பல்வேறு வகை – பட்ஜெட்கள்   

குடும்ப வரவு – செலவு பட்ஜெட் போடுவது என்பது தேவையான ஒரு பழக்கம். ஆனால் பலரும் கடைபிடிக்காததாகும். அதிகம் சம்பாதிக்கும் இன்றும் பலர் ஏழையாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்யாததுதான் முக்கிய காரணமாக இருக்கும்.

குடும்ப பட்ஜெட்

50:30:20 விதிமுறை..

சம்பளம் அல்லது சம்பாத்தியத்தை சரியாக பயன்படுத்த 50:30:20 என்கிற விதிமுறையை பயன்படுத்த வேண்டும்.

வருமானத்தில் 50 சதவிகித தொகையை அவசியமான (Necessities) வீட்டுத் தேவைக்காக செலவிட வேண்டும். உதாரணமாக, வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகை பொருள்கள், பால், அலுவலகம் சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவை அவசியமான செலவுகளாகும்.

சம்பளத்தில் 30 சதவிகித தொகையை வெளியில் சென்று சாப்பிடுவது, திரையரங்குக்கு படம் பார்க்க செல்வது, வாரக் கடையில் எங்காவது சுற்றச் செல்லும் பொழுதுபோக்கு செலவு என விரும்பத்துக்கு (Wants) செலவிடலாம்.. 

சம்பாத்தியத்தில் 20 சதவிகித தொகையை எதிர்கால தேவைக்கான சேமிப்பு மற்றும் முதலீட்டை (Savings and Investments) மேற்கொள்ள பயன்படுத்த வேண்டும்.

ஆர். வெங்கடேஷ், நிறுவனர்
www.gururamfinancialservices.com

20:50:30 விதிமுறை அல்லது 30:50:20..!

மாத சம்பளத்தில் செலவுகள் போக மீதியை சேமிப்பதை நிறுத்திவிட்டு, சேமித்து வைப்பதற்கென ஒரு பகுதியை முதலில் ஒதுக்கியும் பட்ஜெட் போடலாம். அந்த விதிமுறையை 20:50:30 என மாற்றிக் கொள்ளலாம். அதாவது, சம்பளத்தில் 20 சதவிகிதத்தை முதலில் சேமிப்புக்காக எடுத்து வைத்துவிட வேண்டும். மீதியை 50 சதவிகிதம் அத்தியாவசிய செலவுகள், 30 சதவிகிதம் ஆசைகளுக்கான செலவுகள் என பிரித்துக் கொள்ளலாம்.

செலவு செய்தல்…

பட்ஜெட் சிக்கலை எப்படி சமாளிக்க வேண்டும்?

குடும்ப செலவுக்கு தேவையான தொகையில் சிக்கல் ஏற்பட்டால் சேமிப்புக்கான 20 சதவிகிதத்திலிருந்து எடுத்து செலவு செய்யக் கூடாது. ஆசைக்காக ஒதுக்கி இருக்கும் 30 சதவிகித தொகையிலிருந்துதான் செலவிட வேண்டும்.

குடும்ப பட்ஜெட்டை சம்பளத்தில் 30 சதவிகித தொகை சேமிப்புக்கு 50 சதவிகித தொகை அவசியத் தேவைகளுக்கு 20 சதவிகித தொகை விருப்பப்பட்டவைகளுக்கு என மாற்றி அமைத்தால் எதிர்கால தேவைக்கான தொகுப்பு நிதி வேகமாக அதிகரித்து வரும். கொரானா பாதிப்புக்கு பிறகு சேமிப்பு அதிக தொகையை ஒதுக்க வேண்டும் என்பதை பெரும்பாலான குடும்பங்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளன. 

பட்ஜெட்டில் சேமிப்பை வங்கி அல்லது தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டம் (RD), மியூச்சுவல் ஃபண்ட் சீரான முதலீட்டுத் திட்டம்  (SIP) என ஆட்டோமேட் செய்து விட வேண்டும்.

பட்ஜெட் போட்டு செலவு செய்யும் போது தேவையில்லாத செலவுகள் தானாகவே குறையும். இதனால், அதிக பணம் மிச்சமாகும். இந்தத் தொகையையும் கூடுதலாக முதலீடு செய்வது மூலம் எதிர்காலம் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை.

 சம்பளம் அதிகரிக்கும் போது சேமிப்பு அதிகரிக்க வேண்டும்..!

சம்பளம்/ சம்பாத்தியம் அதிகரிக்க அதிகரிக்க செலவை அதிகரிக்க கூடாது. அதற்கு பதில் சேமிப்பை அதிகரிக்க வேண்டும். மாதக் குடும்பச் செலவுகள் என்பது ஓரளவுக்கு நிலையாக இருக்கும். எனவே, அதனை அப்படியே வைத்துக் கொண்டு சம்பளம் அதிகரிக்கும் போது, கூடுதலாக கையில் கிடைக்கும் தொகையை ஆசைக்கு கண்டபடி செலவு செய்வதற்கு பதில் சேமிப்பை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும்.

சேமிப்பு

எனக்கு தெரிந்து ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர் சொந்த வீட்டில் வசிக்கிறார். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்று. இந்த நிலையில் அவர் சம்பளத் தொகையில் சுமார் 80 சதவிகித தொகையை சேமிப்பு வருகிறார்.

இந்த குடும்ப பட்ஜெட் பார்முலா என்பது ஒரு பொதுவான விதிமுறையாகும். இதனை ஒவ்வொரு குடும்பமும் அதற்கு ஏற்ப சிறிது மாற்றி அமைத்து கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான 20 சதவிகித தொகையை குறைக்க கூடாது. அதனை எந்த அளவுக்கு அதிகரிக்க முடிகிறதோ அந்த அளவுக்கு அதிகரிக்கவும்.

கடன் எதுவும் இல்லாதபட்சத்தில் சம்பளம் ரூ. 50,000 -ஐ தாண்டும் போது அவசிய தேவைகளுக்கு 30 சதவிகிதம், ஆசைகளுக்கு 20 சதவிகிதம், சேமிப்பு & முதலீடுகளுக்கு  50 சதவிகிதம் என மாற்ற அமைத்துக் கொள்வது நல்லது.   

அப்படி செய்யும் போது வாழ்கையின் எந்த நிலையிலும் கடன்பட தேவையில்லை. மேலும் நிதி இலக்குகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவதோடு, வாழ்க்கையில் விரைவிலேயே செட்டில் ஆகி விடுவீர்கள்.

குடும்பத்தில் மருத்துவச் செலவுகளை கணிசமாக குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.