய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்குக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினோம். “ராமநாதபுரத்தில் தனியார் அமைப்பினர் சார்பில் சிறிய அளவிலான புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும். அதில் நாங்கள் நினைத்த எழுத்தாளர்கள் பலரது புத்தகங்கள் கிடைக்காது.

ஆனால் அரசு சார்பில் திறக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில் நாங்கள் எதிர்பார்த்த மற்றும் புதிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களையும் தேடித் தேடி வாங்கி வருகிறோம். இந்தப் புத்தகக் கண்காட்சியானது புத்தக வெளியீட்டாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்

கொரோனா காலத்தில் அரசே பள்ளிகளை ஆன்லைனில்தான் நடத்தியது. இதனால் ஆன்லைன் தேவையும் அவசியமாக இருந்தது. ஆனால் புத்தகத்தைக் கையில் பிடித்துப் பயில்வது போல் மனநிறைவையும், உணர்வையும் ஆன்லைனில் படிப்பது தராது. புத்தகத்தில் படிக்கும் கருத்துக்கள் ஆழ்மனதில் நிலை கொள்ளும். எனவே புத்தகம் வாயிலாகப் பயில்வதுதான் சிறந்த நிலையாக இருக்கும்” எனக் கூறினர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுவதால், மீண்டும் இதுபோன்ற புத்தகத் திருவிழா இனி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நடக்குமோ என எண்ணி இப்போதே தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்க ஆயிரக்கணக்கில் வாசகர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்தப் புத்தகத் திருவிழாவில் அனைத்து நூல்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள், சிறுவர்களுக்கான புத்தகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், “வரலாற்றுக் காலம் முதல் வாழும் காலம் வரை மனித வாழ்வை மேம்படுத்த உதவி வருவது புத்தகம் என்றால் அது மிகை ஆகாது. புத்தகம் ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் கட்டாயம் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இளைஞர்களிடம் வாசிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புத்தகத் திருவிழா ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் உண்டியல் வழங்கப்பட்டுச் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கியுள்ளோம்.

புத்தகத் திருவிழாவிற்கு படையெடுக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்

அதன்படி தாங்கள் சேமித்த பணத்தில் தங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கி படித்து தங்கள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி ஒரு மாதக் காலத்திற்கு மாவட்டம் முழுவதும் நடமாடும் நூலக பேருந்து இயக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த மாவட்டமாகும். மாணவர்களின் கனவு நாயகரான முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த பூமி இது. இங்கு இந்தப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு இருப்பது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவை நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.