தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் ஹெல்மெட் அணிந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில்லா சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலரையும் கவர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது போன்றவை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டும் மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, வட்டார போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பில் விபத்தில்லா சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஹெல்மெட் அணிந்து கொண்டு ராயல் என்பீல்ட் பைக்கை ஓட்டிச் சென்றார். ஆட்சியர் முன்னே செல்ல அவரை தொடர்ந்து மற்றவர்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஏழு கிலோ மீட்டர் வரை பைக் ஓட்டி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வில் மாவட்ட ஆட்சியர்

இது குறித்துப் பேசிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “பொதுமக்கள் சாலை விதிமுறைகள் அனைத்தையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தஞ்சாவூரில் உள்ள அனைத்து சாலைகளும் வேகத்தடை உள்ளிட்ட நூறு சதவிகித வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைத்தல், கால்நடைகள் சுற்றித் திரியாமல் தடுத்தல் உள்ளிட்ட அனைத்தும் செய்து முன்னுதாரண சாலையாக மாற்றப்பட உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து வாகனங்களை ஓட்டினால் விபத்துகள் நடக்காது. அதே போல் ஹெல்மெட் அணிந்து செல்வதும் அவசியம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.