வேலூரில் இரண்டு நாள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டுவிட்டு இன்றிரவு 7 மணியளவில், தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரயில், காட்பாடியை அடுத்துள்ள திருவலம்-முகுந்தராயபுரம் இடையே சென்றபோது, அதில் பயணித்த பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்திருக்கிறார். இதனால், ரயில் நிறுத்தப்பட்டது. முதலமைச்சரின் பாதுகாவலர்கள் என்னமோ, ஏதோவென்று உஷாராகினர். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படையினரும், முதலமைச்சரின் பாதுகாவலர்களும் விரைந்துச் சென்று, அபாய சங்கிலியை இழுத்தப் பெண்ணைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அந்தப் பெண், தனது லக்கேஜை எடுக்கும்போது, தவறுதலாக பிடித்து இழுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், பின்னணி என்ன? போன்ற தகவல்களையும், அவர் பயணித்த பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் குறித்தும் உடனடியாக விசாரித்தபோது, அவர் உண்மையிலேயே தவறுதலாகத்தான் பிடித்து இழுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது. இதையடுத்து, 7 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது. அபாய சங்கிலியை இழுத்தப் பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அவரை காவலர்கள் விடுவித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதலமைச்சரும் பாதுகாப்பாக சென்னை சென்றடைந்திருக்கிறார். இந்தச் சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.