ஹிண்டன்பர்க் அறிக்கை:

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “அதானி குழுமம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம். அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது. மிக அதிக அளவில் கடன் இருக்கிறது.

ஹிண்டன்பர்க்

அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் பலமானதாகக் காட்டி, அதன் மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் பார்த்தது, வெளி நாடுகளில் ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது” என்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியது. இதையடுத்து, பங்குச்சந்தையில் அந்தக் குழுமத்தின் பங்கு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.

எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி:

இதற்கு அதானி நிறுவனம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மறுபுறம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெளனமாக இருந்து வருவதாக கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அதானி குழும பங்கு வர்த்தக மோசடி விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடங்கியது.

பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தில் கடந்த 1-ம் தேதி மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, 2-ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது காலை அவை கூடுவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில், பங்கு வர்த்தகத்தில் தொழில் அதிபர் அதானி குழும மோசடி புகார் குறித்து விவாதிக்க அனுமதி கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மக்களவை கூடியதும் காங்கிரஸ், திமுக, சிவசேனா, இடதுசாரி, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, கேரளா காங்கிரஸ், ஐயுஎம்எல் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து அதானி குழும பங்கு முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி வழங்க மறுத்தார்.

பா.ஜ.க Vs காங்கிரஸ்.

இதனால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் அவர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு பா.ஜ.க எம்.பிக்களும் கோஷம் எழுப்பியதால் உச்சக்கட்ட கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே நிலை நீடித்தது. மல்லிகார்ஜூன கார்கே, சிவசேனா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி சஞ்சய் சிங் உள்ளிட்ட 9 எம்.பிக்கள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க விதி எண் 267-ன்கீழ் நோட்டீஸ் கொடுத்தனர்.

அப்போது, “வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு அதானி விவகாரம் குறித்தும், அவரின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் நிலை குறித்தும், பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ள எல்ஐசி பணம் குறித்தும் விவாதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர். இந்த நோட்டீசை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெக்தீப் தன்கர் நிராகரித்தார். நோட்டீஸ்கள் முறைப்படி வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இதனால் எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கம் எழுப்பினர்.

சரிவில் அதானி

மேலும் அவர்கள், “அதானி முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற நேரடி கண்காணிப்பு அடிப்படையில் தினசரி விசாரணை நடத்த வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர். இதை தன்கர் ஏற்கவில்லை. இதனால் மாநிலங்களவை முதலில் 2 மணி வரையும், அதை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3-ம் தேதியும் இந்த பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. எனவே இதனால் ஏற்பட்டிருக்கும் அரசியல் தாக்கங்கள் என்னென்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “எஸ்பிஐ, எல்ஐசி மாதிரியான பொதுத்துறை நிறுவனங்களில் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் நம்பி முதலீடு செய்திருக்கிறார்கள். ஆனால் இதைபற்றியெல்லாம் யோசிக்காமல் மோடி அரசின் அழுத்தத்திற்கு உட்பட்டு அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது. நேற்று ஓரே நாளில் மட்டும் ரூ.30,000 கோடி இழப்பை எல்ஐசி சந்தித்திருக்கிறது.

ஜோதிமணி

துறைமுகங்கள், விமான நிலையங்கள் என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, 50 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து கட்டமைப்புகளையும் அதானி கையில் கொடுத்திருக்கிறார்கள். நரேந்திர மோடியின் நண்பர் என்ற ஒரே காரணத்துக்காக அவரின் நேரடி தலையீட்டில் தான் இதெல்லாம் நடந்திருக்க முடியும்.

இலங்கையில் மின்சார ஒப்பந்தங்களை அதானிக்கு வழங்க கோரி நரேந்திர மோடியே நேரடியாக வற்புறுத்தினார் என்று அந்த நாட்டின் மின்சாரத்துறை தலைவர் சொன்னதை நாம் பார்த்தோம். பக்கத்து நாட்டுக்கு சென்று அதானிக்கு தான் வழங்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் இந்தியாவில் எப்படி சொல்லாமல் இருந்திருப்பார். எப்படி ஒரு தனி நபரின் நிறுவனம் இப்படி பணத்தை குவிக்க முடியும். கடந்த ஆண்டில் ஒரு நாளைக்கு ரூ.1,650 கோடியை அதானி நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. ரூ.600 கூட சாதாரண பொதுமக்களால் முதலீடு செய்ய முடியாமல் பொருளாதார மந்த நிலை இருக்கிறது.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு அதானியின் வளர்ச்சி சினிமா படங்களில் வருவது போல் இருக்கிறது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கையை இந்தியாவில் வர விடாமல் தடுத்தனர். ஆனால் உலக மீடியாக்களால் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பங்கு சந்தையில் ரத்த ஆறு ஓடுகிறது. முதலீடு என்ன ஆகும்?, பொதுத்துறை நிறுவனங்களின் கதி என்ன?, பொருளாதாரத்தின் நிலை என்ன? என்பது குறித்து தெரியவில்லை. எனவே தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூட்டு குழு விசாரணை வேண்டும் என கேட்கிறோம். நரேந்திர மோடி தப்பு செய்யவில்லை என்றால் விசாரணை குழு அமைக்க வேண்டியது தானே.

எனவே தான் அதானி ஊழலில் நரேந்திர மோடிக்கும், பாஜக-வுக்கும் நேரடியாக பங்கு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. இந்திய வரலாற்றில் நடந்திருக்கும் மிகப்பெரிய ஊழல் இது. கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசி-யில் பாலிசி எடுத்திருக்கிறார்கள். `வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்’ என தான் எல்ஐசியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது எல்ஐசி மூழ்கி விட்டால் அதில் பாலிசி எடுத்தவர்களின் நிலை என்ன ஆகும்?.

எஸ்பிஐ மூழ்கி விட்டால் என்ன செய்வது?. ஏற்கெனவே ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தின் வாழ்வாதாரம் நரேந்திர மோடி ஆட்சியில் துயரத்தை எதிர் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட மக்களின் ஆண்டாண்டு காலமான ரத்தமும், வியர்வையும் அதானி என்ற ஒரு தனி நபரால் வீணாவதை எப்படி கேட்காமல் இருக்க முடியும். இதை ராகுல் காந்தி தொடர்ந்து சொல்லி வருகிறார். தற்போது இது நிரூபணம் ஆகியிருக்கிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.