எந்த விருந்தையும் ஸ்பெஷலாக்குவதில் உருளைக்கிழங்கு உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. உருளைக்கிழங்கு காரக்கறி, உருளை மசாலா, உருளை குருமா…. இதைவிட்டால் உருளைக்கிழங்கில் வித்தியாசமாக வேறு என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு, இதோ வெரைட்டியான ரெசிப்பீஸ்… இந்த வார வீக் எண்டை ‘பொட்டேட்டோ ஸ்பெஷலாக’ மாற்றுங்கள்.

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 2

சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

முந்திரி – 6

திராட்சை – 5

இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன்

பால் – கால் கப்

உருளைக்கிழங்கு அல்வா | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி துருவி வைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும். பிறகு மீண்டும் சிறிதளவு நெய்விட்டு சூடானதும் துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். பால் நன்கு சுண்டியதும் தீயைக் குறைத்து வைத்து, சர்க்கரை மற்றும் கோவாவை உதிர்த்து சேர்த்து நன்றாகக் கிளறவும். சேர்ந்து திரண்டு வரும்போது மீதமுள்ள நெய்யை ஊற்றி, வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறவும்.

உருளைக்கிழங்கு டோனட்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – ஒன்று

டோனட் பன் அல்லது சாதா பன் – ஒன்று

சர்க்கரை – ஒரு டேபிள்பூன்

பட்டைத்தூள் – ஒரு சிட்டிகை

கண்டென்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன்

உருளைக்கிழங்கு டோனட் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கண்டென்ஸ்டு மில்க், பட்டைத்தூள், சர்க்கரை சேர்த்து க்ரீம் போல் கலக்கவும். ஒரு டோனட் பன் அல்லது சாதா பன் எடுத்து அதில் நடுவில் ஓட்டை போட்டுக்கொள்ளவும். பின்னர் 10 நொடி அவனில் (oven) வைத்து எடுக்கவும். பின்னர் க்ரீம் போல செய்த உருளைக்கிழங்கு கலவையை அதன் மேல்புறத்தில் பிசிறு இல்லாமல் தடவி, தேவைப்பட்டால் சர்க்கரை தூவிப் பரிமாறவும்.

பன்னின் மேல் சாக்லேட் சிரப், ஃப்ரெஷ் க்ரீம், பொடித்த நட்ஸ் என எது வேண்டுமானாலும் சேர்த்துப் பரிமாறலாம். இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஹனி உருளைக்கிழங்கு நக்கட்ஸ்

தேவையானவை:

உருளைக்கிழங்கு – கால் கிலோ

மைதா மாவு – கால் கப்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – கால் கப்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

பிரெட் தூள் – அரை கப்

தேன் – 3 டேபிள்ஸ்பூன்

வறுத்த எள் – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

ரீஃபைண்ட் ஆயில் – தேவையான அளவு

ஹனி உருளைக்கிழங்கு நக்கட்ஸ் | வீக் எண்டு ரெசிப்பீஸ்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் அதை தோலுரித்து துருவிக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் துருவிய கிழங்குடன் சிறிதளவு மைதா மாவு, கார்ன்ஃப்ளார், பிரெட் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் மைதா, 3 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார், சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்த மாவை சிறிது சிறிதாக பாப்கார்ன் அளவுக்கு கிள்ளி வைக்கவும். அதை முதலில் மைதா மாவுக் கலவையில் டிப் செய்து பிறகு பிரெட் தூளில் புரட்டவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தெடுக்கவும். பரிமாறும்போது தேவை யான அளவு தேனை பாப்கார்ன் மீது ஊற்றி, வறுத்த எள்ளைத் தூவவும். சுவையான ஸ்வீட் பொட்டேட்டோ ஹனி பாப்கார்ன் தயார்.

செஷ்வான் உருளைக்கிழங்கு அவல்

தேவையானவை

கெட்டி அவல் – 2 கப்

உருளைக்கிழங்கு – கால் கிலோ

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் ­- கால் டீஸ்பூன்

வெங்காயம் – ஒன்று

கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

ரீஃபைண்ட் ஆயில் – தேவையான அளவு

செஷ்வான் சட்னி – ­ ஒரு டேபிள்ஸ்பூன் (கடைகளில் கிடைக்கும்)

செஷ்வான் உருளைக்கிழங்கு அவல்

செய்முறை:

உருளைக்கிழங்கைத் துருவி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து அவலை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் துருவிய உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் ஊறவைத்த அவலைச் சேர்த்துக் கிளறவும். அதில் செஷ்வான் சட்னி சேர்த்து, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி, மேலும் சிறிது எண்ணெய் ஊற்றிக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். தேவைப்பட்டால் வேறு காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.