சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மதுரை திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கூட்டம் கடந்த ஜனவரி 28ம் தேதி நடைபெற்றது. இதில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.

அப்போது மேடையில் டி.ஆர்.பாலு கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை இடித்தது குறித்து பேசிய வீடியோவின் சிறு பகுதியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.


அதில், “நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயில்களை இடித்தேன்” என டி.ஆர்.பாலு பேசிய தொகுப்பின் 40 நொடிகள் கொண்ட வீடியோவை மட்டும் கத்தரித்து பாஜகவினர் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக்கியிருக்கிறார்கள்.

இதற்கு பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜாவும், “இந்த சமூக விரோதியை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “100 ஆண்டு பழைய கோயில்களை இடித்ததை பெருமையாக கூறுகிறார், இதற்குதான் இந்து அறநிலையத்துறையே இருக்கக் கூடாது என்று கேட்கிறோம்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.


விஷயம் இப்படியாக இருக்க, டி.ஆர்.பாலு பேசிய முழு வீடியோவையும் இதனூடே பகிரப்பட்டு வருகிறது. அதில், “நான்கு வழி சாலை அமைக்கும் நேரத்தில் 100 வருஷ கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளெல்லாம் இடித்திருக்கிறேன். அப்போது மக்களெல்லாம் வந்து கேட்டார்கள். அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதி பாசு அழைத்து, ‘வாக்கு வங்கி பாதிக்கும். மத நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கிறது. இப்படிலாம் செய்யுறது சரியா?’ என என்னிடம் கேட்டார்.

அப்போது, எங்கள் ஊரில் என்னுடைய தொகுதியிலேயே சரஸ்வதி, லஷ்மி, பார்வதி என GST சாலையில் இருந்த கோயில்களை இடித்தேன். எனக்கு வாக்கு வராது என்று தெரிந்தும், என்னுடைய கட்சியினர் பலர் அறிவுறுத்தியும் கேட்கவில்லை. ஆனால் அதைவிடவே பிரமாண்டமாக, நூற்றுக்கணக்கானோர் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கான பெரிய கோயிலையே கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் ராமேஸ்வரம் கோயிலில் இருந்த சிவ, சத்திய அமிர்தம் மற்றும் சர்வ தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தக் கிணறுகளையும் முதல் பிரகாரத்திலிருந்து இரண்டாவது பிரகாரத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். இதை மாற்றுவதற்கு பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ எந்த கருத்தும் கேட்கப்படவில்லை” என சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலு.

இப்படியாக அவருடைய முழுமையான வீடியோவில் அவர் பேசியுள்ள நிலையில், அதில் சிறு பகுதி மட்டும் சிலரால் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருவது, கண்டனத்துக்குள்ளாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.