“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தெருத் தெருவாகச் சென்று மக்களை சந்திப்பது தான் எனது அணுகுமுறையாக இருக்கும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நாம் தமிழர் கட்சியின் பணிமனையை திறந்து வைத்து, நாதக வேட்பாளர் மேனகாவை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “வரும் இரண்டாம் தேதி எங்கள் வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். மாற்றத்தை மக்கள் விரும்பினால் அதை நோக்கிய பயணம் தான் எங்களுடையது. அதுவே எங்கள் தத்துவ நிலைபாடு.

அவர்கள் (பிற கட்சிகள்) காசுகளை கொட்டுவார்கள். ஆனால் நாங்கள் உயர்ந்த கருத்தை வைப்போம். அவர்கள் கோடிகளை கொட்டுவார்கள். நாங்களோ உயர்ந்த கொள்கையை முன் வைப்போம். வாக்கிற்கு கையேந்தும் நிலையில் தான் என் மக்களை வைத்திருக்கிறார்கள் அவர்கள். அதேநேரம், அவர்கள் கொடுப்பதால் தான் மக்கள் பணம் வாங்குகிறார்கள்.

image

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறும் என்பது மாயை. மக்கள் மாற்றத்தை விரும்பினால் ஆளுங்கட்சியாவது எதிர்கட்சியாவது! அனைத்தையும் புரட்டி போட்டுவிடுவார்கள் மக்கள். மக்களுக்கு தேடல் தேவைப்படுகிறது. இந்த 5 ஆண்டுகளுக்குள், தன் தலைவனை மக்கள் தேடவேண்டும். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக தான் நாம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து விட்டோம்.  இத்தேர்தலில் நாங்கள் மக்களிடையே அந்த உண்மையை பேசுவோம்.

கடந்த முறை 34 சதவீத வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. அவ்வாறு அவர்கள் விலகி இருக்கக்கூடாது. கடந்த முறை 234 தொகுதியில் ஒரு தொகுதி இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பதால் இங்கு ஒருநாள்தான் வேலை செய்தேன். இம்முறை இங்கு 12 நாட்களுக்கு மேல் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். வட மாநிலத்தவர்கள் தமிழ் இளைஞர்களை தாக்கியதை இவர்களால் (ஆட்சியாளர்களை குறிப்பிட்டு) தடுக்கமுடியாது. என்னால் மட்டுமே அது முடியும். அதற்கு எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும்.

இலவசத்தால், மக்கள் மத்தியில் உழைக்கின்ற மனப்பக்குவம் இல்லாமல் போய்விட்டது. நூறு நாள் வேலை திட்டம், வேளாண்மையை விட்டு வெளியேற்றிவிட்டது. வட மாநிலத்தவர்களை வெளியேற்ற நாம் இங்கு வேலை செய்ய வேண்டும். பான்மசாலா, குட்காவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அது நீதிமன்றம் இல்லை. தீர்ப்பு மன்றம் தான்” என்றார் காட்டமாக.

image

தொடர்ந்து அவரிடம், இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என கேட்டதற்கு… “இடைத்தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு. நாங்கள் வென்றால் மாற்றம் வரும். புரட்சி வரும். யாருடைய வாக்கையும் பிரிக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் வெல்லவேண்டும் என்றே நினைக்கிறோம். மக்களுக்கு தூய அரசியலை தரவேண்டும். இத்தேர்தலுக்காக தெருத் தெருவாக சுற்றி, மக்களை சந்திப்பது தான் எனது அணுகுமுறையாக இருக்கும். பறக்கும் படை நடந்து செல்பவர்களிடம் பணத்தை பிடிக்குமே தவிர வாக்குக்கு பணம் கொடுப்பவர்களை அனுமதிக்கும். தேர்தல் ஆணையம் நாடக கம்பெனி. பணம் கொடுப்பார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காது.

நான் மக்களிடம் மாற்றத்தை கொடுக்க வந்தவனே தவிர, ஏமாற்றத்தை கொடுக்க வந்தவன் இல்லை. இந்த தொகுதியில் வென்றால் மாறுதலுக்கான விதை விழும். புதிய அரசியல் ஆற்றல் பிறக்கும். தேர்தல் பணிக்குழுவில் 60-க்கும் மேற்பட்டவர்களை நியமித்துள்ளோம். 238 வாக்குச்சாவடிக்கு ஒருவர் என்ற முறையில் போடவுள்ளோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மேனகா நிறுத்தப்பட்டுள்ளார். மொழிப்பற்று, இனப்பற்று ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளோம். கடுமையான உழைப்பை கொட்டுவோம். பணம் இல்லாதது எங்கள் பலவீனம். ஆனால் கடுமையான உழைப்பு தான் எங்கள் பலம். எங்கள் பலத்தை பிரயோகித்து, வேட்பாளரை வெற்றி பெற வைப்போம்” என்றார்.

பிபிசி ஆவணப்படம் பற்றி பேசுகையில், “கேரளாவில் ஆவணப்படத்தை அரசே வெளியிடுகிறது. தமிழகத்தில் அலைபேசியில் பார்ப்பவர்களை கைது செய்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.